தமிழணங்கு என இசைப்புயல் போட்ட பதிவின் பின்னனியில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான சுருக்கமான பதில்கள் :-
தமிழணங்கு எனச் சொல்லித் தமிழ் அன்னையினைக் கறுப்பாக வரைந்துள்ளார்கள்.
இத்தகைய கருத்தில் முதலிலேயே வெளித் தெரிவது கறுப்பு நிறம் மீதான ஒவ்வாமைதான். தமிழரின் நிறம் கறுப்பே, அதே நிறத்தில்தான் தமிழணங்கோ/ தமிழ்த்தாயோ இருக்கும். தமிழ்த்தாயும் கறுப்புத்தான்.
அணங்கு என்பது அன்னை என்பதிலிருந்து வேறுபட்ட சொல்லாகும். அணங்கு என்றால் பல வகைகளில் பொருள் கொள்ளலாமெனினும் இங்கு அச்சமூட்டக்கூடிய பெண்/ வருத்திக் கொல்லும் தெய்வமகள் என்ற பொருளிலேயே வரும் {அணங்கு சால் உயர் நிலை தழீஇ திருமுரு.289}. கொற்றவையின் தோற்றம் போன்றே இருக்கும் {இங்கு கொற்றவை என்ற சொல் கொல் என்ற வேரினைக் கொண்டிருப்பதையும், மிகப் பெருமளவான பழைய கொற்றவைத் திருவுருக்கள் வடக்கு நோக்கி போர்க் கருவிகளுடனிருப்பது, வடக்கிலிருந்து வரும் ஆதிக்கத்தினை எதிர்க்கவே என அறிஞர் தொ.ப கூறியிருப்பது நோக்கத்தக்கது} . எனவே தமிழணங்கினை அச்சமூட்டும் வகையில் வரைந்தது சரியே. தமிழின் எதிரிகள் அதனைக் கண்டு அஞ்சுவதும் இயல்பானதே.
இங்கு இப் படத்தினை கறுப்பு-சிவப்பு ஆகிய நிறங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ள பின்புலத்தினைப் பின்வரும் தொல்காப்பிய வரிகளைக் கொண்டு விளங்கிக் கொள்ள வேண்டும்.
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்’
:(தொல்.855)
வெகுளி = கடுங்கோபம்
000
மொழி என்பது வெறும் தொடர்பாடல் கருவி, அதற்கு ஏன் அன்னை, அணங்கு?
முதலில் மொழி என்பது வெறும் ஒரு தொடர்பாடல் கருவி மட்டுமல்ல, “மொழி ஒரு கருத்துத் தெரிவிக்கும் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது என Michael Tomasello என்ற அறிஞர் கூறுகின்றார். மொழியினை தொடர்பாடல் கருவியாகப் பார்த்து, அதன் உட்கட்டுமானங்களை ஆய்வு செய்வது ஒரு வகையான ஆய்வு ; மொழியின் சமூகச் செயற்பாடு பற்றியது இன்னொரு வகையான ஆய்வு (Sociolinguistics).
அண்மையில் மறைந்த அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள், தான் தொகுத்து எழுதிய ஈ.வெ.ரா சிந்தனைகள் என்ற நூலிலேயே பெரியாரின் மொழிச் சிந்தனைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார், அதில் மொழி ஏற்படுத்தக்கூடிய சமூகச் சிந்தனைகள் பற்றிக் (குறிப்பாக இந்தி-சமற்கிரத மொழி வழியிலான சிந்தனைகள் ஏற்படுத்தக்கூடிய சமூக விளைவுகள் பற்றி) குறிப்பிட்டுள்ளார்; இவை பற்றி மொழி ஒரு தொடர்பாடல் கருவி மட்டுமே, அதற்கு ஏன் இத்தனை அலப்பறை எனக் கேள்வி எழுப்பும் சிலவே சிலவான பெரியாரியக் கொள்கையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொன்று தமிழன்னை, தமிழணங்கு ஆகியவற்றுக்கு உருவமுண்டா? எனக் கேட்போருக்கு; அவை கற்பனையானவைதான், அவை மட்டுமல்ல குமரியில் வானுயர நிற்கும் வள்ளுவன், உலக வரை படத்திலுள்ள நாடுகளைக் குறிக்கும் கோடுகள், கோள வடிவான பூமியினைத் தட்டையாக வரைபடத்தில் வரைவது எனப் பல கற்பனையான வடிவங்களுண்டு. ஆண்டின் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய தொழிலாளரின் உரிமையினை, ஆண்டுக்கொரு நாள் ஒதுக்கி எவ்வாறு கொண்டாடுகிறமோ அது போன்ற ஒரு குறியீடே இதுவும்.
முடிவாக, தமிழணங்கு, தமிழ்த்தாய் என்பன ஒடுக்குமுறைகளுக்கெதிரான வடிவங்கள்; அவற்றினை உயர்த்திப் பிடிப்போம்.
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!
குகநாதன். வி. இ.