காகம் என்று சொன்னவுடன் அதை ஓர் சமுதாய தோட்டி என்று கூறுவது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதே போல கழிவுகளை சுத்தம் செய்யும் கழுகு, பருந்து போன்ற பறவைகளை “பிணந்தின்னிகள்” என்று கூறுகிறோம்.

காயம் பட்ட ஓர் கழுகை விலங்கியல் மருத்துவரிடம் கொண்டு காண்பித்தால் அவர் அதை Non vegetarian என்று கூறி சிகிச்சை தர மறுக்கிறார்.
ராமாயணத்தில் வரும் ஜடாயு என்ற கழுகு கூட பரிதாபமாக இறந்து போகிறது. இராவணனை எதிர்த்து போர் செய்து சீதையை காப்பாற்ற முயற்சி செய்த ஜடாயு வம்சத்திற்கு பிணந்தின்னிகள் என்று பெயர் வைத்திருப்பது ஓர் முரண்நகை!

All that breathes என்று ஒரு ஆவணப்படம் பார்த்தவுடன் வந்த சிந்தனை! இரண்டு சகோதரர்கள் ( சௌட் – Saud & நதீம் Nadeem) கழுகுகளுக்கு சிகிச்சை செய்து அதில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். டெல்லி நகரை சுற்றி ஏராளமான கழுகுகள் உள்ளன. (தயவுசெய்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சொல்லவில்லை என்று உறுதி கூறுகிறேன்).

இசுலாமியர்கள் வாழும் பகுதிகளில் இறைச்சி கழிவுகள் அதிகம் இருப்பதால் அதை உண்ண வரும் கழுகுகள் சில நேரங்களில் அடிபட்டு காயமடைகின்றன. அந்த கழுகுகளுக்கு இந்த சகோதரர்கள் சிகிச்சை செய்கின்றனர். தங்களது வீட்டையே கழுகுகளின் மருத்துவமனையாக மாற்றம் செய்து விடுகிறார்கள். இந்த சேவைக்காக உள்ளூர் மக்கள் கொடுக்கும் நன்கொடை பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி கிடைக்கிறது. காயம் பட்ட மற்றும் ஆதரவற்ற சிறு குஞ்சுகளை கண்டெடுத்து அவற்றிற்கு மருத்துவ பராமரிப்பு செய்து வளர்ந்ததும் வெளியே சுதந்திரமாக பறக்க விடுகிறார்கள். இறந்து போன பறவைகளை அவர்களே அடக்கம் செய்கிறார்கள்.

இந்த கழுகு பாதுகாப்பு சேவை காரணமாக வீட்டில் உள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது அதை கடந்து செல்லும் மனநிலையை வளர்த்து கொண்டு விட்டார்கள். ஒரு கட்டத்தில் டெல்லி நகரில் நடக்கும் கலவரங்கள் இவர்கள் வசிக்கும் பகுதி வரை நீள்கிறது. இப்போது உள்ள ஒன்றிய அரசு தொண்டு நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெறுவதற்கு தடை (FCRA) விதித்தவுடன் கொஞ்சம் நிதித் தட்டுபாடு ஏற்படுகிறது. இதையெல்லாம் கடந்து சகோதரர்களில் ஒருவர் இது பற்றி மேற்படிப்பு மற்றும் பயிற்சி பெற அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் அமெரிக்காவில் இருந்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதுடன் ஆவணப்படம் நிறைவுறுகிறது.

இதையும் படியுங்கள்:

ஆவணப்படத்தின் பின்னணியில் டெல்லி நகரை பாதிக்கும் காற்று மாசு இந்த பறவைகளையும் பாதிக்கிறது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர். ஆவணப் படத்தின் தொடக்கத்தில் அணுகுண்டு வீச்சு பற்றி பேசிக் கொள்வது வருகிறது. அப்போது இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்த கழுகுகள் தான் அந்த உடல்களை தின்று சுத்தம் செய்யும் என்று பேசுவார்கள். டெல்லி நகரை சுற்றி கொட்டப்படும் கழிவுகளில் மாதம் ஒன்றுக்கு சுமார் ஐந்து டன் கழிவுகள் இந்த பறவைகளால் தின்று சுத்தம் செய்யப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டால் இந்த சகோதரர்கள் செய்வது மாபெரும் தொண்டு என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

படத்தின் ஊடாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டம் பற்றி மெலிதாக தொட்டு செல்லும் காட்சி உள்ளது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரம் பற்றிய காட்சியும் வந்து போகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்படாமல் ஆர்ஆர்ஆர் என்ற சங்கிப் படத்தின் குத்துப் பாட்டுக்கு விருது வழங்கப்பட்டதை கண்டித்து தலைசிறந்த ஆவணப் பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் கோபப்பட்டது நியாயம்தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஞானசூரியன் மு.
முகநூலில் இருந்து…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here