சரசக்கா வந்தனம்
(பார்ட் – 2)

ஐந்திணை நிலமெங்கும் தேடிப்பார்த்தோம்
சரசக்கா உன் பாதத்
தடங்கள் எங்கும் இல்லை

பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்கணக்குதான்
தமிழர்க்கு
ரேஷன் கார்டு
ஆதார்கார்டு
வொட்டர் கார்டு எல்லாம்

எங்கும் உன் கைரேகை விழிரேகைகளைக் காணோம்

உன்னுடைய இருப்பு
ரிக் வேதத்தில்
இருக்கிறதென்றார்கள்
தேடிப்பார்த்தோம்

எங்களை
உன் வீட்டுக்காரர் பிரம்மாவின்
காலில் பிறந்தவர்கள்
என்கிறது ரிக்

எங்கள் மூதாதைகளை
உங்கள் குடும்பம்
மலம் அள்ளச் சொன்னது
முடி வெட்டச் சொன்னது
துணி வெளுக்கச் சொன்னது
வேட்டையாடச் சொன்னது
மீன்பிடிக்கச் சொன்னது

அவர்கள்
மழையில் நனைந்தார்கள்
வெய்யிலில் காய்ந்தார்கள்

கொஞ்ச நேரம் குளிருக்கு ஒதுங்க
கொஞ்ச நேரம் நிழலில் இளைப்பாற அவர்களை நீ பள்ளிக் கூடத்துக்குள்
அழைத்தவள் இல்லை

வள்ளுவனும் கபிலனும்
ஔவையும் வெள்ளிவீதியும்
எழுதிய ஓலைச்சுவடிகளை
ஒரு கார்காலத்தில் பற்றவைத்து
அவர்கள் குளிர் காய்ந்தார்கள்

எங்களை உன் புருஷன்
சூத்திரனாக்கினான்
பஞ்சமனாக்கினான்
நீயோ கல்லாத
தற்குறிகளாக்கினாய்

உனக்கு பூசை நாள் வந்தது
எங்களிடம் ஒரு புத்தகமில்லாமல்
மயிர் வெட்டும் கத்திரிக்கோலை
உழவோட்டும் கலப்பையை
வைத்துப் படைத்தோம்

நாங்கள் படிக்க வேண்டி
கெஞ்சிய பிரார்த்தனைக்கு
நீ செவிகொடுக்கவில்லை
பிறகுதான் தெரிந்தது
உனக்கு தமிழே தெரியாதென்பது

ஆனாலும்
ஜெருசேலத்திலிருந்து வந்த
ஏசுநாதர் எங்கள் மொழியைக்
கற்றுக் கொண்டார்
எங்கள் வேண்டுதலைப் புரிந்துகொண்டார்

நாங்கள் முதன்முதலாக
புத்தகங்களை மோந்து பார்த்தோம்

வீரன் காடன் மாடன் மாரியாத்தா
இப்படி நிறைய தெய்வங்கள் இருக்கும்போது
கல்விக்கென ஒரு
தெய்வம் நமக்கில்லையா?
ஏங்கி நின்றோம்

ஊரில் மணிச் சத்தம் கேட்டது
பிள்ளைகள் மஞ்சள் பையில்
ஒரு அரிச்சுவடியை போட்டு
ஓடினார்கள்

எங்கள் பிரார்த்தனை
வீண்போகவில்லை

சோறு போட்டு
படிக்க வைக்க
அங்கு கர்ம வீரன் நீன்றான்

‘ஆஹா, எழுந்ததடா
நம் குடியில் கல்விக் கடவுள்!’

ஆடினோம் பாடினோம்
படித்தோம் எழுதினோம்
மண்வெட்டியை
சலவைப் பெட்டியை
கத்தரிக்கோலை
மலமள்ளும் சட்டியை
தூர எறிந்து
அரசாங்க நாற்காலிகளில்
அமரத் தொடங்கினோம்

அக்கா சரசக்கா பொறுக்குமா
உங்கள் குடும்பத்துக்கு ?

இப்போது ரிக் வேதத்தை
புதிய கல்விக் கொள்கை என்கிறது
உங்கள் குடும்பம்!

எங்கள் பிள்ளைகள் கைகளில்
அது ஸ்க்ரூ ட்ரைவரையும்
ஸ்பேனரையும்
திணிக்கப் பார்க்கிறது

இப்போதுகூட
எங்கள் ஒண்ணாம்ப்பு
அஞ்சலை அம்மா மீது
அடிக்கடி மாரியாத்தா ஏறி கொரோனாவை திட்டுகிறாள்

நீயோ
வெள்ளைத் தாமரையிலிருந்து
இறங்குவதே இல்லை!

உனக்கே தெரியும்
தமிழர் மனக்குளங்களில்
மலராத பூ
தாமரையென்பது!

சம காலத்தை
கார்ப்ரேட்டுகளுக்கும்
வேதகாலத்தை
சூத்திரர்களுக்கும்
கையளிக்கிற பா.ஜ.க
சின்னத்தை விட்டு இறங்கி

நாங்கள் விரிக்கும்
கோரைப் பாயில்
அமரச் சம்மதமெனில் சொல்

அரசாங்க பள்ளிக்கூடத்துக்கு
அழைத்துப்போய்
விசயதசமி அட்மிஷன் போட்டு
அறம் செய விரும்பு
சொல்லித் தருகிறோம்

அப்படியே
அலுமினியத் தட்டோடு
அஞ்சலைக்கு பின்னால் நின்றால் மதியம் சத்துணவோடு
முட்டையும் நிச்சயம் !

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here