அனல் மேல் பனித்துளி | சினிமா விமர்சனம்

இங்கு பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்ணோ, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணோ ”அவமானத்திற்கு” பயந்துகொண்டு தன் சொந்த பந்தங்களை மீறி, புகார் கொடுப்பது என்பது பெரிய சவால் தான்

0

சினிமா விமர்சனம் 

நாயகி சென்னையில் விளையாட்டுத் துறை சம்பந்தமான பொருட்கள் விற்கும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அவருக்கு தன் காதலனுடன் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. இந்த சமயத்தில் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு சொந்த ஊரான கொடைக்கானல் அருகே திருமணம் நடக்கிறது. அங்கு தனியாக போகிறார்.

திருமணத்தில் கலந்துகொண்ட பிறகு, கிடைத்த நேரத்தில் கொடைக்கானலில் சில இடங்களை சுற்றிப் பார்க்கலாம் என செல்லும் பொழுது, மூன்று பேரால் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார். தட்டுத்தடுமாறி நடந்து வந்து அருகே உள்ள போலீஸ் ஸ்டேசனில் வந்து புகார் தருகிறார். அவள் சொன்னதன் அடிப்படையில் சந்தேகம் கொண்ட ஆட்கள் மீது விசாரணை தொடர்கிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கும் பொழுதே யார் இதை செய்தது என்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். மேலும் மேலும் அவளுக்கு நெருக்கடி முற்றுகிறது.

பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்ததா? என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு எளிய கதை. நிறைய மனிதர்கள். நிறைய சம்பவங்கள் இல்லை. ஆணாதிக்க வக்கிர குணம் கொண்டவர்கள் ஒரு பெண்ணை சூறையாடுகிறார்கள். அவளுடைய உடலை படம்பிடித்து, அவளுக்கு எதிராகவே அதை பயன்படுத்துகிறார்கள். மானத்துக்கு பயந்து, அமைதியாக ஒதுங்கி இருப்பதா, துணிந்து வெளியே சொல்லி, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதா என்பதில் ஒரு பெண் தனக்குள்ளே நடக்கும் உளவியல் சிக்கலை நன்றாக படம் பதிவு செய்திருக்கிறது. நம் உடலை பாலியல் வன்புணர்வு செய்தவர்களே எப்படி ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதில் உள்ள அபத்தத்தை உணர்ந்து, தண்டனை வாங்கித் தரும் முடிவை எடுத்தது சரியான முன்நகர்வு. படத்தை இயக்கிய கெய்சர் ஆனந்த் அவர்களுக்கும், தயாரித்த இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள். ஆண்ட்ரியா, அழகம்பெருமாள், இளவரசு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: தேஜாவு (2022) ஒரு பார்வை!

பாதிக்கப்பட்ட பெண்ணை நிலைமையின் சிக்கலை உணர்ந்தும், அந்த பெண் போலீஸ் அதிகாரி நாயகியை போலீஸ் ஸ்டேசனிலேயே அந்த நள்ளிரவில் அம்போவென விட்டு செல்வது ஒட்டவேயில்லை. சின்ன சின்ன குறைபாடுகள் இருந்தாலும் பார்க்கவேண்டிய வேண்டிய படம்.

 

மற்றபடி, படத்தில் புகாரை பதிவு செய்து, தண்டனை கிடைப்பது எல்லாம் வேகமாக நடைபெறுவது போல காண்பித்திருக்கிறார்கள். நடைமுறையில் அப்படி சாத்தியமில்லை. இங்கு பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்ணோ, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணோ ”அவமானத்திற்கு” பயந்துகொண்டு தன் சொந்த பந்தங்களை மீறி, புகார் கொடுப்பது என்பது பெரிய சவால் தான். அப்படியே புகார் கொடுக்க முடிவெடுத்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது புகார் கொடுப்பது என்பது இன்னும் சவால். போலீசு எப்பொழுதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சார்பாகவே நடந்துகொள்ளும். புகாரை பதிவு செய்வதற்கே நீதிமன்றத்தில் முறையிட்டு, போராடி ஒரு உத்தரவை வாங்கி வந்தாலும், அதை மதித்து போலீசு புகாரை பதிவு செய்யும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இலட்சக்கணக்கான நீதிமன்ற உத்தரவுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் போராடி… வழக்கை போலீசு பதிவு செய்தாலும், வழக்கு என்பது பல ஆண்டுகளாக இழு, இழுவென இழுத்தடித்தக்கப்பட்டு.. தீர்ப்பு வெளிவரும் பொழுது… வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் வயதாகி செத்துப் போயிருப்பார்கள். சிலர் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று உச்ச பதவிகளில் ஜம்மென உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்.

இந்த எதார்த்த நிலையில் தான் இந்தியாவில் பாலியல் வன்புணர்வு (Rape) வழக்குகள் 2016ல் 38947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை யோசித்தால், எத்தனை வன்புணர்வுகள் மறைக்கப்படுகின்றன என்பதின் தீவிரத்தன்மயை உணரமுடியும். 2021ல் 31677 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 100 பேர். ஒரு மணி நேரத்திற்கு நான்கு பேர். இந்த கட்டுரை எழுதி முடிப்பதற்குள் நான்கு பேர் என்பதை கணக்கிடும் பொழுது பதறுகிறது. இது தான் இன்றைய இந்தியாவின் எதார்த்த நிலையாக இருக்கிறது. நாம் நாகரிக சமூகம் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் பல படிகள் முன்னேற வேண்டியிருக்கிறது.

தில்லியில் ”நிர்பயா” கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் உலகெங்கிலும் எதிரொலித்தது. தில்லியில் மக்கள் போராட்டத்தால் பல நாட்கள் அதிர்ந்தது. நிலைமையை சமாளிக்க ஒன்றிய அரசு நீதிபதி வர்மா தலைமையில் கமிசனை நியமித்தது. மிகப்பெரும்பாலான மாநில அரசுகள் வர்மா கமிசனுக்குத் தம் கருத்துகளை, பரிந்துரைகளை, அறிக்கைகளை அனுப்பவேயில்லை. அதற்காக வர்மா கமிசன் தெரிவித்த கண்டனங்களையும் கண்டுகொள்ளவேயில்லை. பெண்களின் மீதான ஒன்றிய அரசின், மாநில அரசுகளின் அக்கறையின் லட்சணம் இவ்வளவு தான்.

ஒவ்வொரு மார்ச் 8 பெண்கள் தினம் அன்று “பெண்கள் நாட்டின் கண்கள்” என வெறும் வாயால் சல்லியடிக்காமல், உண்மையிலேயே பெண்களின் முன்னேற்றத்துக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுத்தால் மட்டுமே நிலைமையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தமுடியும். இல்லையெனில் நடக்கிற எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து புலம்புகிற அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

Sony Livல் வெளிவந்திருக்கிறது. பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here