இந்திய சமூக அமைப்பு மிகவும் சிக்கலான சாதிய ஏற்றத் தாழ்வுகளையும், பல்வேறு மதங்களை ஏற்றுக்கொண்ட மக்களின் வாழ்வியல் முறைகளையும் கொண்டது.
இதில் சடங்கு, சம்பிரதாயம், மரபு, பழக்க வழக்கங்கள் போன்றவை பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் தற்போதைய நவீன காலத்திற்குப் பொருந்தாத போதும் அவை “பாரம்பரியம்” என்ற பெயரில் மூடத்தனமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் சூக்கும நிலையை விவரிக்கிறது இந்த கட்டுரை.

ஒரு செயல் எந்த சமயத்தில் சடங்காகிவிடுகிறது?

ரு காரணத்தோடு ஒரு காரியம் செய்கிறோம். ஒரு கட்டத்தில் காரணம் காணாமல் போய், காரியம் மட்டும் மிஞ்சும் பொழுது சடங்காகிவிடுகிறது.

ஒரு குட்டிக்கதை சொல்லட்டுங்களா?

ஒரு குரு தன் பள்ளியில் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். ஒரு பூனை குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது.  அதனால் மாணவர்களின் கவனம்  பிசகியது. கோபமாய் “அந்த பூனையை இந்த தூணில் கட்டிப்போடுங்க!” என்றார்.  உடனே கட்டினார்கள்.

பாடம் எடுக்கும் பொழுது எல்லாம் பூனை தொல்லை செய்வதும், கட்டிப்போடுவதும் தொடர்ந்தது. ஒருநாள் உடல் நலமில்லாமல் குரு இறந்துபோனார்.

புதிய குரு வந்தார். பாடம் எடுக்க துவங்கினார். கூட்டத்தில் இருந்த ஒருத்தர் அதட்டலாய் சொன்னார்.  ”பாடம் எடுக்கும் பொழுது இங்கு ஒரு பூனையை கட்டனும்னு மறந்துபோச்சா! வந்து கட்டுங்கப்பா!” என்றார். எங்கேயோ தன் நண்பர்களுடன் சந்தோசமாய் விளையாடிக்கொண்டிருந்த அந்த பூனையை தூக்கிவந்து பொறுப்பாய் அந்த தூணில் கட்டினார்கள். குரு பாடம் எடுக்க துவங்கினார்.

“டாணாக்காரன்” படத்தில் ஒரு காட்சி.

ஆயுதப்படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளிக்கும் அவர் சொல்வார்.

“கீழே இருக்கிற மரத்துக்கு கீழே ஒரு கார்டு (Guard) நிற்கிறான் இல்லையா? அவன் எதுக்கு நிற்கிறான்னு தெரியுமா?  கந்தசாமின்னு ஒரு கமாண்டண்ட் (Commandant) இருந்தார். ரெம்ப பக்தியான மனுசன். ரோட்ல ஒரு கல்லைப் பார்த்தாலே கடவுள்னு கையை எடுத்து கும்பிடற ஆள்.  ஒரு நாள், இங்க லெட்சுமிகடாட்சமா ஒரு வேப்ப மரம் இருந்தா நல்லா இருக்கும்ல! என சொல்லி என்னை ஒரு கன்றை நடச் சொன்னார். நானும் நட்டேன். ஆடு வந்து இரண்டு முறை தின்னுட்டு போயிருச்சு! கடுப்பாகி, ஒரு ஆளை பாதுகாப்புக்கு போடுங்க!ன்னு ஒரு உத்தரவு போட்டார். கன்று வளர்ந்து மரமாயிருச்சு! அவரும் செத்துப்போய் பன்னிரெண்டு வருசமாச்சு! அதிகாரி உத்தரவுன்னு அதுக்கு பிறகு வந்த யாரும் அந்த உத்தரவை திரும்ப வாங்கவில்லை. அந்த கார்டுக்கு ஏன் அங்க நிற்கிறோம்னு தெரியாது! கார்டு போடுறவனுக்கு ஏன் போடுறோம்னு தெரியாது!  இவங்கள எந்த கேள்வியும் கேட்கமுடியாது. கேட்டாலும் பதிலும் கிடைக்காது. இது தான் போலீசு துறை!” என்பார்.

என்னோட பதினைந்து வயசுல, சொந்த பந்தங்கள் சாமி, சடங்கு, சம்பிராதயம்னு ஏதாவது கூடும் பொழுது, இந்த சடங்கு ஏன் செய்யிறீங்கன்னு ஒவ்வொண்ணா கேட்பேன்.

வெள்ளந்தியா இருக்கிறவங்க ”காலம் காலமா செய்துகிட்டு வர்ற சடங்கு” என பெருமிதமாய் சொல்வார். இன்னும் கொஞ்ச விவரக்காரர் “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை” என்பார்.   கொஞ்சம் அடாவடியான ஆளா இருந்தா அதற்கான விளக்கம் கொடுக்காம இப்படியெல்லாம் கேட்க கூடாதுன்னு அதட்டுவார்.  காரணத்தோடு செயல் செய்ய ஆரம்பித்து காரணம் காணாமல் போய் பல பத்து ஆண்டுகள் ஆன பிறகு வெற்று சடங்குகிற்கு எப்படி காரணத்தை சொல்லமுடியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here