ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த நாவல் இது.  இப்பொழுது புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

கதையை ஒரு பறவைப் பார்வை பார்த்தால்….

1990களில் இலங்கையின் யாழ்ப்பணத்து இளைஞன் ’இயக்கத்தில்’ சேர்ந்துவிடுவான் என்ற பயத்தில், பெற்றோர் அவனை நாடு ’கடத்த’ முடிவெடுக்கிறார்கள். அவனோடு அவனைப் போலவே வேறு வேறு காரணங்களுக்காக ஏஜெண்ட் மூலம் சிலர் இலங்கையிலிருந்து கிளம்புகிறார்கள்.  மாஸ்கோவை அடைந்து, உக்ரைன் சென்று, ஜெர்மன் போயி… எல்லை தாண்டும் பொழுது அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு, மிதிப்பட்டு, சிறைப்பட்டு, செய்யாத வேலைகளை எல்லாம் செய்து, ஒரு வழியாக கனடாவை சேர்ந்தானா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.

அகதிகளின் வாழ்க்கை நாம் அறியாத வாழ்க்கை. அதனால், நாவல்களில் வருகிற எல்லா நிகழ்வுகளுமே புதிதாக இருக்கிறது. வந்து போகும் ஒவ்வொரு அகதி கதாப்பாத்திரமும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் ஒவ்வொரு கதையும் மனதை கனக்க செய்கிறது.

நாவலின் மைய இழை அகதிகளின் அவல வாழ்க்கை தான். அகதிகள் எதற்காக உருவாகிறார்கள் என யோசித்தால்… ஏகாதிபத்திய நாடுகளும், ஒவ்வொரு நாட்டை ஆளும், ஆளும் வர்க்கங்களும் தங்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிற கோளாறுகள் தான் உள்நாட்டு பிரச்சனையிலிருந்து சர்வதேச பிரச்சனைகள் வரை வெடித்து கிளம்புகின்றன. இதன் விளைவாக கடுமையாக பாதிக்கப்படுவது பரந்துப்பட்ட பொதுமக்கள் தான்.  ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் பெரும்பாலான குடி மக்களே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் பொழுது, ஒரு நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அடைக்கலம் தேடி போகும் அகதிகளை இந்த நாடுகள் எப்படி நடத்தும்? மிக கேவலமாக தான் நடத்தும்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகளின் வாழ்க்கையை தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு இந்த துயரத்தை உணரமுடியும்.  ஆகையால் தான் ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என கோரிக்கையை ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.

சர்வதேச நாடுகளில் சிலவற்றில் வலதுசாரிகள் அரசியல் அதிகாரத்திற்கு வந்திருப்பதை போல, இந்தியாவிலும் வந்திருக்கிறார்கள். ஆகையால், நாட்டின் பெரும்பாலான மக்களை எப்பொழுதும் பதட்டத்திலேயே வைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை உள்நாட்டிலேயே புதிய சட்டங்கள் வழியாக அகதிகளாக்க பார்க்கிறார்கள்.  இவர்கள் எப்படி அகதிகளை உரிய மரியாதையுடன் நடத்துவார்கள்? மக்களின் ஜனநாயகத்திற்கான தொடர்ச்சியான, விடாப்பிடியான போராட்டம் தான் இதற்கெல்லாம் தீர்வாக அமையமுடியும்.

மற்றபடி, நாவலின் வடிவத்தை கவனித்தோம் என்றால்…. வீரப்பனை தேடுகிறேன் என பழங்குடி மக்களை சிறப்பு போலீசு செய்த சித்திரவதையை ”சோளகர் தொட்டி” நாவல் வழியாக சமூக செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான பாலமுருகன் சிறப்பாக எழுதியிருப்பார். அந்த கதையை சமூகத்தின் பால் அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால், நாவல் இன்னும் பல எல்லைகளை தொட்டிருக்கும் என ஒருத்தர் எழுதியிருந்தார்.

அது போல, இந்த அகதிகளின் கதையை வேறு ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால் ”ஜெய்பீம்” போல பலருடைய கண்களை குளமாக்கியிருக்கும். ஆசிரியர் முத்துலிங்கம் எழுதியதால், அவருடைய அங்கதம் நம்மை பேலன்ஸ் செய்கிறது. “தம்பி என் முகத்தில் மேதாவிலாசம் தெரிகிறதா? என்றார் கனகலிங்கம்.  இவனுக்கு நான்கு நாட்கள் தாடி தான் தெரிந்தது”. அதே கனகலிங்கம் வள வளவென பேசுகிற ஆள். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் கூடுதலாக பேசுகிற ஆள். அதனாலேயே அவர் அதிகாரிகளால் சிறைப்படுத்தப்படுவார் என எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது, குடித்து மட்டையாகி, ஏர்போர்ட் அதிகாரிகளை எளிதாய் கடந்து போன கதையை எழுதியதை படித்ததும் நெடு நாட்களுக்கு பிறகு இரவு ஒரு மணிக்கு நெடு நேரம் சிரித்தேன். மனுசன் பத்திரமாக போய் சேர்ந்துவிட்டார் என்ற நிம்மதியுடன் கூடிய சிரிப்பு அது.

அகதிகளின் வாழ்க்கையை எழுத சொல்லிவிட்டு, ”திரில், திகில் நாவல்” என ஆனந்தவிகடன் இதற்கு விளம்பரப்படுத்தியெல்லாம் அநியாயம்.  அதுவே ஆசிரியருக்கு எழுதுவதில் சங்கடத்தை கொடுத்திருக்கும். அவருடைய எழுத்தில் யாழ்ப்பாணத்து தமிழ் கூடுதலாக எப்பொழுதும் வந்து போகும். அவருடைய தாய் மொழி அது தானே! இதில் தமிழக தமிழர்களுக்காக யாழ்ப்பாண தமிழை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்.

படத்தின் தலைப்பு கூட அத்தனை பொருத்தமில்லை.  நாவலில் வருவதெல்லாம் துயரம். ஐந்து ஆண்டுகளாக சிக்கி, சின்னாபின்னாமாகி நாயகன் கனடா போய் சேரும் பொழுது, அங்கு “கடவுள் தோன்றினார்” என எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர். இன்னொரு அர்த்ததத்தில் சொல்லவேண்டுமென்றால், கிண்டலின் உச்சம்.

மற்றபடி, அனைவரும் படிக்கவேண்டிய நாவல். படியுங்கள்.

  • சாக்ரடீஸ்

நூல்_அறிமுகம்
வெளியீடு : விகடன்
பக்கங்கள் : 127
விலை : ரூ. 155

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here