மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்!

இந்தியாவில் சரி பாதி மற்றும் அதற்கும் மேலாக பெண்கள் இருக்கிறார்கள்.
வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது, குழந்தைகளை வளர்ப்பது போன்ற சள்ளை பிடித்த வேலைகள் துவங்கி விவசாயக் கூலிகளாகவும், சிறு கடை முதல் ஷாப்பிங் மால் வரை ஊழியர்களாகவும், ஆலைகள், ஐடி பூங்காக்கள் ஆகியவற்றில் தொழிலாளர்களாகவும், கட்டிட வேலை, செங்கல் சூளை போன்றவற்றில் துவங்கி அமைப்புசாரா அனைத்து துறைகளிலும் ஆண்களைப்போலவே சரிக்கு சமமாக பணியாற்றும் பெண் தொழிலாளர்கள், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் துவங்கி பள்ளி, கல்லூரிகள், அதிகாரிகள் வரை, ஊடகவியலாளர்கள் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்கள் என்று பலவகையான உழைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் அனைவரும் ஆணாதிக்க, பார்ப்பனிய மற்றும் பிற மதங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் அடக்குமுறைக்கும், ஆதிக்கத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று பெண்களை பல்வேறு அடிமைச்சங்கிலி களில் பூட்டி அடக்கி ஒடுக்கி வருகிறது ஆணாதிக்க சமூகம். உதிரிகள், எதிரிகள், பொறுக்கிகள் அனைவருக்கும் முதல் தாக்குதல் இலக்கு பெண்கள்தான்.
தாய்வழிச் சமூகத்தில் மொத்த சமூகத்தையும் தலைமைதாங்கி வழிநடத்திச் சென்ற பெண்கள், ஆணாதிக்க சமூகத்தில் கொடூரமான நுகத்தடியில் கீழ் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்.

பெண் விடுதலை இன்றி சமூக விடுதலை சாத்தியமில்லை என்ற புரிதலுடன் மார்ச் 8 பெண்கள் தினத்தை போற்றுவோம்.

வருடத்திற்கு ஒருமுறை சடங்கு தனமாக பெண்ணுரிமை பற்றி பேசாமல் அன்றாட வாழ்க்கையில் அடுப்படி வேலை துவங்கி அரசியல் அதிகாரம் வரை அனைத்திலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்தெரிந்து புதிய சமூகத்தை உருவாக்க முன்நிற்போம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.


தாய் தலைமையே வழிநடத்து

தோழிகளே
நம் வலி தாங்கும் வீரத்தால்
விட்டுக்கொடுக்கும் தியாகத்தால்
பெண்ணுக்கேது பெருமை?
எங்கே சமூக மேன்மை?
நம் மக்களெல்லாம் அடிமை…
இன்னும் ஏன் மௌன வார்த்தை!

குழந்தை மேனிக்கு
ஆபாச நடிகைபோல்
அரைகுறையாய் உடுத்திவிட்டு
ஊர்விழாவிற்கு தூக்கிச்சென்றபோது
உடலை மொய்த்த ஆபாச ஈக்களை
என்னவாக நினைத்தாய்…?

அலங்கார போட்டியில்
தம்பிக்கு தாவணிகட்டி
பெண் கவர்ச்சி வேடத்தில்
பரிசொன்று கொடுத்தபோது
பெண்மையின் உடல் பற்றி
என்ன சொல்ல நினைத்தாய்…?

அறிவிற்கு பெண்ணல்ல
ஆஸ்திக்கு பெண்ணல்ல
அழகிற்கே பெண்ணென்று
இலக்கணம் சொன்னபோது
பெண்மையின் அறிவு பற்றி
என்ன சொல்ல நினைத்தாய்…?

சமையல் பொம்மை உனக்கும்
கார் பொம்மை தம்பிக்கும்
அப்பத்தா கொடுத்தபோது
பொம்பள பிள்ளையா பிறந்துட்டியேன்னு
கண்ணத்தைக் கிள்ளி சிரித்தபோது
தம்பியை மட்டும் கொஞ்சியதற்காக
என்ன சொல்ல நினைத்தாய்…?

எட்ட இருக்கும் மைதானத்தில்
கிட்டி ஆடும் அண்ணனை
பாத்திரம் தேய்த்துக்கொண்டே
பாதையில் அளவெடுத்தாய்
உனக்கு எட்டாத மைதானத்தை
எப்படி திட்டித் தவித்தாய்…?

பள்ளிக்கூட லீவுல
மொட்டைமாடி இடுக்குல
சொந்தக்கார ஆம்பளைங்க
தொந்தரவு செஞ்சாங்களே
பக்கத்துவீட்டு ஆம்பளயும்
பயங்காட்டி செஞ்சானே
சண்டை பிடிக்க முடியாம
நிர்வாணத்தை நொந்தாயே
பள்ளிக்கூட வாத்தியனும்
அப்படியே செஞ்சபோது
ஆழ்மனசு கோபத்துல
என்ன செய்ய நினைத்தாய்…?

