அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றவுடன் கொதிக்கும் குடுமிகள் தூய்மை பணியாளர் பணிக்கு கொதிக்கும் நிலையை உருவாக்குவது எப்படி.
காலம் மாறிவிட்டது என்றால் இரண்டு அரசுப் பணியையும் மாற்றி செய்தால் என்ன?
கனவான்களே! இதனை அக்கிரமம் என்று நீங்கள் சொல்லலாம்.நாங்கள் கலகம் என்று சொல்வோம்.
கையுறைகூட இல்லாமல் சாக்கடைக்குள் இறங்கிய தூய்மைப் பணியாளர்! – வேலூர்.
சுகாதார மருத்துவர்கள்’ என அழைக்கப்படும் தூய்மைப் பணியாளர்களின் அவலநிலையும், அவர்கள் படும் வேதனையும் இன்னும் மாறவில்லை. அப்படியேதான் தொடர்கின்றன. தங்களின் உடலை வருத்திக்கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, காலணி, தலைக்கவசம், சோப்பு என முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு, பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் அறிவுறுத்துகிறது. இதையெல்லாம் தெரிந்தும், வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சாதாரண கையுறையைக்கூட வழங்காமல் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவிடுவது, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் எனத் தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார்கள், மாநகராட்சி அதிகாரிகள்.
இதனால், நுரையீரல் பாதிப்பு, காசநோய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்றவற்றுக்கு இலக்காகிவிடும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், தூய்மைப் பணியாளர்கள். கால்வாய்களில் இரும்புக் கம்பிகளை விட்டு அடைப்பைச் சரிசெய்தாலும், கைகளால்தான் கழிவுகளை அள்ளுகிறார்கள். உறை அணியாததால் கால்வாய்களில் புதைந்திருக்கும் கண்ணாடி மற்றும் இரும்புக் கம்பிகள் கை, கால்களைக் குத்தி பதம் பார்க்கிறது. பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதுடன் சில சமயங்களில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படும் அச்சமும் நிலவுகிறது.
வேலூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளிலும் இந்த அவலநிலை தொடர்கிறது. இந்த 60 வார்டுகளும் நிர்வாக வசதிக்காக நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுகாதார அலுவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும், தூய்மைப் பணியாளர்கள் நலனில் அதிகாரிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மூன்றாவது மண்டலத்தில் நிரந்தரப் பணியாளராக உள்ள வயது முதிர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர், கழிவுநீர் சாக்கடையில் இறங்கிச் சுத்தம் செய்வதைப் பார்த்து அதிர்ந்துபோனோம். கையுறை, காலணி உட்பட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் அணிந்திருக்கவில்லை.
சலவன்பேட்டை குட்டைமேடு கோலக்காரத் தெருவிலுள்ள பள்ளி அருகிலுள்ள சாக்கடை கானாற்றில் இறங்கிய அவர் வெறும் கைகளாலேயே கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தார். கானாற்றில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களையும், வாட்டர் பாட்டில்களையும் எடுத்து மேல் பகுதியின் ஓரம் வைத்துக்கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, ‘பழகிப் போச்சி’ என்ற வார்த்தையுடன் முடித்துக்கொண்டு கழிவுகளை அகற்றுவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

அடைப்புகளை அகற்றும் சுகாதார பணியாளர்
இதுவும், ஒரு விதமான சாதிய ஒடுக்குமுறையே என்று கடுகடுக்கிறார்கள், வேலூர் மக்கள். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மூன்றாவது மண்டல சுகாதார அலுவலர் லூர்து சாமியிடம் பேசினோம். ‘‘அந்த தூய்மைப் பணியாளர் 15 நாள்களாக மெடிக்கல் லீவில் இருந்துவிட்டு இப்போதுதான் பணிக்குத் திரும்பியிருக்கிறார். அடைப்பு இருக்கிறதா என்று கால்வாயில் இறங்கிப் பார்த்துள்ளார். மற்றபடி, சுத்தம் செய்ய இறங்கவில்லை. இதுமாதிரியெல்லாம் செய்யக்கூடாது என்று தூய்மைப் பணியாளர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்துகிறோம்’’ என்றார்.
அந்த தூய்மைப் பணியாளர் விடுமுறை எதுவும் எடுக்காமல் தொடர்ந்து பணிக்கு வந்துக்கொண்டுதான் இருக்கிறார் என்கின்றனர் அவர் தொடர்ந்து வேலை செய்தததைப் பார்த்தவர்கள். அதேபோல், அடைப்பு இருக்கிறதா என்று கால்வாயில் இறங்கிப் பார்த்ததாக சுகாதார அலுவலர் கூறியதும் பொய் என்பதை புகைப்படங்களே விளக்குகின்றன.
Thanks: Vikatan EMagazine