தமிழ் பாடுவோம்!

மீண்டும் தில்லையில் தமிழுக்கு அவமரியாதை. தமிழ்நாட்டு கோவிலில் தமிழில் பாட போராட வேண்டியிருக்கிறது.

சமீப நாட்களாக மக்களதிகாரம்
உள்ளிட்ட இடது அமைப்புகள்,
தமிழ் தேசிய அமைப்புகள் சிற்றம்பல மேடையில் தமிழ்பாட போராட்டங்கள் நடத்துகின்றன.

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்கள் அனைத்தும் அறநிலையக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிதம்பரம் நடராசர் ஆலயமோ, தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நீதிக்கட்சி காலம் தொடங்கி, நடராசர் ஆலயத்தை அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. ஆனாலும் இந்திய உச்சநீதி மன்றமோ தொடர்ந்து தீட்சதர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலைப் போன்றோ, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலைப் போன்றோ சிதம்பரம் நடராசர் ஆலயம் ஒரே ஒரு மன்னரால் கட்டி முடிக்கப்பட்டதல்லை.

பிற்கால சோழர்கள், நாயக்க மன்னர்கள், இப்படி பலரால் இக்கோவில் அவ்வப்போது விரிவு செய்யப்பட்டது.

சிதம்பரம் கோவில் வித்தியாசமானது .

இங்கு சிவன் மட்டுமில்லை.
எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்கள் இக்கோவிலில் பெருமாளையும் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.

12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கன் இங்கிருந்த பெருமாளை கடலில் தூக்கி எறிந்தான்! என்கிறார்கள்.

பிறகு வந்த அச்சுததேவ மகாராயர் எனும் நாயக்க மன்னன் பெருமாளை மீண்டும் புனரமைத்தானாம்.

இப்படி மன்னர்கள் சிவனையும் பெருமாளையும் வாலிபால் விளையாடியபோது ,
அம்பயராக உள்ளே நுழைந்தவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள்.

கைலாயத்திலிருந்து சிவனே ,
இவர்களது கையைப் பிடித்து, தில்லைக்கு அழைத்து வந்தாராம். சுப்ரமணியசாமி கூறியபோது சுப்ரீம்கோர்ட் நம்பியது.

ஹைகோர்ட் வேறு.
சுப்ரீம் கோர்ட் வேறு.
‘ஹைகோர்ட்டாவது மசுராவது! ‘
ஹெச்.ராஜாக்கள் இப்படி சுப்ரீப்கோர்ட்டை திட்டமாட்டார்கள்.

ஏனென்றால், உச்ச நீதிமன்றம் உச்சிக் குடுமியைப் பார்த்து தீர்ப்பு சொல்லும் மன்றம்.

தீட்சதர்கள், கோர்ட்டில் ‘நாங்கள் தனி மதப்பிரிவு’ என்றார்கள். நீதிமன்றம் ஆதாரம் கேட்டது. தீட்சதர்கள் தங்கள் முன்பக்க குடுமியை ஆட்டிக் காட்டினார்கள்.

ஆமாம், அர்ச்சகர்களுக்கு பின்பக்கத்தில்தானே குடுமியிருக்கும். இவாளுக்கு முன்பக்கத்தில் இருக்கிறதே!
நம்பியது சுப்ரீம் கோர்ட்.

தில்லை நடராசர் ஆலயம் 40 ஏக்கர் பரப்பளவுள்ளது . 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் இக்கோவிலுக்கு இருக்கின்றன . இவையெல்லாம் தீட்சதர்களுக்கே!

இத்தனை செல்வங்களும் கைக்கு வந்தால் எப்படி ஆட்டம்போடுவார்கள்? தீட்சதர்கள் போட்டார்கள்.

