ஷாருக்கானை ஏன் இந்துத்துவ பாசிச அரசு குறிவைக்கிறது?

கடந்த செப்டம்பர் மாத இறுதியில், மோடியின் பெரும் முதலாளி நண்பரான அதானி நிர்வகிக்கும் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது. ஆப்கானிஸ்தானிலிருந்து இது கடத்தி வரப்பட்டதாகவும் கொரோனா காலக்கட்டத்தில் பணி இழந்த சென்னையைச் சேர்ந்த கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தினார்கள் எனவும் போலீசு தரப்பில் சொன்ன தகவல் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. சமீப காலங்களில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்களில் இது மிகப்பெரிய அளவு. இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலை நேற்று புதிதாக கடத்தல் தொழிலுக்கு வந்த இருவரால் செய்திருக்க முடியாது; மேலும், இந்தத் துறைமுகம் போதைப்பொருள் கடத்தலுக்கு தோதானதாக இருந்ததாலேயே கிட்டத்தட்ட 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மோடிக்கும் அதானிக்கும் விசுவாசமாக வாலாட்டும் எந்தவொரு ஊடகமும் இதைப் பெரிது படுத்தவில்லை. சிறு சிறு சலசலப்புகளுக்கு எதிர்வினையாற்றிய அதானி துறைமுக நிறுவனம் இனி ஆப்கன், ஈரான், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை கையாளமாட்டோம் என அறிக்கை விட்டது. சென்னையைச் சேர்ந்த தம்பதி, ஆப்கானிலிருந்து ரூ. 21000 கோடி ஹெராயினை யாருக்காக, யாருடைய துணையுடன், எப்படி கடத்தி வந்தார்கள் என்கிற கேள்விகள் அர்னாப் கோஸ்வாமிகளால் கேட்கப்படவில்லை. சமகாலத்தின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஊற்றி மூடப்பட்டது.

அதே வேளையில், மற்றொரு பேச தகுதியுள்ள விவகாரம் இவர்களுக்குக் கிடைத்தது. அதில் தொடர்புடையவர் காவி ஊடகங்கள் வெறுக்கும் ‘கான்’ என்ற பெயரைக் கொண்டவராக இருந்தார். கோவாவின் சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து கொடுத்ததாக அக்டோபர் முதல் வாரத்தில் ஆர்யன் கானும் அவரது இரு நண்பர்களும் மும்பையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டனர். 24 வயதான ஆர்யன் கான், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன்.

கைதான ஆர்யன் கானிடமிருந்து எந்த வகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை; அவர் போதைப்பொருளும் பயன்படுத்தவில்லை என்பதை போலீசு தரப்பே தெரிவித்தது. சோதனையின்போது அவரது ஒரு நண்பர் சிறிதளவு போதைப்பொருள் உட்கொண்டதற்கான தடயங்கள் கிடைத்தன. ஆனால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சட்டங்களில் இல்லாத வாதங்களை முன்வைத்து ஆர்யன் கானுக்கு பிணை மறுக்கப்பட்டது. 24 நாட்கள் மும்பையின் ஆர்தர் சாலை மத்திய சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு அக்டோபர் மாதத்தின் இறுதியில் பிணை கிடைத்தது.

மும்பை தாதாக்கள் – அரசியல்வாதிகள் – பாலிவுட் நட்சத்திரங்கள் – போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்கிற வலைப்பின்னல் பிரசித்திபெற்றது. 90களில் உச்சத்தில் இருந்த இந்த வலைப்பின்னலின் காலம், 2000ன் பிற்பகுதியில் முடிவுக்கு வந்தது. மேலும், நகரத்தின் தெரு முனைகளிலேயே கிடைக்கும் அளவுக்கு போதைப் பொருட்கள் புழக்கம் இன்று வெகு சாதாரணமாகிவிட்டது. ஷாருக்கானின் மகனுக்கு மட்டுமல்ல, பள்ளி செல்லும் பக்கத்து வீட்டு சிறுவனுக்கும்கூட போதைப் பொருட்களை வாங்குவது அவ்வளவு கடினமான விசயமல்ல. அதானியின் துறைமுகமே சர்வசாதாரணமாக மூவாயிரம் கிலோ ஹெராயினை கையாள்கிறது. ஆனால், இந்துத்துவத்தின் கால்பிடிக்கும் ஊடகங்களுக்கும் காவி கும்பலுக்கும் சமூகத்தில் ஏன் இவ்வளவு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பதைக் காட்டிலும், போதைப்பொருள் வழக்கில் கைதானவர் ஒரு முசுலீம் என்பது தங்களுடைய பரப்புரைக்கு மிகவும் தோதான விசயமாகப்படுகிறது.

இந்துத்துவ விசம் கக்கும் ஊடகவியலாளரான அர்னாப் கோஸ்வாமி மட்டும் இந்த ஒன்றரை மாதங்களில் குறைந்தது 15க்கும் மேற்பட்ட விவாதங்களை ஆர்யன் கான் கைது குறித்து நடத்திருக்கிறார். மீண்டும் ஒருமுறை பாலிவுட் கையும் களவுமாக போதைப்பொருளுடன் சிக்கியிருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கைதில் பாஜக அரசியல்வாதிகளின் பங்கிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ‘நாடே போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பக்கம் இருப்பதாக’வும் முழங்கினார். 13 கிராம் கோக்கைன், 5 கிராம் எம்.டி, 21 கிராம் சாரஸ், 22 மாத்திரைகள் மற்றும் 1.33 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஆர்யன் கான் கைதின்போது, சொகுசு கப்பலில் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சொன்னது. அதானி துறைமுகத்தில் பிடிபட்ட ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ ஹெராயினோடு ஒப்பிட்டால், இது சொற்பம். ஆனால், அதானி மோடியின் நண்பர்; இந்துத்துவ பரிசோதனைகளின் நிதி ஆதாரம். அதானி துறைமுகத்தில் போதைப்பொருள் பிடிபட்ட விவகாரத்தை ஊற்றி மூடுவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

