வரட்டு கௌரவம் பார்ப்பதிலும்,சாதிப்பெருமை பேசுவதிலும்,பைசா பிரயோசனமில்லாத பழம் பெருமை பேசுவதிலும் நம்மை விஞ்சுவதற்கு ஒருவருமில்லை.இது சாதிப்பெருமை பழம்பெருமையோடு நின்றுவிடுவதில்லை, சமீப காலமாக தமிழை நேசிக்கிறோம் எனும் பெயரில் மதவாதிகளைப் போல மொழிவாதிகள் நம் மத்தியில் அதிகமாகிப்போனது வேதனைக்குரிய விசயமாகும்.

மதம் எப்படி மதவாதிகளின் கண்களை மறைக்கிறதோ,அதே போன்றே மொழிவாதிகளின் கண்களை அதீத மொழிப்பற்றும் மறைக்கிறது. இத்தனைக்கும் தமிழை வளர்ப்பதற்கோ, முறையாக கற்றுக் கொள்வதற்கோ இவர்கள் முயல்வதில்லை. மாறாக கட்சி சார்ந்த அரசியலில் மட்டும் அதிகமானோர் ஈடுபடுகிறார்கள்.

மதவாதிகளுக்கு எப்படி அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே கண்களுக்கு உயர்வாகத் தெரிவார்களோ,அதே போன்றே மொழிவாதிகளுக்கும் அந்தந்த மொழி பேசுகிறவர்கள் மட்டுமே மனிதர்களாகத் தெரிவார்கள். இவர்களது மனிதநேயம் அந்தந்த வட்டத்திற்குள் மட்டுமே சுழலும்,அந்த வட்டத்தைத் தாண்டி சிந்திப்பதில்லை.

வடமொழியில் உள்ள வேதம் புராணங்களில் உள்ளவை அனைத்தும் கட்டுக்கதைகளே என்பதை ஒப்புக்கொள்ளும் மொழிவாதிகள், அதே கட்டுக்கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ள பக்தி இலக்கியங்களிலும் உண்டு என்பதை ஒப்புக் கொள்வதில்லை.

இப்படி மொழியை உயர்த்துகிறவர்கள், அந்த மொழி நூல்களை ஆழ்ந்து படிப்பதில்லை, பொத்தாம் பொதுவாக அரசியல் மேடைகளில் யாரோ உளறியதையெல்லாம் உண்மையென நம்பி ஏமாந்து போகிறார்கள். அப்படியானவற்றில் ஒன்றுதான் தமிழ் இலக்கியங்களில் (பக்தி இலக்கியம் உட்பட),வடமொழி சார்ந்த வேத வைதிக சனாதனக் கருத்து,புராணப் புரட்டு ஏதுமில்லை என்பது.

உணர்ச்சி மிகுதியால் தமிழ் நூல்களில் வைதிக சனாதனக் கருத்துக்களோ,வடமொழிப் புராணங்களில் உள்ள கட்டுக் கதைகளோ இல்லவே இல்லை என நம்புகிறார்கள். இப்படி உணர்ச்சிவசப்படுகிறவர்கள் வாசிக்க வேண்டியவற்றில் “தேவாரம் வேதசாரம்” எனும் நூல் முதன்மையானதாகும்.
இந்த நூல் முழுக்க முழுக்க பன்னிரு திருமுறை தேவார நூலில் உள்ளவை அனைத்தும் வடமொழி வேதங்களின் கருத்துக்களே என்பதை ஆசிரியர் ஶ்ரீ காசிவாசி சாம்பவஶ்ரீ செந்திநாதையரவர்கள் சான்றுகளோடு எடுத்துரைக்கிறார்.

வைதிக சனாதனிகளின் வேதம் மற்றும் புராண நூல்களின்படி சிவபெருமான் பிராம்மண வர்ணத்தைச் சார்ந்தவன் என்றே குறிப்பிடப்படுகிறது. சனாதனிகளின் நூல்கள் கூறும் வர்ணாசிரமக் கருத்தை தேவாரமும் வலியுறுத்துவதை “தேவாரம் வேதசாரம்” நூல் பின்வரும் பாடல்கள் மூலம் நிறுவுகிறது;

சிவபெருமான் தேவர்களுள்ளே பிராஹ்மணர்

த்வம் தேவேஷ ப்ராஹ்மண:

“நீவிர் (சிவபெருமான்) தேவர்களுள்ளே பிராஹ்மணராயுள்ளீர்” என்று சாமவேதீய சதபதப்பிராஹ்மணமும்,

ப்ராஹ்மணோயம் மஹாதேவ: க்ஷத்ரியோ விஷ்ணுரித்யபி

“மஹாதேவர் பிராஹ்மணர், விஷ்ணு க்ஷத்திரியர்” என்று தக்ஷகாண்டமுங் (கந்த புராணம்) கூறுகின்றன.

தையலா ளொருபாகஞ் சடைமேலா ளவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோ ரந்தணனா ருறையுமிடம்
மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

திருஞான சம்பந்தர் தேவாரம், இரண்டாம் திருமுறை, 043 திருப்புள்ளிருக்குவேளூர், பாடல் எண்.2(2.43.2)

வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென்
றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை, 062 திருவாலவாய், பாடல் எண்.1(4.62.1)

தேவாரம் மட்டுமல்லாது பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகமும் சிவபெருமானை பிராம்மணர் என்றே புகழ்ந்து பாடுகிறது. இதற்குச் சான்றாக திருவாசகத்தில் உள்ள ஒரு பாடலைத் தருகிறேன்,

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமாஎன்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே
மாணிக்கவாசகர், திருவாசகம், எட்டாம் திருமுறை, 27புணர்ச்சிப் பத்து, பாடல் எண்.10

  • தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here