மஞ்சள் பை


வேட்டி சட்டை மட்டுமல்ல
தாத்தாவின் தலையும் மனசும்
அம்மன்கோவில் மேட்டில்
பூத்த தும்பைப் பூ

ஊரிலிருந்து அவர்
கொண்டுவரும்
பைக்கு மட்டும் மஞ்சள் நிறம்

வீராணம் ஏரியில் பிடித்த விரால் மீன்
ஏரிக்கரையோர கொடிக்காலில்
பழுத்த பச்சைநாடா
ஈயம் பூசிய அலுமினியத் தூக்கில்
ஆயா கொடுத்துவிட்ட திரட்டுப்பால்
அடங்கிய மஞ்சள் பை

கஸ்தூரிபா ஜவுளிக்கடையிலிருந்து
செல்லஞ்செட்டி நகைக்கடையிலிருந்து
தை பிறந்த போதெல்லாம்
தாத்தா வாங்கி வந்த மஞ்சள் பை

மஞ்சள் பைகளை
அம்மா துவைப்பாள்
நைந்து தையல் பிரிந்தபோது
ஊசிநூலால் தைப்பார் அப்பா

கிழக்கு சீமையில் கிடைக்காத
கத்திரிமேட்டு நிலக்கடலையை
செம்பிடுப்பு மரவள்ளியை
மோர்சார் கொல்லை மாங்காயை
நோட்டன்காரன் வயல் கேழ்வரகை
தாய்வீடு கொடுத்தனுப்புவாள் அம்மா

மஞ்சள் பைகளில்
சுபச்சடங்கு பத்திரிகைகளை
வெற்றிலை பாக்கை
மலர்களை எடுத்துவந்தார்கள் உறவுகள்

பள்ளிக்கூடம் சேர்த்தபோது
கல்சிலேட்டை அரிச்சுவடியை
மஞ்சள் பையிலேந்தி சென்றோம்
மஞ்சள் பையைத் திறந்துதான் இடைவேளையில்
புளிச்சக்கீரை சோற்றை
டிபன்பாக்ஸ் மூடியில்
வைத்து தந்தாள் அஞ்சலை

மஞ்சள் பைகளை அம்மாக்கள் மண்சுவரின் ஆணிகளில்
மாட்டி வைத்திருந்தபோது
விளக்குத் தண்டுகள் மீது
எரிந்த சிமினி குடிசையின்
இருளை அசைத்தது

வடக்குக்காட்டில்
தானியங்கள் பெருகின
ரெட்டை வாய்க்காலில் நீரோட
மீன்களும் நண்டுகளும்
நீந்தி இன்புற்றன

சினைப்பசுக்கள் குறைந்த
பிரசவ வலியில்
கன்றுகளை ஈன்றன

குப்பைக்குழிகளில்
மண்புழுக்களை சேகரித்த சிறுவர்கள் குரவைமீன்களுக்கு தாமரைக்குளத்தில் தூண்டில் வீசினார்கள்

விதைகளும் பருவங்களும்
கனவுகளும் செல்வமும் தளும்பிய
மஞ்சள் பைகள் தொங்கிய
பொற்காலம் அறுந்து விழுந்தது

சாஷேக்களில் ஷாம்பையும்
பாலிதீன் பைகளில் விதைகளையும்
நெகிழிக்குப்பிகளில் பானங்களையும் தந்த அமெரிக்கா
மஞ்சள் பைகளைப்
பிடுங்கிக் கொண்டது

மஞ்சள் பை அழிந்தபோது
தாத்தா செத்துப்போனார்
விதை நெல்லும் குரவை மீனும்
மண்புழுவும் காணமல்போனது

புவி வெப்பமயமாகும் பீதியில் பிளாஸ்டிக்கை
ஒழிப்போமென்கிறது
கொக்கோ கோலா

மஞ்சள் பையை எடுக்கச்
சொல்கிறார் சிஎம்

கையை 19 ஆம் நூற்றாண்டில் துழாவிப்பார்க்கிறேன்

எடுக்க முடியாதபடி
ஒரு பொற்காலத்தின்
கீழடியில் காதறுந்து கிடக்கிறது
தாத்தாக்களின் மஞ்சள் பை

இரைப்பையில் கேஎஃப்சி செரிமானத்துக்கு பெப்ஸி
ஓடிடியில் டிஸ்டோபியன் சினிமா
தலையில் விகேர்

சூழல் ‘பை’யன்கள்
மஞ்சள் பை
அமேசானில் கிடைக்கிறதா?
ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறதா?
விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்!

  •  கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here