இளைய தலைமுறையை காட்சி போதைக்குள் ஆழ்த்தும் சினிமாக்கள்!
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது உடையவர்களை சினிமா பெருமளவில் ஈர்க்கிறது.
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னால் அதன் டீசர் வெளியிடப்பட்டு அந்த படத்தின் மீது ஒரு ஈர்ப்பை செயற்கையாக உருவாக்குகிறார்கள் திரைப்பட முதலாளிகள். பன்னாட்டு திரைப்பட நிறுவனங்கள் துவங்கி இந்தியாவில் தேசங்கடந்த தரகு முதலாளிகளின் ஒரு பிரிவினரான அம்பானி வரை திரைப்பட தயாரிப்பாளர்களாக உள்ளனர். திரைப்படம் வெளியாவதற்கு முன்னால் அதைப்பற்றி ஒரு கருத்தை உருவாக்குவது, அதை promote என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்.
அன்றாடம் தினக் கூலிகளாக வேலைக்கு செல்கின்ற அரை பாட்டாளிகள் துவங்கி ஆலைகளில் உத்தரவாதமாக வேலை செய்கின்ற நிரந்தர தொழிலாளர்கள், ஐ டி தொழில்நுட்பத்தில் வேலை செய்கின்ற மேட்டுக்குடி தொழிலாளர்கள் வரை அனைவரும் இவர்கள் விரிகின்ற மாயவலைக்குள் விழுந்து விடுகிறார்கள்.
படிக்க:
♦ ‘படா’ (அய்யங்காளி படை) – மலையாளம் திரைப்படம் ஒரு பார்வை.
அதுமட்டுமன்றி படங்களுக்கு இசை அமைப்பாளர் மற்றும் டைரக்டர் இருவரின் புகழைப் பாடி promote துவங்குகிறது. திரைப்படம் வெளியாவதற்கு ஒன்று, இரண்டு மாதங்களுக்கு முன்னால் அதன் இசை ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களை, திரைப்படத்தை பார்ப்பதற்கு ஈர்க்கின்ற வேலையை செய்கின்றனர்.திரைப்படங்கள் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி சமுதாயத்தில் இளைய தலைமுறையை மோல்ட் செய்கிறது.
எப்படி மயிர் வெட்டுவது, எந்த உடை உடுத்துவது, கையில் கயிறு கட்டுவது, ரப்பர் பேண்டை சுற்றுவது என்பது துவங்கி காதல், அட்டைக்கத்தி வீரம், சாதிப்பெருமை உள்ளிட்டு அனைத்தையும் திரைப்படத்தைப் பார்த்து பழகிக் கொள்கிறார்கள். நிழல் உலகில் வாழும் சினிமா கதாநாயகர்கள் போல தன்னை எண்ணிக்கொண்டு இளம் தலைமுறை சீரழிக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் உள்ள வெறும் 3000 பேர் 8 கோடி தமிழர்களில் ஆக பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கையில் இசைவடிவிலோ அல்லது காட்சி வடிவிலோ, நாயக வடிவிலோ உள்ளே நுழைந்து விடுகிறார்கள். மூவாயிரம் பேரில் சில விதி விலக்குகளும் உண்டு.
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வந்த பிறகு சினிமா நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய கிசுகிசுக்களை பக்கம் பக்கமாக கடை பரப்புவதன் மூலம் இளம் தலைமுறையினரை உண்மையான சமூகப் பிரச்சனையை பார்க்கவிடாமல் ஒரு விதமான காட்சி போதைக்கு ஆட் படுத்துகின்றனர்.
சினிமாவிற்கு வெளியில் செல்போன், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட கலாச்சாரமும் இணைந்துகொண்டு இளம் தலைமுறையினரை காட்சி போதைக்கு அடிமையாக்கி ‘புல் தடுக்கி பயில்வான்களை’ உருவாக்குகிறது. இத்தகைய பயில்வான்கள் சமூகத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும், சொந்த வாழ்க்கையில் சிறிய நெருக்கடி ஏற்பட்டாலும் சமாளிக்க முடியாமல் விரத்தி அடைவது, மனநல பாதிப்புக்கு உள்ளாவது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாவது என்று சீரழிவில் சிக்கி கொள்கின்றனர்.
கடும் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்குள் 190 கோடி ரூபாயும், கேஜிஎப் 2 வெளியாகி 645 கோடியும் வசூல் செய்திருப்பது சமூகத்தின் எதார்த்த நிலையை நமக்கு உணர்த்துகிறது.
“மக்களை அவர்கள் விரும்பிய வழியில் வாழ அனுமதிக்காதவர் தோழர் லெனின்!” என்று தோழர் லெனின் பற்றி மாக்சிம் கார்க்கி கூறிய பிரபலமான மேற்கோளுடன் இந்த கட்டுரையை முடிப்போம்.
தோழர் லெனின் வழியில் பயணிப்போம்!
- பா.மதிவதனி.
மாக்சிம் கார்க்கி எப்பொழுது எந்த பிண்ணனியல் இவ்வாறு கூறினார் என தெரிந்து கொள்ள வேண்டும் தோழரே. மேற்கோளுக்கான மூல நூல் சொல்லுங்கள்.
லெனின் சொற் சித்திரங்கள்- மாக்சிம் கார்க்கி என்ற நூலில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. கட்டுரை எழுதும்போது அதை மனதில் வைத்து குறிப்பிடப்பட்டுள்ளது. சரியாக இதே வார்த்தை என் உள்ளதா என்பதை சோதிக்க முடியவில்லை.
என்று மதிவதனி கூறுகிறார்.