இலக்கிய தாகம்

இலக்கியத் தாகம் இல்லாதவர்களும்
இலக்கியம் அனாவசியம் என்பவர்களும்
இலக்கியம் போதையென ருசிப்பவர்களும்
வெளியிலுள்ள ஆபத்துக்களை அறியாமல்
கண்ணாடி உலகில்
சுதந்திரமாக நீந்தும்
முட்டாள் மீன்கள்
வந்த வழியை மறந்தவர்கள்
செல்லும் பாதை புரியாதவர்கள்
பொருளியல் போக்கை உணராதவர்கள்
பண்பாட்டை உயர்த்த முயலாதவர்கள்
அரசியல் தெளிவு இல்லாதவர்கள்
மனித மாண்புகளைப் புதைத்தவர்கள்

மொத்தத்தில் இவர்கள்தான்
மன வளர்ச்சியற்ற முடவர்கள்
தம்மை முழு மனிதரென
தாமே நம்பிக்கொள்ளும் கோமாளிகள்

உண்மையில்
இலக்கிய உணர்வற்ற இத்தகைய நோயாளிகள்
பாசிசப் பாம்பும்
இலாபவெறி கழுகும்
சூழ்ந்திருக்கும் வாழ்வில்
குஞ்சுகளை மறந்து இரைபொறுக்கி பிழைக்கும்
பொறுப்பற்ற மனிதர்கள்

அறிவு முதல் ஆழ்மன உணர்வுவரை
மனிதகுலத்திலிருந்து அறுபட்டவர்கள்
இயற்கையின் அரவணைப்பை மதிக்காதவர்கள்
எதார்த்தத்தின் இதயத்துடிப்பை உணராதவர்கள்
சுயநல வெறி புழுவாய் நெளிபவர்கள்
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகள்
மனிதகுல இலக்குகளில் துளியும் எண்ணமில்லாதவர்கள்
குப்பைத்தனமான இலக்குகளை மூச்சில் சுமப்பவர்கள்
மனிதர்களால் பிழைப்பவர்கள்
ஆனால்
மனிதர்களாக இல்லாதவர்கள்
நாளைய தலைமுறைகளின் இன்றைய கல்லறைகள்

மனித செயல்களில்
உயர்ந்த இலக்கிய வெளிப்பாடு
இல்லாத சமூகம்
சமூகமல்ல
வெறும் நடைபிணம்

புதியவன்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here