அட்டைப்பெட்டி பிண்டமே!
இறந்தும் கூடவா
எங்கள் மானத்தை வாங்குகிறாய்?

தலைநகரத்தின் சேரியை
தலைவிரி கோலமாய் விட்டுவிட்டு,
தனவான்களை பாதங்தாங்கி
காத்துவிட்டு,
கொஞ்சமாய் மூச்சு விடுகிறோம்…

வடசென்னை மக்களின் பறைமுழக்கத்தை திசை திருப்பி
வாணி மஹாலின் யாழிசையை
கேட்க வைத்தோம்.

செத்துப் பிறந்த நீ
எங்களின் மீது சேற்றை வாரி இறைக்கிறாய்!

சென்னை சேரியின் எண்ணை பிசுக்கில் மீனவர்கள்,
அரை வயிறு கஞ்சிக்கும்
அரையாண்டு தேர்வுக்கும் நடுவில் மாணவர்கள்,
இஎம்ஐ யில் வாங்கியதெல்லாம் ஈரம் காயாமல் வீதியில்…

கொஞ்சம் கொஞ்சமாய் வடிகிறது தண்ணீர்.
அழுவதற்கும் மிச்சமில்லை கண்ணீர்!

அதனாலென்ன,,,
2015 வெள்ளத்தின் கழக ஆட்சிக்கும்
2023 வெள்ளத்தின் கழக ஆட்சிக்கும்
ஒப்பீடுகள் வெளியிட்டோம்.
ஓரளவு தேறி விட்டோம்.

சதுப்பு நில ஆக்கிரமிப்பு,
வடிகால் பணி வர்த்தகங்கள்,
4000 கோடி கதைகள்,
ஆறாயிரம் பத்தாது
பத்தாயிரம்…
இல்லையில்லை
பன்னிரண்டாயிரம் என

‘ திராவிட ‘ எழவுக்கு காத்திருக்கும்
ஆரியப் பினந்திண்ணிகள்,
கமலாலய மூட்டை தூக்கிகளின்
அரசியல் கணக்குகளை
அறிவாலய பரிசில் புலவர்களை வைத்து நேர் செய்து விட முடியும்.

மழை கொடுத்த
கொஞ்சம் மனிதாபிமான உணர்ச்சிகளை,
சிறிது போட்டோஷாப் மசாலா கலந்து
“வென்றது மனிதம்” டைட்டில்
தயாரிப்பதற்குள்
அட்டைபெட்டிக்குள் பூதம்!
D/o செளமியா என்றொரு பூதம்.

நித்தமும் செத்து பிழைக்கும்
மக்களை புறங்கையால் தள்ளி
டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி
போகும் போது,
செத்தே பிறந்த உனக்கு
அட்டைப் பெட்டியே அதிகம் தான்…

வெளிப்படையாய் சொல்கிறோம்
உரிய நேரத்தில் உரிய மருத்துவம்
கொடுக்க மறுத்து உனை
கொன்றது நாங்கள் தான்!

உனை அட்டைப் பெட்டிக்குள்
அடைத்ததற்கு,
பன்னீர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து பாவம் கழுவி விட்டோம்…
இப்போதும் சொல்கிறோம்
பெட்டி எங்களுடையது தான்.
அதில் உனை பார்சல் செய்தவன் தான் பன்னீர்செல்வம்…

சென்னையின் சேரியில் பிறந்து
அடுத்த வெள்ளத்தில் சாவதற்கு
பதிலாக இப்போதே கொன்று விட்டோம்…

வேண்டுமானால் எங்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு போ!

செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here