தில்லை நடராசன் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தில்லை நடராசன் கோவில் ஒரே மன்னனால் கட்டப்பட்ட கோவில் அல்ல, சோழர்கள் காலத்தில் துவங்கி பிற்கால சோழர்கள் வரை பலரும் இந்த கோவிலை கட்டி முடித்துள்ளனர்.
தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய இராஜராஜ சோழன் சிதம்பரத்திற்கு வந்தபோது அங்கே தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பக்தி இலக்கியங்கள் செல்லரித்துப் கிடப்பதைக் கண்டு மீட்பதற்கு நம்பியாண்டார் நம்பி மூலம் முயற்சி மேற்கொண்டார்.
“குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும் பனித்த சடையும்” என்று சிவபெருமானை பாடி வழிபட்டவர்கள் சிற்றம்பல மேடையில் நின்று தான் பாடி இருக்க வேண்டும்.
அந்த சிற்றம்பல மேடையில் மீண்டும் தமிழ் ஒலிப்பதற்கு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.

2000 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட எண்ணற்ற அமைப்புகளின் தோழர்கள் தொடர்ந்து போராடி தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டினார்கள்.

சைவம் என்றால் சிதம்பரம் வைணவம் என்றால் ஸ்ரீரங்கம் என்பதே ஆன்மீகவாதிகள் மற்றும் பக்தர்களின் வழிபாட்டு நம்பிக்கையாக உள்ளது.
திருமுதுகுன்றத்தில் உள்ள பழமலைநாதர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஒலிக்கும்போது சைவத்திற்கு தலைநகராக விளங்கும் சிதம்பரத்தில் தமிழ் தடுக்கப்படுவது அவமானம்.

மீண்டும் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்.

000

தாலாட்டும் மொழி!

இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தோம். போகும்போதும் , வரும்போதும் நள்ளிரவுப் பயணம்.

நேற்று மாலை பள்ளிவிட்டு
திரும்பினால், உடலெங்கும் அசதி.

மகம் திருவிழா முடிந்திருந்தது. பழமலைநாதர் ஆலயத்தில் விடையாற்றி உற்சவம். போவோமா? என்றார் தமிழ்.

தேரோடிய கிழக்கு கோபுர வீதி. அமைதியாக இருந்தது.
தேர்கள் கம்பீரமாக நின்றன.
பைக்கை நிறுத்தி அங்கேயே செருப்பை விட்டு ஆலயத்துள் நுழைந்தோம்.

கருங்கல் பாவிய நடைபாதை. குளிர்ச்சியை பாதத்தில் ஒற்றியது. மேகத்தை உரசிய கொடி மரத்தின் அடியில் பெண்கள் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

கருவறைக்குள் நுழைந்தோம்.
அய்யர்கள் மௌனித்திருந்தார்கள்.

‘தோடுடைய செவியன் விடையேறி
ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே!’

கம்பீரமான தோற்றம் கொண்ட ஒருவர்,
சிவனுக்கு முன்னால்,தேவாரம் பாடிக்கொண்டிருந்தார்.

இன்று தாய் மொழி தினம்.
தமிழர் ஆலயங்களில் தமிழ் ஒலிக்க விரும்புகிறோம்.

தில்லையில் தமிழ் பாடிய நம் ஆறுமுகச்சாமி மறைந்துவிட்டாரே!
என்று வருந்துவேன். இல்லை.
ஒரு ஆறுமுகச்சாமியைதான் நாம் அறிந்திருக்கிறோம் என நினைத்தேன்.

அனேகமாக இவர் கல்லூரிப் பேராசிரியராகவோ, வங்கியில் வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும்.

‘மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து
உன் விரையார் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்!’ என்பாரே மாணிக்கவாசகர். அப்படிப் பாடுகிறார்.

குடும்பம் அவரை சூழ்ந்நு நிற்கிறது. இந்தக் கணீர் தமிழ் முன் நம் மந்திரங்கள் எடுபடாதென்று தீபாராதனை மட்டும் காட்டி நீறு வழங்குகிறார்கள் அய்யர்கள் .

சூழல் மறந்து சிவத்தோடு அய்க்கியமாகி பாடிக்கொண்டிருக்கிறார் அந்த நடுவயது மனிதர். ஆலயத்தின் பழங்கால கருங்கற் சுவர்களில் மோதி, ஞானசம்பந்தனின், தாயுமானவனின் தமிழ், கமழ்ந்தபடி இருக்கிறது.

உட்பிரகாரத்திலிருந்து வலது வாசல் வழியே வெளியேறினோம். அங்கும் ஒருவர். இளமை விலகாத தோற்றப் பொலிவு.

‘காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!’

இவரும் வாய்விட்டு ராகமெடுத்து உரக்கப்பாடுகிறார். அவர் பின்னால்
ஒரு கூட்டம். இங்கு என்ன நடக்கிறது! எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எனக்கும் தமிழ் பாடத் தோன்றியது. நானொன்றும் பாடகனில்லை. இது சினிமாவோ நாடகமோ இல்லை. ஆலயம். காலம் காலமாக தமிழ் ஒலித்த ஆலயம். இனியும் கூச்சப்பட்டால் யாருடைய மொழியையோ நான் கேட்டுக் கொண்டிருக்கிற நிலையே ஏற்படும். குரலெடுக்கிறேன்.

வீதிகளில் நின்று அரசியல் முழக்கங்களை எழுப்பியவன்.
ஒரு குளியலறை பாடகன். முதன்முறையா தமிழர் ஆலயத்தில்
தமிழ் அணையக்கூடாதென பாடுகிறேன்.

‘மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.’

சிரிப்பாரோ தமிழ்? திரும்பிப் பார்க்கிறேன். அமைதியாக நடந்து வருகிறார்.

முன் மண்டபத்தில் புளியோதரையும் சுண்டலும் வாங்கி அமர்ந்தோம். நாயன்மார்கள் மண்டபத்திலிருந்து பெண்களின் தேவாரப் பாராயணம் கேட்கிறது.

வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியுந், தந்த தலைவனை தமிழால் துதிக்கும் தாய்க்குரல்கள்..
எங்களைத் தாலாட்டுகின்றன!

கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here