ஆர்யன் கான் வெறுமனே ஒரு முசுலீம் என்பதற்காக மட்டும் கைது செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படவில்லை. இந்துத்துவ பாசிச அரசு, ‘இந்தியமயமான முசுலீமு’க்கு உதாரணமாக உள்ள ஷாருக்கான் போன்றவர்களுக்கு பாடம் புகட்ட விரும்பியது. ஷாருக்கானின் பின்னணியை எடுத்துக்கொள்ளுங்கள். ஷாருக்கானின் தந்தை, மீர் தாஜ் முகமது கான் இன்றைய பாகிஸ்தானின் பெசாவரில் பிறந்தவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பிரிவினையை விரும்பாத முசுலீம் இயக்கத்தைச் சேர்ந்தவர். சுதந்திரத்துக்குப் பின் டெல்லிக்கு வந்தார். ஹைதாராபாத்தில் லத்தீப் பாத்திமாவை திருமணம் செய்துகொண்டார். இந்தப் பின்னணியில் வளர்ந்த ஷாருக்கான் தன்னை முசுலீம் என அடையாளப்படுத்திக்கொள்ள தயங்கியதில்லை. அவர் பஞ்சாபி இந்து பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவரை மதம் மாற்றவில்லை, அவர்களுடைய வீட்டில் இரண்டு மத வழிபாடுகளும் நடக்கும். இவையெல்லாம் ஷாருக்கான் பொதுவெளியில் பகிர்ந்துகொண்ட தகவல்கள்.

ஒற்றை மத அடையாளத்தை நிறுவப் பார்க்கும் இந்துத்துவ கும்பலுக்கு ஷாருக்கானின் மேற்படியான ‘இந்தியமயமான முசுலீம்’ என்ற உதாரண பிம்பம் அச்சுறுத்தலாகப் படுகிறது. காவிகளின் ‘லவ் ஜிகாத்’ பரப்புரைக்கு ஏற்றதாக இல்லை. மேலும் அவர், ’கான்’ என்ற பின்னொட்டைக் கொண்ட இந்தியாவின் உச்ச நட்சத்திரமாகவும் உள்ளார். ஏக பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றபோது, பாலிவுட்டின் ஒரு பிரிவு ,எஜமானருக்கு விசுவாசமாக இருப்போம் என வாலை ஆட்டிவிட்டு வந்தது. ஷாருக்கான் உள்ளிட்ட லிபரல் சிந்தனை உள்ள மற்றொரு பிரிவினர் விலகியே இருந்தனர். இந்துத்துவ அரசு பதவியேற்றபின், காவி கும்பல் அரங்கேற்றிய கும்பல் கொலைகளுக்கு எதிராக அமிர்கான் விமர்சனம் வைத்தார். ஷாருக்கான் காவி கும்பலை விமர்சித்தவர் இல்லையெனினும் தன்னளவில் ஒரு சிறந்த ‘இந்திய’ முசுலீமாக இருக்க விரும்பினார். அவருடைய தந்தை ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பேசாவரில் பிறந்த காரணத்தால், ஏராளமான சந்தர்ப்பங்களில் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என இந்துத்துவ கும்பல் அவரை சாடியிருக்கிறது. ஷாருக்கானை ’வெளிநாட்டவர்’ ‘படையெடுப்பாளர்’ ‘மற்றவர்’ என சுட்டுவதற்கு, இந்துத்துவ கும்பலைப் பொறுத்தவரை மிகச் சரியான ‘ஆதாரங்கள்’ இருக்கின்றன. ஷாருக்கானை பணியவைக்க ஏராளமான காரணங்கள் இருந்தபோதும், அவர் பணியவில்லை. எனவே, இந்துத்துவ கும்பல் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஷாருக்கான் போன்றவர்களை துன்புறுத்தி, நிலைகுலைய வைக்கப்பார்க்கிறது. ஆர்யன் கான் கைதில் வெளிப்பட்டதும் அதே போன்ற ஒரு உத்தியே.

======================================

ஹிட்லரின் பாசிச ஆட்சியின்போது, அங்கிருந்த கலைஞர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து நின்றனர். ஒரு பிரிவினர் பாசிசத்தின் ஊதுகுழலாக மாறினர்; பாசிசத்தின் பரப்புரைக்காக தங்களுடைய கலையை விற்றனர். இன்னொரு பிரிவினர் பாசிசத்துக்கு அடிபணியாமல் நாட்டை விட்டுச் சென்றனர். இந்துத்துவ பாசிச ஆட்சி கலைஞர்களிடையே இதுபோன்ற சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஷாருக்கான், அமீர்கான் போன்ற சர்வதேச அளவில் செல்வாக்கு படைத்தவர்களுக்கும் இதே நிலைமைதான். இந்து பெரும்பான்மைவாதம் முசுலீம் சிறுபான்மையினரை செத்து மடி, அல்லது நாட்டைவிட்டு கிளம்பு என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்துகிறது. பாசிசம் சிறுபான்மையினருக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரானது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

நன்றி:

மு.வி.நந்தினி
முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here