ரு எழுத்தாளர் தான் எழுதுவதெல்லாம் ‘நிஜத்தில்’ அச்சுபிசகாமல் நடக்கிறது. அதனால் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். தனக்கு பாதுகாப்பு வேண்டும் என போலீசிடம் கோருகிறார். அவர் ஏதோ உளறுகிறார் என அலட்சியம் செய்கிறது.

அவர் எழுதியது போலவே தமிழகத்தின் டிஜிபியின் மகள் கடத்தப்படுகிறாள். எழுத்தாளர் மீதே சந்தேகம் வருகிறது. தேடி வந்து அவரை கைது செய்து உண்மையை சொல்ல வைக்க முயல்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால், ‘எந்தவித’ களேபரமும் நடந்துவிடக்கூடாது என்பதில் அமைச்சர் போலீசுத்துறையை எச்சரிக்கை செய்திருக்கிறார்..

ஆகையால், மகள் கடத்தப்படவில்லை என ஊடகத்திடம் தெரிவித்துவிட்டு, ஒரு போலீசு அதிகாரியான நாயகனை வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கிறார். அவர் மெல்ல மெல்ல நூல் பிடித்து அந்த கடத்தலை ஆராய்ந்தால், அதன் பின்பு ஒரு பெரிய அதிர்ச்சியான சம்பவம் சம்பந்தப்பட்டிருக்கிறது. பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் சட்டத்தை மதிக்காத ஆட்கள் முதலில் யார் என பட்டியலிட்டால், குற்றவாளிகள் முதலில் வருவார்கள் என உங்கள் மனதில் தோன்றினால், அழித்துவிடுங்கள். முதலில் போலீசு தான் அதில் முதல் இடம் பிடிக்கும். சட்டம் எல்லாம் மக்களுக்கு தான். தங்களுக்கு இல்லை என்பதை உண்மையிலேயே நம்புவது அவர்கள் தான். அதனால் தான் சட்டம் என்ன எழுதி வைத்திருந்தாலும், நடைமுறையில் கடைப்பிடிப்பதேயில்லை.

கைது செய்து, குற்றத்தை பதிவு செய்து, உதைக்காமல், வதைக்காமல் நீதிபதி முன்பு ஒப்படைத்து, சிறையில் ஒப்படைப்பது தான் போலீசின் வேலை. ஆனால் கையை, காலை உடைப்பார்கள். தான் எழுதிய கற்பனைக் கதையை கிளிப்பிள்ளை போல சொல்லவில்லை என்றால் உயிர்போகும் வரை அடிப்பார்கள். அப்படி கடந்த 20 வருடங்களில் போலீசு காவலில் இருந்த பொழுது கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 1888 பேர். இது எண்ணிக்கையாக தெரியும் பொழுது, இதன் வீரியம் நமக்கு தெரியாமல் போகலாம். தன் குடும்பத்தில் ஒருவரை இழந்த ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால், இதன் முழுப் பரிமாணத்தையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். இத்தனை கொலைகளில் தண்டிக்கப்பட்ட போலீசின் எண்ணிக்கை 26 பேர் மட்டும் தான். சதவிகித கணக்கில் 1.3%. அநியாயம்.


இதையும் படியுங்கள்: தெலுங்கானா என்கவுண்டர்: போலீசு செய்த படுகொலை!


 

அது போல தான், மோதல் கொலைகளும்! (Encounter murder). 2014 துவங்கி 2019 வரை 837 கொலைகள் போலீசால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப்பிரதேசம் தான் முன்னிலையில் இருக்கிறது. எதிர்த்தா புல்டோசரை விட்டு இடி. நிறைய குடைச்சல் கொடுத்தா, போலி என்கவுன்டரில் ஆளைப் போடு.

இப்படி போலீசே கொல்லும் கொலைகளில் 99% போலி மோதல் கொலைகள் தான். பல கொலைகளை ஆய்வு செய்த உண்மை அறியும் குழுக்கள் ஆதாரத்துடன் அதைத்தான் உறுதி செய்கின்றன. ஒவ்வொரு என்கவுன்டருக்கு பின்பும் போலீசின், அதிகார வர்க்கத்தின் நிறைய இலாப கணக்குகள் உண்டு.

மக்களும் இதன் பின் உள்ள அபாயம் அறியாமல், பாலியல் பலாத்காரம் போன்ற மிகவும் உணர்வுபூர்வமான விசயங்களில் போலீசின் என்கவுன்டரை ஆதரித்து நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டி தள்ளிவிடுகிறார்கள். மக்களின் உளவியலை புரிந்துகொண்டு போலீசும் போட்டுத்தள்ளுகிறார்கள்.

இந்த போலி மோதல் கொலைகளை எல்லாம் ஆய்ந்து எழுதவேண்டிய ஊடகங்கள், போலீசு என்ன எழுதி தருகிறதோ அதையே வாந்தி எடுக்கிறார்கள். ஆகையால் ஒரு என்கவுன்டர் நடந்தது என எழுதும் பொழுதே, அவர் வழிப்பறி செய்தார். கொள்ளையடித்தார். கொலை செய்தார். அவர் மீது இத்தனை வழக்குகள் இருந்தன என்பதை சேர்த்து எழுதும் பொழுது, இவர் கொல்லப்பட வேண்டியவர் தான் மக்களின் மனநிலையை ஏற்பதற்கு தயார்ப்படுத்திவிடுகிறார்கள். இந்த பொழப்புக்கு! கேவலம்.


இதையும் படியுங்கள்: இளைய தலைமுறையை காட்சி போதைக்குள் ஆழ்த்தும் சினிமாக்கள்!


தேஜாவு என்றால்… ஒரு இடத்திற்கு முதல்முறையாக போகிறோம். ஆனால் ஏற்கனவே வந்த மாதிரியே இருக்கும். இதை தேஜாவு என்கிறார்கள். ஒவ்வொரு என்கவுன்டர் நடக்கும் பொழுது இப்படித்தானே 30 வருடத்திற்கு முன்பு நடந்தது. 10 வருடத்திற்கு முன்பும் இப்படித்தானே நடந்தது.  நேற்றும் இப்படித்தானே கொன்றார்கள்? என நமக்கும் தோன்றிக்கொண்டே தான் இருக்கிறது.

அப்படி நடந்த ஒரு போலி மோதல் கொலைகளையும், அதன் பின்பு உள்ள ஆளும், அதிகாரத்தின் உள்ளவர்களின் இலாப கணக்குகளைத் தான் படம் பேசுகிறது. அருள்நிதி, மதுபாலா. காளி வெங்கட், மைம் கோபி என பலரும் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் அரவிந்த் சீனிவாசனுக்கு முதல்படம். பத்திரிக்கையாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கிறார் என்கிறார்கள். அரசியல் படமாக முன்வைக்காமல், ஒரு திரில்லராக முன்வைத்திருக்கிறார். முதல் திரையரங்குகளில் சமீபத்தில் வெளிவந்தது. விரைவில் ஓடிடிக்கு வரும். பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here