கண்விழித்து படிச்சதை
பரிட்சைக்கு எழுதும்போது
பொறுக்கி மீசை வாத்தியாரு
வகுப்புக்குள்ளே நடக்கும்போது
வயிறு வலி தாங்காமல்
அடிவயிறு நனைஞ்சதே
துணிமாத்த முடியாம
மணியடிக்க கலங்கும்போது
பொறுக்கித்தன உலகம் பற்றி
எப்படி குமுறி தவித்தாய்…?

பரிட்சை எழுதி முடித்துவிட்டு
பஸ்ஸுக்கு நிற்கையில
யாரோ ஒரு ஆம்பள
காதல் செய்ய சொன்னப்ப
மாட்டேன்னு மறுத்ததாலே
ஆசிட் வீசி எரிச்சானே
பிணமாகும் முன்பாக
ரெண்டு நாளா துடிச்சபோது
பொத்தி வளர்த்த உலகம் பற்றி
என்ன பேச நினைத்தாய்…?

காதலை சுவாசித்த
கல்லூரி வாசத்தில்
திரைப்பட நாயகனாக
நீக்கமற நிறைந்திருந்த
நேசித்த காதலனே
தனிமைக்குள் அழைத்தவுடன்
நண்பர்களோடு விருந்தாக்கி
துரோகமாய் புணர்ந்தபோது
இரத்தம் பிதுங்கிய உதட்டில்
வலி தாங்காத இதயத்தில்
காதல் மிகுந்த உலகம் பற்றி
என்ன சொல்லி துடித்தாய்…?

அடுப்போடு மல்லுகட்டி
குடும்ப சுமையை அணைத்துக்கொண்டு
நேரம் போதாமல்
வாய் வயிற்றுக்கு உண்ணாமல்
அலுலகத்திற்கு அவசரமாக
பொட்டு வைத்து கிளம்பியதும்
கட்டிய சேலை தடுப்பதாலே
எட்டு வைக்க முடியாமல்
எட்டிப் பிடிக்க வழியின்றி
பேருந்து தவறியபோது
ஆண்கள் அளித்த சேலைபற்றி
என்னவெல்லாம் நினைத்தாய்…?

நகர வீதியில் நடக்கையில
நாலு திசையும் கடக்கையில
மனித தலைகள் முன்னாடி
அவசரத்துக்கு வழியின்றி
கால் இடையில் நெருக்கியதை
தாங்காமல் விரைந்தபோது
கூட வந்த ஆம்பள
முன்னால போகச் சொல்லி
பின்னால ஓரங்கட்டி
முட்டுச் சுவற்றை நனைத்தபோது
ஒதுங்ககூட உரிமையற்ற
உனக்கான தெருக்கள் பற்றி
என்னவெல்லாம் திட்டி திட்டி
உதைத்து உதைத்து நடந்திருப்பாய்…?

பிள்ளைங்க ஏங்காம
விதவிதமா கொஞ்சம் சமைத்து
பால் காசு எண்ணெய் காசு
சிக்கனமா சேத்து வைத்து
தையல் மிதிச்ச கூலி காசும்
சேத்து வைத்த மீதி காசும்
குடிகார ஆம்பள
அடிச்சு மிதிச்சு புடுங்கையில
செல்வமும் மானமும் கை நழுவி போகயில
கண் வடித்த கண்ணீர் கோட்டை
விரல் நுனியில் துடைத்தபோது
பொல்லாத உலகம் பற்றி
என்னவெல்லாம் நினைத்தாய்…?

அன்று தாய்தலைமை சமூகத்தில்
சமஞ்ச புள்ள தெய்வமாச்சு
இன்று ஆணாதிக்க சமூகத்தில்
அலங்கரித்த பொம்மையாச்சு
சகமனித கூட்டத்தை
பெற்றெடுத்த பெண்ணுடம்பு
ஆண் சொத்து வாரிசுக்கு
காம ருசிக்கு பண்டமாச்சு
ஆணாதிக்க உலகும் சொத்தாதிக்க வெறியும்
உன்னை அடிமைச்சிறை பிடித்தபோது
சரணடைந்து நீ வீழ்ந்தபோது
என்னவெல்லாம் நினைத்திருப்பாய்…?

தாய்தெய்வம் இவளென்று
புகழப்பட்ட பெண்ணுடம்பு
ஆண் விரும்பும் அலங்காரத்தில்
வாரிசு சுமக்கும் வெற்றுடம்பாக
இழிவுபடுத்தத் தொடங்கியபோது
என்னவெல்லாம் சொல்லி சொல்லி
தப்பிக்க முயன்றிருப்பாய்…?

ஆணுலகில் அடிமைப்பட்டு
தப்பிக்க வழியின்றி
சகதியே வாழ்வென்று
இறுக்கமாய் காய்ந்ததும்
பாலுறவு அழகையே பாதுகாப்பு என்றதும்
ஆண்முதுகில் மறைவதே மரியாதை என்றதும்
பழக சிரமப்பட்டு எப்படியெல்லாம் அழுதிருப்பாய்…?
பெண்ணுடலின் இயல்பான
தாய்தலைமையை மறப்பதற்கு
எத்தனை நூற்றாண்டு
முடியாமல் நொந்திருப்பாய்…?

