திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை மீட்டுத் தந்த அறிஞர். கவிதாசரணுக்கு எமது அஞ்சலி!


31, டி.கே.எஸ். நகர், திருவொற்றியூர், சென்னை-600 019 என்ற முகவரியில் உள்ள வீட்டுக்குள் நுழையும்போது, டிரெடில் எனும் அச்சு இயந்திரம், கூடத்தில் நம்மை வரவேற்கும். பக்கத்தில் உள்ள அலமாரிகளில் அச்சு எழுத்துகள் அடங்கிய பெட்டிகள். பழங்காலத்து விசுப்பலகை. ஒரு மேசை, அதன் மேல் திருத்துவதற்காகக் காத்திருக்கும் மெய்ப்புத் தாள்கள். ஏதோ, அச்சிடும் குட்டித் தொழிற்சாலைக்குள் நுழைந்துவிட்டோமோ எனும் ஐயம் வந்துவிடும். இல்லை, அதுதான் கவிதாசரண், திருமதி கவிதாசரண் வாழும் வீடு. வீட்டின் கொஞ்சம் நீண்ட பகுதியில் அச்சு இயந்திரம் இருக்க அதைச் சுற்றியே இந்த இருவரின் உறைவிடம். அந்த இயந்திரத்தில் இருவரும் அச்சுக் கோத்துதான் அவர்கள் நடத்திய ‘கவிதாசரண்’ இதழை 1991 முதல் கொண்டுவந்தனர். தொண்ணூறுகளின் இறுதியில், கணினி புழக்கத்துக்கு வந்த பின், கணிப்பொறியில் அவர்களே தட்டச்சுசெய்து, இதழைக் கொண்டுவந்தனர். ‘படைப்பிலக்கிய மாத இதழ்’ என்று தொடங்கி அவர்களது அச்சுப் பணி, பின்னர் ‘இதழாய் ஓர் இயக்கம்’ என்று மாறியது.

வடசென்னையில் 1958 முதல் கணிதம் மற்றும் ஆங்கிலம் பயிற்றும் ஆசிரியராக கவிதாசரண் தன் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்திலேயே, தன்னை ஒரு கவிஞராகவே அடையாளப்படுத்திக்கொண்டவர் இவர். 1963-ல் ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டவர். இவரது தந்தையின் செல்வாக்கால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பக்தி இலக்கியங்கள், நிகண்டுகள் ஆகிய தமிழ் மரபு சார்ந்த நூல்களை இளம் வயதிலேயே வாசித்து மனப்பாடம் செய்த பயிற்சி இவருக்கு இருந்தது. ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் முழுநேர எழுத்து வாழ்க்கையை இந்தத் தம்பதி தேர்வுசெய்துகொண்டனர். இவர்களுக்கிருந்த மகன் 17 வயதில் மூளைக்காய்ச்சலால் திடீரென மறைந்த சோகத்திலிருந்து மடைமாற்றமாகவும் இதழ்ப் பணியில் இருவரும் தங்களை ஒப்படைத்துக்கொண்டனர்.

கண்ணதாசன் நடத்திய ‘கண்ணதாசன்’, ‘தென்றல்’ ஆகிய இதழ்களின் தாக்கம் கொண்ட இதழாய் ‘கவிதாசரண்’ இதழ் வெளிவரத் தொடங்கியது. வடிவமைப்பிலும் ‘கண்ணதாசன்’ இதழின் தாக்கம். ‘கண்ணதாசன்’ இதழில் எழுதிய பலரும் இந்த இதழிலும் எழுதினர். என்.ஆர்.தாசன், வல்லிக்கண்ணன், புவியரசு, தமிழன்பன், துறவி என்ற வரிசை அது. தொண்ணூறுகளில் ஓர் இலக்கிய இதழ் நடத்திய இவர்களுக்கு பல அரசியல் நிகழ்வுகள் குறிப்பிட்ட அளவுக்குத் தாக்கம் செலுத்தின. 1992 பாபர் மசூதி இடிப்பு, அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுந்த தலித் எழுச்சி, ஈழப் போராட்டம் ஆகிய நிகழ்வுகளை உக்கிரமாக எதிர்கொள்ளும் எழுத்தியக்கமாய் ‘கவிதாசரண்’ இதழ் உருப்பெறத் தொடங்கியது. இவற்றின் பல பரிமாணங்களே இவர்களது எழுத்து இயக்கமானது.

‘என்னைத் தமிழ் அன்னை பெற்றாள்/ ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்/ இன்னுயிரைத் தோற்றபின்னே/ என் குழியில் பூத்திருப்பேன்’ என்னும் தலைப்பு வாசகம், இதழிலிருந்து காணாமல் போயிற்று. இந்தியச் சமூகத்தில் செயல்படும் சாதியின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துவதே தனது இயக்கம் என்று கவிதாசரண் சொன்னார். இதில் தந்தை பெரியார் அவரை ஆட்கொண்டார். இதனால் மநுநீதி, சனாதனம் ஆகியவற்றைப் பற்றி கவிதாசரண் பேசத் தொடங்கினார். இதில் கீழுக்கும் கீழாய் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட தலித் மக்களின் விடுதலையே முதன்மையானதாய்க் கருதி, தமது இதழில் பல்வேறு தரப்பினரும் தலித் இயக்கம் குறித்து உரையாடுவதற்கு இடமளித்தார். அன்றைய சூழலில் கூர்மைப்பட்டு வந்த தலித்தியம் தொடர்பான உரையாடல்களை, தமிழ்ச் சூழலில் செயல்படும் அறிவாளிகள் மூலம் ‘கவிதாசரண்’ இதழ் முதன்மைப்படுத்தியது. சாதியம் எனும் கொடுமையின் வடிவமாய் இருக்கும் தீண்டாமை, அதன் உள்ளிருக்கும் பல்வேறு படிநிலைகளைத் தமிழ்ச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு விவாதப் பொருளாக்கினார்.

