கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென் பகுதி, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சராசரியை ஒட்டியே இருக்கும் என்றாலும் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும் வட கிழக்கின் சில பகுதிகளிலும் வழக்கத்தைவிட மழை குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்ன?

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான வானிலை போக்கான ‘எல் நினோ’ இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து பலவீனமடைய ஆரம்பித்துவிட்டாலும் மிதமான அளவில் எல் நினோ இன்னமும் அந்தப் பகுதியில் நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பகுதியில் கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்றும் எல் நினோ போக்கு தொடர்ந்து பலவீனமடைந்து, பிறகு இல்லாமல் போகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த ஆண்டின் பருவமழை காலகட்டத்தில் லா நினா போக்கு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எப்போதுமே எல் நினோ முடியப்போகும் வருடத்தில் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். 2015ல் எல் நினோ முடிவுக்கு வந்தபோது, 2016ல் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, எல் நினோ மறைய ஆரம்பிக்கும் வருடங்களில் தீபகற்ப இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்” என்கிறார் தனியார் வானிலை ஆர்வலரான ஸ்ரீகாந்த்.

அதேபோல இந்த கோடை காலத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை குறைவாக இருக்கும் என்றும், இது வெப்பத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்கிறார் அவர். ஆனால், மே மாதத்திற்குப் பிறகு மழை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

எல் நினோ – லா நினோ போக்குகளை சுமார் 20 ஆண்டுகளாகத்தான் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வானிலை தன்னார்வலரான ராஜேஷ், இதுபோன்ற ஆண்டுகளில் மழையின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார். அதேவேளை, ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மட்டுமல்ல, ஜூலை, ஆகஸ்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்கிறார் ராஜேஷ்.

வெப்ப நிலை அதிகரிப்பு என்பது எவ்வளவு?

பூமியை வெப்ப அலைகள் தாக்காமல் காத்து நிற்கும் ஆர்டிக் துருவப்பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி பனிப்பாறைகளை உருக வைக்கிறது. உலக சராசரியை விட இரு மடங்காக அங்கு வெப்பம் அதிகரித்துள்ளதாக உலக வானிலை மையம் தெரிவிக்கிறது. கிரீன்லாந்து, அண்டார்டிக்கிலும் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன.

நிரந்தரமாக உள்ள உறைபனி உருகும்போது மீத்தேனும், கார்பன் டை ஆக்சைடும் வெளியேறும். பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் பூமியின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுக்கும் ஒரு தொடர்விளைவாக மாறுகிறது. இதுபோல் உலகெங்கும் உள்ள பனிமலைகளும் உருகிவருகின்றன. விளைவு கடலிலும், கடல் நீரோட்டத்திலும், கடும் புயல்கள் உருவாவதிலும் எதிரொலிக்கிறது. கடல் மட்ட உயர்வு உலகளாவியது, தாழ்வான கடற்கரைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என எச்சரிக்கின்றனர்.

வெப்பநிலை அதிகரிப்பு அல்லது வெப்ப அலை என்பது, ஒரு மாநிலத்தில் இரு மாவட்டங்களிலாவது வெப்ப நிலை 45 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும் அல்லது வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் பதிவாகி, இரு நகரங்களில் வழக்கத்தைவிட 4.5 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தால் அது வெப்ப அலை என அழைக்கப்படுகிறது.

வெப்ப அலை அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணம் காடுகளை அழிப்பதும், நீர்,காற்று மாசுபடுவதும், உயிரினங்களை அழிப்பதும் என பட்டியல் நீள்கிறது. இவற்றை எல்லாம் சிதைப்பது யார்? குறிப்பிட்ட சில முதலாளிகளின் நலனுக்காக, நம் கண்முன்னே பாசிஸ்டுகளால் சட்டமாகவே மாற்றப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப் படுகின்றன என்பது தான் உண்மை.

சுற்றுச்சூழல் மாற்றம் தானாக நடந்துள்ளதா?