படிக்க:

  ஹிஜாப்பும் காவியும்!

பெண்ணாக பிறந்ததற்கு
கொல்லமால் தப்பியதால்
மாமன் விருப்பப்படி
உடம்பெல்லாம் சேலை கட்டி
மஞ்சள் தாலி குங்குமமிட்டு
காலுக்கு கொலுசு கட்டி
கால்விரலில் மெட்டி கட்டி
காது மூக்கில் நகைமாட்டி
கை முழுக்க வளையல் ஆட்டி
பேரழகாய் நிற்பவளே…
ஊரே பார்த்து நிற்க
சாதி மத ஆம்பளைங்க
பெண்ணுடலை ரணமாக்கி
சதையெல்லாம் வன்புணர்ந்து
பிறப்புறுப்பில் இரும்பு துளைத்து
கொலை செய்ய செத்தவளே
மூச்சு நிக்கும் முன்னே
என்ன சொல்ல நினைத்துவிட்டு
சொல்லாமல் செத்திருப்பாய்…?

பெண்ணாக பிறப்பதை
இழிவென்று அவமதித்த
பார்ப்பனிய உச்சிக்குடும்பி
சாதி வெறி வாழ்க்கைக்கு
பத்தினியாக வாக்கப்பட்டு
என்னத்த சாதித்தீர் தோழிகளே!

இலாபவெறி ஆணுலகில்
அளந்து காட்டும் காம ரகம்
பணத்திலும் குணத்திலும்
பல கோடி வியாபாரம்
உடல் சிவக்க ரசாயணம்
உதட்டுக்கு சிவப்பு சாயம்
பளபளன்னு முகம் காட்ட
பவுடர் பஞ்சு ஏராளம்
முழுசாக பொத்திட்டாலும்
வாச திரவியம் ஆண் அழைக்கும்
உள்ளாடையும் முழு உடையும்
ரசணை பொங்க ஆண் விருப்பம்
ஆணாதிக்க அறிவால் வடிவமைகின்றன
பெண் பொருள்கள்
ஆணுலகை அழைப்பதற்கே
வடிவமைகின்றன பெண்ணுடல்கள்

சோறூட்ட வழியில்லாமல்
மருந்து வாங்க வழியில்லாமல்
படிக்க பீசுக்கு வழியில்லாமல்
பாலுறவு அடிமையாக வழிமாறி போகயிலே
நொந்து தனிமைப்பட்டு என்னவெல்லாம் புலம்பினீர்கள்…?
பயங்கரவாத அரசுகளின்
இராணுவப்படை பொறுக்கிகளின்
வன்புணர்வில் துயரப்பட்டு
பிறப்புறுப்பில் வெடிக்கப்பட்டு
சாவை அடையும் முன்பே
என்ன சொல்ல நினைத்துவிட்டு
சொல்லாமல் செத்தீர்கள்…?

கார்ப்பரேட்டு டாலர்களுக்கும்
இலாபவெறி மீசைகளுக்கும்
வப்பாட்டிகளாக வாக்கப்பட்டு
என்னத்த சாதித்தீர் தோழிகளே!

பதிலுக்கு அடிக்க
எதிராக பேச
துணிந்த நிமிடங்கள் கோடி

ஆற்றலை விளக்க
பேரறிவை உணர்த்த
முயன்ற நிமிடங்கள் கோடி

சுயமரியாதை காக்க
சமூக மரியாதை போற்ற
எழுந்த நிமிடங்கள் கோடி

சகமனிதராக நிற்க
சமூகவிடுதலை ஆக்க
நினைத்த நிமிடங்கள் கோடி

உரிமைகள் மீட்க கனவுகள் கோடி
நிமிடங்கள் கோடி நினைத்தீர்கள் தோழி

நினைப்போடு முடித்தீர்களே
செயலோடு இணைந்தீர்களா?

தோழிகளே
நாம் சொல்லாத வார்த்தைக்கு
அர்த்தங்கள் கோடி
விடுதலையை சாதிப்போம்
செயல்களில் கூடி
சமூக விஞ்ஞானத்
தோட்டத்தில் பாடி
விடுதலை மலர்களாய்
மலரலாம் வாடி

சொத்தாதிக்க திமிரும்
ஆணாதிக்க பகையும்
சாதி மத இழிவும்
இனம் மொழி பிரிவும்
பொருளாதார பறிப்பும்
இயற்கை வளம் அழிப்பும்
சமத்துவமற்ற உலகும்
மொத்தமாய் அழிக்க
கூடலாம் தோழிகளே

இலாபவெறிபிடித்த பன்றிகளிடமிருந்து
உயிர் பிழைக்க ஏங்குகிறது உலகு
உலகை மீட்பதிலிருந்து தொடங்குகிறது
பெண் விடுதலையின் பேரழகு
மக்கள் அதிகாரத்தை வழி பயின்று
தாய் தலைமையே
மீண்டும் நீ வழிநடத்து!

பெண் வலிகளின் ஊற்றெல்லாம்
அரசியல் கொள்ளி…
மக்கள் அதிகாரம் மட்டுமே
மாற்றத்தின் வெள்ளி!

  • புதியவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here