“மோடி நல்ல வாத்தியார்”

அப்படித்தான் சொல்லிக்கிறாங்க,
மாணவர்களிடம் பேசியிருக்கிறாராம் ,
பெரியபெரிய உபதேசமெல்லாம் சொன்னாராம் !

“குறுக்குவழி தேடாதே,
உன்னோட சொந்தத் திறமையைப் பார் ;
எது நோக்கமோ அந்த வழியில் நட.
குறுக்குவழி தவறு ;
நேர்மை — நல்ல பழக்கம்,
வாழ்க்கையில் கூடவே வரும்.”

“காப்பி அடிப்பது,
ஆசிரியர்மூலம் தேர்வுவினாத்தாள் திருடி
சுற்றுக்குவிட்டுத் தயாரிப்பதெல்லாம்
தப்பு, தப்பு, மகாதப்பு!”

“தேர்வுகள் வரும் போகும்
வாழ்க்கையை நீங்கள்
முழுதாக அனுபவித்து
வாழவேண்டும் ;
தேர்வுகளோடு சுருங்காதே,
சுற்றி உள்ள புதுப்புது இடங்களுக்குப்
பயணம் போ, அனுபவத்தை எழுது.”

“தேர்வு முடிவுகள் வாழ்க்கை முடிவல்ல ;
எல்லாம் தேர்வோடு முடிவதில்லை.
வெற்றிக் கலைமகள், திருமகள்
உங்கள் பக்கமே, கவலை வேண்டாம் !”

அட்றா சக்க, அட்றா சக்க, எப்பேர்ப்பட்ட வாத்திடா இவுரு?
சந்தேகமேயில்ல, நல்ல வாத்தியாருதான்

2.

அப்படியானால்,
நாட்டில் நடக்கும்
பொதுத் தேர்தல்களும் தேர்வுகள் தானே?
மாணவர்களுக்குச் சொன்னது
மோடிக்கும்தானே?

எதுநோக்கமோ அதன்பின்னால் ஒழுக்கமாய்ப் போ!
குறுக்குவழி கூடாது.
சொந்தத் திறமைமட்டுமே பலிக்கும்.
நேர்மை நல்ல பழக்கம்,
சாகும்வரை கூடவே வரும்.
காப்பி தவறு, வேஷம் போடுவது தவறு.
இப்படி இப்படி இப்படிப் படீன்னு
தெளிவாச் சொன்னாரே மோடி.
இப்பேர்ப்பட்டவரு
2024 என்ற நம்பரைக் கேட்டதுமே
ஏன் நடுநடுங்கிப் போகிறார்?
ஏபிசிடி மாணவர்களுக்கு முக்கியமென்றால்
பிபிசி விமரிசனம்
மக்களுக்கு முக்கியம் தானே?

குஜராத் இனப்படுகொலை,
உ.பி சாதிச் சித்திரவதை என
வரிசையா நோண்டுறாங்களேன்னு,
அதானிய சாக்காவச்சி தாக்கறாங்களேன்னு
வயிறு கலங்குதில்லே வாத்யாருக்கு?

ஜனநாயகம்னா இப்படித்தான்னு
சின்னப் புள்ளைங்ககிட்ட பேசமுடிஞ்சிது
பெரிய புள்ளைங்ககிட்ட நெத்திக்கண் காட்டுறாரே?
அங்க உபதேசம் ;
இங்க என்னவெல்லாம் பாருங்க –
உவாபா ஆள் தாக்கித்தூக்கும் சட்டம்,
ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு,
காஷ்மீரைக்குறிவைத்துக்
குழிதோண்டி ரெண்டுத் துண்டு;
கையில அதிகாரம் விளையாடுறாரு.

கட்சிகளை உடைச்சாரு,
எம்எல்ஏக்களை விலைகொடுத்து வாங்குனாரு,
ஆட்சிக் கவிழ்ப்பெல்லாம் சல்லிசாச் செஞ்சாரு,
ரவுடிங்களாப் பொறுக்கி கட்சிய நிரப்புனாரு,
அவாள மேக்கிறதுக்கு ஓய்வுபெற்ற அரசு உபயப்
முரட்டுப் போலீசு ராணுவத்தானை நேமிச்சாரு.
கையில அதிகாரம் பூந்து விளையாடுறாரு.

குறுக்குவழியில் மட்டுமே சுத்திவரார்,
பாதுகாப்பு எல்லாமே அரசு உபயம்.
குறுக்குவழியில்மட்டுமே பணம் அமுக்குகிற
அதானிய பக்கத்துல வச்சுக்கிட்டே ஜி
ஊருக்கு உபதேசமான்னு
நாலுபேரு கேப்பாங்கதானே ஜி?

3.

சின்னப் புள்ளைங்க, ஏமாத்திடலாம்,
அது உபதேசம்.
ஜூது ஆடாதேன்னு நல்ல தமிழகப்பழக்கமுண்டு.
ஆனா ஆட்டுத்தாடி தமிழ்நாட்டுக்
கவர்னருக்கு ஆஜராகி
கடவுளே சொக்கட்டான் ஆடிய கதை
தமிழ்நாட்டுக் கோயில் சாட்சின்னு
மோடி பேசினாரு.
எதுக்கு? ரம்மிய அவுத்து உடுறதுக்கு,
பங்குச்சந்தையில் அதானி
லட்சம்கோடிக்கு ரம்மி ஆடுறதை நாயப்படுத்த.
கோடி ஜனங்களை ஏமாத்துறியே வாத்யாரே?

எல்லாம் கூட்டிக்கழிச்சிப்பெருக்கிவகுத்தாக்கா
தேர்வுமாதிரிதானே தேர்தலும்?
அதுவும் தேர்தல் 2024 என்றாலே பதட்டம் வருதே ” ஜீ “யுக்கு,
அது ஏன், ” ஜீ “?

இதையும் படியுங்கள்: அரசியல் சந்தையில் பக்கெட் பொங்கல் !

புள்ளைங்களிடம் ஊர்ப் பயணம் பத்தில்லாம் பேசினார்.
மோடியும் உலகம் பூரா போறாரு, வாறாரு.
சரிதான்.
அங்கேபோயி
கார்ப்பரேட்டுக்காக மட்டுமே பேசுகிறாரே, ஏன் ?
காரணம் : உலக நிதிமூலதனமே
” பிரம்ம லோகம் ” !
அவருக்கு இதுவே அரசியல் வாழ்க்கை.
மக்கள் வாழ்க்கையோ தேர்தலுக்குத் தேர்தல்தான்
கவனத்தில் வரும் ; ஓ அதுதான் மோடிப் பதட்டமோ ?
சரிதான், சரிதான்.

4.

ஓ, அப்படிச் சுத்தி வராரு ;
தேர்வு வேற, தேர்தல் வேறன்னு
சொல்ல வராரு.
அரசியல்னா நாலும் நடக்குமுன்னு சொல்ல வராரு!
நாலு காலும் நடந்தாத் தானே
நாயும் நடக்கும் — இல்லையா மோடி ஜீ
அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்ஜி,
அப்படித்தானே வாத்தியார்ஜீ?

5.

இப்ப புரியுது மோடிவாத்தி யாருன்னு!
கார்ப்பரேட் – காவிக் கயிறு ஆட்டுவித்தால்
இவரு ரொம்ப நல்லா நடிக்கிற வாத்யாரு,
எம்.சி.யாரை விட
லட்சம் மடங்கு சூப்பர் வாத்தியாரு!

  • புதிய திருமூலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here