உலகத்தில் எங்கெல்லாம் வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் இயற்கை வளங்கள் அதிகமாகச் சுரண்டப்பட்டு வருகின்றன. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோ. அவர் பதவியில் இருந்த காலத்தில்தான் பிரேசிலில் 16,95,700 ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டன. அதேபோல் இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு காடழிப்பு அதிகரித்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன, லண்டனின் Utility Bidder நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக காடழிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், 2015 முதல் 2020 வரையிலான மோடியின் ஆட்சி காலத்தில் மட்டும் 6,68,400 ஹெக்டர் காடுகள் இந்தியாவில் அழிக்கபட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது. 6,68,400 ஹெக்டர் என்பது தலை நகர் டெல்லியின் பரப்பளவைவிட 4.5 மடங்கு அதிகமாகும்.

பா.ஜ.க.வின் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பல்லாயிரம் ஹெக்டர் காடுகள் சூறையாடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, செப்டம்பர் 2017ம் ஆண்டு 3000MW Dibang Hydro Electric திட்டத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 4500 ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டன. ஆகஸ்ட் 2016 இல் Ken-Betwa நதிநீர் இணைப்பிற்காக மத்திய பிரதேசத்தில் புலிகள் சரணாலயமாக இருக்கும் சுமார் 89 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிவின் அபாயத்தில் தள்ளப்பட்டன. ஜார்கண்டில் ஆகஸ்ட் 2015 இல் kutku Mandal அணை கட்ட அனுமதி வழங்கியதன் மூலம் 119 சதுர கிலோ மீட்டர் அளவிலான காடுகளை நாம்  இழந்திருக்கிறோம்.

மலைகளும், காடுகளும், காட்டுவாழ் உயிரினங்களும் நேரடியாக அழிக்கப்படுவதை தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதற்கு நேர் எதிராக வளர்ச்சி என்ற போர்வையில் சட்டத்திருத்தங்களை மாற்றி கொள்ளையடித்தே வந்துள்ளது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: 

தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு (Strategic and security projects of national importance) வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிக்கிறது இம்மசோதா. காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் செல்லாது எனவும் திருத்தம் கூறுகிறது. உதாரணத்திற்கு தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துதான் மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும்கூட ஒன்றிய அரசால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இப்படியான திட்டங்களை தேச முக்கியத்துவம் என்கிற பெயரில் செயல்படுத்துவது காடுகளை துண்டாக்கும் முயற்சி மட்டுமல்ல மனிதகுல அழிவுக்கும் வழிவகுக்கும் செயல் என்பதை நாம் உணர்வோம்.

இவற்றை சரிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் 22.04.2024 அன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் அதிகபட்சமாக 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

ஒரு புறம் வெப்பம் அதிகரிப்பதால் எச்சரிக்கையாக இருங்கள் என நமக்கு அறிவுரை கூறும் அரசு, சுற்றுச்சூழல் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பேரழிவுகளுக்கு காரணமான ஏகாதிபத்தியங்களின் தொழிற்சாலைகளுக்கும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது கார்ப்பரேட்-காவி பயங்கரவாத மோடி அரசு.

இந்த பூமியை காக்க வேண்டுமெனில் வெப்பம் அதிகரிக்காமல் தடுக்க இன்றே களமிறங்க வேண்டும். தவறினால் இனி நம்மால் சரிசெய்யவே முடியாதபடி வெப்பப்பெருக்கம் ஒரு தொடர் சுழற்சியாக நிலைபெற்றுவிடும் என காலக்கெடு விதிக்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்களின் லாப வெறியோ பாசிஸ்ட்டுகளை அதிகாரத்தில் அமர்த்தி சுற்றுச்சூழலை அழிப்பதில் மேலும் மூர்க்கமாக இறங்கியுள்ளது. பூமியைக் காக்க உலக மக்கள்  கார்ப்பரேட்களையும், அவர்களின் அடியாள்படையான பாசிஸ்ட்டுகளையும் ஈவிரக்கம் காட்டாமல் தாக்கி வீழ்த்துவது தான் நம்முன் உள்ள ஒரே தீர்வு.

  • பரூக்

செய்தி ஆதாரம்:

  1. https://www.deccanherald.com/india/12l-hectares-of-forestlost-in-5-nda-years-731210.html
  2. https://www.utilitybidder.co.uk/compare-business-energy/%20deforestation-report/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here