தேவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க
என்னை போட்டுத் தள்ளிய விஷ்ணுவை
ஆராதிக்கிறது உலகம்.

என்னை கொன்ற தினத்தை
மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையாக
கொண்டாட உத்திரவிட்டுள்ளனர்
நூலிபன்கள்.

ராம ராஜ்ஜியம் அமைக்க துடிக்கும்
காவி பாசிஸ்டுகள் ஆட்சியில்
பூணூல்கள் குதுகலிக்கலாம்
என் வாரிசுகளுக்கு ஏது குதூகலம்..

காலையில் எழுந்து கங்கா ஸ்நானம்
செய்ய வேண்டும் என்கிறது
தெய்வத்தின் குரல்..

எட்டு மாவட்டங்களின் விவசாயத்தை
கருக்கி அவர்களின் வாழ்வோடு
விளையாடும் காவிரியில் நீராட
என் சந்ததியினர் துடித்துக்
கொண்டுள்ளனர்.

கங்கா ஸ்நானத்தை பற்றி பேசும்
சங்கர மடங்கள் காவிரி நீரின்றி
துன்புறும் எனது சந்ததிகளின்
துன்பத்தை பேச மறுக்கிறது.

டெல்டா பாலைவனம் ஆகிறது!
உயிர்வலியின் வாதை புரியாமல்
கொண்டாட அழைக்கிறது
துணிக்கடைகள்.

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களை
தலையில் கட்டுகிறது
கார்ப்பரேட்டுகள்.

பட்டாசுகளை வெடிப்பதால்
சூழலியல் நாசம் என்று கூப்பாடு
போடுகிறது மேட்டுக்குடி கூட்டம்.

பட்டாசு வெடித்தாலும்
வெடிக்காவிட்டாலும்
அன்றாடம் எங்கள் வாழ்க்கை சூழல்
நாசமாவதை பேச நாதியில்லை..

பிற்போக்கு பண்டிகைகள் அனைத்தும்
கார்ப்பரேட் சரக்குகளுடன்
ஒன்றிணைந்து ஹைடெக் விழாக்களாக
மாறி நிற்கிறது.

புராணக் கதைப்படி என்னை
கொன்று ஒழித்த விஷ்ணு மட்டும்
காலம் தோறும் புதுப்புது
அவதாரம் எடுத்துக் கொண்டே
இருக்கிறார்.

கொல்லப்பட்ட நான் மட்டும் அதே
பெயரில் உங்களுக்கு
போதிக்கப்படுகிறேன். நரகாசுரன்
தேவர்களைப் பாடுபடுத்தினான்
என்று தூற்றப்படுகிறேன்.

என்னால் இதை சகித்துக் கொள்ள
முடியவில்லை. என்னை கொன்று
தன் வாரிசுகளை வாழ வைக்க
துடித்த மகாவிஷ்ணுவை
பழி தீர்க்க பூவுலகிற்கு
மீண்டும் வருகிறேன்.

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு
பட்டுக்கம்பளம் விரித்துள்ள
காவிகளின் கொட்டம் அடக்க
பாட்டாளி வர்க்கத்தின் வாரிசாய்
மீண்டும் வருகிறேன்.

  • கார்க்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here