GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?

Go back Modi என்பது தமிழகத்திற்கு மோடி வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் haystack போடுவது என்ற வடிவத்தில் உள்ளது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது எதிர்ப்பு தெரிவிப்பதா என்று கேட்கின்ற அறிஞர்கள் கூட்டம் பெருத்துக் கொண்டே வருகிறது.
மோடி அடிப்படையில் ஒரு பாசிஸ்ட்.
அதுவும் ஹிட்லரைப் போல நிதி மூலதனத்தின் ஆக கேடான வடிவத்தில் இருந்து பிறந்த பாசிஸ்ட் மட்டுமல்ல.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமூகத்தை நால்வர்ண அடிப்படையில் பிரித்து அடக்குமுறை செலுத்தி வரும் பார்ப்பன மேலாதிக்க சக்திகளின் குரலாக ஒலிக்கின்ற பாசிஸ்ட்.

இந்தியாவை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், அந்த நிறுவனத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கின்ற CEO போலவும் செயல்படுகின்ற ஒரு பாசிஸ்ட். அத்தகைய பாசிஸ்டையும், அவர் முன்னிறுத்தும் கார்ப்பரேட்- காவி பாசிசத்தையும், இந்தியாவை விட்டு #GoBackModi என்று விரட்டியடிக்க வேண்டியுள்ளது.

ஆனால் வரலாற்று விபத்தாக நாம் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதும் இங்கு உள்ளவர்களை உடனடியாக பார்ப்பன எதிர்ப்பு கருத்தியலுக்கு ஆட்படுத்த முடியும், பாசிசத்தை பற்றி புரிந்து கொள்ள வைக்க முடியும் என்ற நிலைமையில் இருந்து #GobackModi என்று சொல்கிறோம்.

இத்தகைய புரிதலுடன் தோழர் இ.பா. சிந்தன் எழுதியுள்ள முகநூல் பக்கத்திலிருந்து கட்டுரையை வெளியிடுகிறோம்.

000

இந்தியா முழுமைக்கும் ஒரு திட்டத்தையும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான திட்டங்களையும் வகுத்துத் தான் ஆட்சியதிகாரத்தை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கைப்பற்றிவருகிறது.

ஒரு மாநிலத்தில் இராமனென்றால், மற்றொரு மாநிலத்தில் மாட்டுக்கறி. இது எதுவுமே சரிவராத மாநிலத்தில், அங்கே முன்னணியில் இருக்கிற கட்சிகளின் உதவியோடு காலடி எடுத்துவைத்து உள்ளே நுழைந்துவிடுவது பாஜகவின் கடைசி ஆயுதம். அப்படியாக மேற்குவங்கத்தில் ஜீரோவாக இருந்த பாஜக, மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைத்து, அதன் உதவியுடன் மெகா வளர்ச்சியடைந்து இன்றைக்கு அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது.

அதேபோல பாஜக என்கிற கட்சியே இல்லாமல் இருந்த தமிழகத்தில் காலங்காலமாக பார்ப்பனிய எதிர்ப்பினால் வளர்ந்திருந்த திராவிடப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிற திமுகவுடனேயே கூட்டணி வைத்து தமிழகத்தில் தடம்பதித்துவிட்டது பாஜக. ஒரு சாரணர் இயக்கத் தேர்தலில் கூட வெற்றிபெறத் தகுதியற்ற ஹெச்.ராஜாவை எம்எல்ஏ ஆக்கி சட்டமன்றத்தில் உட்காரவைத்து ஐந்தாண்டுகள் அழகு பார்த்ததே திமுக தான். திமுகவே கூட்டு வைத்தபிறகு கொள்கையே இல்லாத கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்ததை என்னவென்று சொல்லமுடியும்.

பாஜக ஒரு தீண்டத்தகாத கட்சி என்கிற மக்களின் பொதுப்புத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அக்கட்சியும் மற்ற கட்சிகளைப் போன்றதொரு கட்சிதான் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியது இந்தப் புள்ளி தான்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு அதிமுக பாமக என தமிழகத்தின் பல்வேறு கட்சிகளில் ஊடுருவி தமிழகம் முழுவதும் தனது கிளைகளை பாஜக விரித்துக்கொண்டிருக்கிறது.

பிரியாணி அண்டா திருடர்கள் என்று நாம் கிண்டல் செய்தாலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அவர்கள் தான் முன்னிறுத்தப்படுகிறார்கள். கிண்டல் செய்வதானாலும் கேலி செய்வதானாலும் கூட தினமும் பாஜக இல்லாத விவாதங்களோ சண்டைகளோ இல்லாத சூழல் உருவாகியிருக்கிறது. இதெல்லாமே பாஜகவிற்கு வெற்றிதான்.

பாஜக நுழைந்த எந்த மாநிலமும் உருப்பட்டதாக வரலாறோ பூகோளமோ இல்லை. அண்டை தேசமான வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்திருக்கிற போதும், எல்லைப் பிரச்சனை கூட இல்லாமல் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சிக்காலத்தில் அமைதியான மாநிலமாக இருந்த திரிபுரா இன்றைக்கு பாஜக ஆட்சியில் அனுதினமும் எரிந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவின் நிலையும் அது தான் இன்றைக்கு.

அதனால்… அதனால்… அதனால்… ஏற்கனவே செய்த தவறுகளை தவறுகள் தான் என்று புரிந்துகொண்டு, பாஜகவிடம் இருந்து பல அடிகள் தள்ளிநிற்பதோடு மட்டுமல்லாமல் கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை மற்ற அனைவரையும் விட திமுகவிற்கு தான் அதிகம் உண்டு.

ஆகவே #GoBackModi என்பதன் பொருளானது, மோடியே திரும்பப்போ என்பது மட்டுமல்ல. மோடியே, நீயும், உன்னுடைய பாஜகவும், அதன் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ் உம், அதன் தத்துவமான பார்ப்பனியமும் எங்களுக்குத் தேவையில்லை… ஒட்டுமொத்தமாக திரும்பிப்போங்கள் என்பதே பொருள்..

இ.பா.சிந்தன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here