தலித்தியம் எனும் உரையாடலின் உடன்விளைவாக, பின்னர் கால்டுவெல் நூலின் பதிப்பை இவர் செய்தார். 1875-ல் வெளிவந்த கால்டுவெல் நூலின் மூன்றாம் பதிப்பில் பல செய்திகள் நீக்கப்பட்டிருந்ததை நண்பர்கள் வழியாக அறிந்தார். அதில் முதன்மையானது தலித்துகள் தொடர்பானவை. தலித் மக்களின் கெளரவமான வாழ்க்கை சிதைக்கப்பட்டது, சமூகத்தில் கீழ்நிலைக்கு எவ்வாறு அவர்கள் தள்ளப்பட்டார்கள், தலித் மக்களின் உடற்கூறுகள் சார்ந்த செய்திகள், திராவிட தேசிய இனக்குழுக்களில் தலித் மக்களின் தனித்தன்மை எனப் பல்வேறு கோணங்களில் கால்டுவெல் பேசியவை நீக்கப்பட்டிருப்பதைக் கவிதாசரண் அறிந்து, அந்த நூலை முழுமையாக மறுபதிப்பு செய்தார். அதற்கெனத் தமது வீட்டை அடமானம் வைத்துச் செலவழித்தார். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி, பின்னர் தனது வீட்டை விற்றுக் கடனைச் செலுத்தினார். சாதியற்ற மனிதனாய்த் தன்னை அறிவித்துக்கொண்ட அவர், தலித் மக்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டதன் ஒரு பகுதியாகவே கால்டுவெல் நூலிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை கவிதாசரண் அடையாளம் கண்டார். அதனை மீண்டும் தமிழ்ச் சமூகத்துக்கு அறியச் செய்த கவிதாசரணின் பணியானது வரலாற்றில் போற்றப்படும்.

ஈழத் தமிழர்களின் போராட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்த அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கவிதாசரண் விமர்சித்தார். திராவிட இயக்க மரபுகளை ஏற்றுக்கொண்ட அவர், திராவிடக் கட்சிகள் ஈழத் தமிழர் போராட்டம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவருக்கு உவப்பானதாக இல்லை. 2009 முள்ளிவாய்க்கால் துயரம் அவரை உணர்வுரீதியாகப் பெரிதும் பாதித்தது. அவருடைய செயல்பாடுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. முள்ளிவாய்க்கால் துயரத்தால் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட பலர் தமிழ்நாட்டில் உண்டு. அதில் கவிதாசரணும் ஒருவர். தனது இதழ்ச் செயல்பாடு வடிகால் அல்ல; இயங்குவதற்கான வாய்க்கால் என்று கூறிய அவர், வளமான மொழிக்குச் சொந்தக்காரர். இவர் கவிஞராகத் தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினாலும் உரைநடை வடிவத்தில் மிக அலாதியான திறம் இருப்பதைக் காண முடியும். இவரது உரைநடையைப் படிக்கத் தொடங்கினால், புனைகதையை வாசிப்பதுபோல் ஓர் உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளும். இவ்வகையான மொழி வளத்தோடு பல புனைவுகளையும் படைத்திருக்கிறார். முத்துலெட்சுமி, இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கைச் சூழலைப் பின்புலமாகக் கொண்ட ‘புழுதிச்சோகம்’ இவரது புதினம். ‘சாமியார் மகன்’, ‘சரண்’, ‘பொற்கனவே போய் வா’, ‘சங்கர நேர்த்தி’ ஆகிய புதினங்களை எழுதியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இவரது கட்டுரைகள், புதினங்கள், ‘அடங்கல்’ எனும் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டார். கால்டுவெல் நூலின் செம்பதிப்பு ஆயிரம் படிகளை அச்சிட்டார். அதில் பாதிக்கு மேல் விற்பனையாகவில்லை. அந்த நூல் உருவாக்கிய வரலாற்றை ‘தமிழ்ச் சமூகமும் தலித்தியக் கருத்தாடலும்’ எனும் நூலாக வெளியிட்டார். இந்த நூல்கள் அனைத்தும் கவிதாசரண் வாழ்ந்த திருவானைக்காவில், வீட்டின் அறை ஒன்றில் கட்டுக்கட்டாக உள்ளன. இதனை உரிய வழியில் கொண்டுசேர்ப்பது அவருக்குச் சரியான நினைவஞ்சலி.

21.10.1935-ல் பிறந்த கவிதாசரண், 28.11.2021-ல் மறைந்தார். தமிழ்ச் சமூகம் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய மனிதர். இவரது எழுத்துகளைப் பொதுவெளியில் பரவலாக அறிமுகப்படுத்துவது அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.

நன்றி:

– வீ.அரசு, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here