பக்தாளுக்குதான் அது பொன்னம்பல மேடை. தீட்சதர்களுக்கோ இரவு நேர பார். கோவிலுக்குள்ளே ஒரு ஜிம் இருக்கிறதென்கிறார்கள். கும்பிட வரும் பெண்களை ஓங்கி அறையும் ஜிம்பாடி தீட்சதர்களைப் பார்த்தால் நம்பத் தோன்றுகிறது.

இங்கே தமிழ்பாட வந்தால்,
நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறுமே! கவலைப்படுகிறார்கள் தீட்சதர்கள்.

வழக்கம்போல் வேதம், ஆகமம் என்று கதைவிடும் தீட்சதர்கள் யாரும் பாரம்பரியம் கடைபிடிப்பவர்கள் இல்லை. டொயோட்டா காரும் ஆப்பிள் ஃபோனும் வைத்திருப்பவர்கள். தில்லை நடராசன் ஆட்டத்தில் மெய்மறப்பவர்கள் இல்லை.
‘ஓ சொல்றியா மாமா’ வில் மயங்குபவர்கள்.

தமிழர்களுக்கும் நிறைய பாரம்பரியங்களும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. மாணிக்கவாசகர் தேவாரம்பாட தில்லையுறை நடராசன் ஓலைச்சுவடியில் எழுதினான் என்பது எந்தமிழர் நம்பிக்கை.

தேவாரம், திருவாசகம் , திருக்கோவையார்,
திருமுறைக் கண்ட புராணம்,
திருவிசைப்பா, திருபல்லாண்டு,
திருமந்திரம், கோயில் நான்மணிமாலை,
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்,
பெரியபுராணம், சிதம்பரம் மணிக்கோவை,

சிதம்பரச் செய்யுட் கோவை,
சிவகாமி அம்மை இரட்டை
மணிமாலை,தில்லைக்கலம்பகம்,
தில்லையுலா, மூவருலா,
தில்லை யமகவந்தாரி,
சிதம்பரவெண்பா,
சிதம்பர சபாநாத புராணம்,

பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்,புலியூர் வெண்பா, நடேசர் திருவருட்பா, நடராச திருவருட்பா,நடராசர் சதகம், நடராசர் திருப்புகழ்,
சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ், சேக்கிழார் புராணம்,
சிவகாமியம்மைப் பதிகம்,
தில்லை கற்பக விநாயகர் வெண்பா
அந்தாதி,தில்லை நவமணி மாலை,

சிதம்பர விலாசம், பரமரகசிய மாலை,
நடராஜர் காவடிச்சிந்து,நடராசர் பத்து,
நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்,
சிதம்பரம் பட்டியல்

இப்படி, தில்லை நடராசனைப் பாடும் பக்தி இலக்கியங்கள் தமிழில் ஏராளம் இருக்கின்றன. தில்லை ஆடலரசனைப் பாட, இப்படி தீட்சதர்களிடம் தனித்தன்மை உடைய பாடல்கள் ஒன்றாவது உண்டா?

இந்தத் தமிழா, நீசத் தமிழ்?
இதைப் பாட தமிழருக்கு தீண்டாமை எனில், தில்லை, தமிழ் நாட்டில் இருக்கிறதா? அதற்கு வெளியில் இருக்கிறதா?

‘கோடையிலே இளைப்பாறிக்
கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே
நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊருகின்ற
தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீரிடை
மலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற
மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே! ‘

என்றெல்லாம் எம் முதுகவி
வள்ளலார் நடராசனைப் பாடுகிறானே. நம் பாட்டன்கள் கட்டிய கோவில்.
நம் பூட்டன்கள் பாடிய தமிழ் .

சிற்றம்பல மேடையேறி
தமிழரே.. தமிழ் பாடுங்கள்!

நந்தனை எரித்தவர்கள் மீண்டும் முன்குடுமியைக் காட்டுகிறார்கள்.

நாம், நாயன்மார்களின்
தமிழைக் காட்டுவோம்.

மீறி தடுத்தால்,
கரிகால் சோழனின்
வாளைக் காட்டுவோம்!

  •  கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here