“உழவர் உரிமையை வென்றெடு! காவி பாசிசத்தை வீழ்த்திடு!” என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாட்டின் தீர்மானங்கள்.

விவசாயிகளின் விவசாய புரட்சியே நாட்டின் விடுதலைக்கான நக்சல் பரி அரசியல் முன்வைக்கும் பாதை என்பதை விவசாயிகளுக்கு அறைகூவுகின்ற வகையில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாயிகள் அமைப்பின் தோழர்களுக்கும், தஞ்சை சுற்றி பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட விவசாயிகளுக்கும், வெவ்வேறு விவசாய சங்கங்களுக்கும் புதிய நம்பிக்கையை ஊட்டுவதாக இருந்தது.

000

 • விவசாயிகள் விளைவிக்கின்ற விளைபொருள்களுக்கு கட்டுப்படியாகின்ற விலை எப்போதும் கிடைப்பதில்லை. விவசாயிகள் வாழ்வை பாதுகாக்கவும் விவசாயத்தை பாதுகாக்கவும், நெல், கோதுமை, பயறு வகைகள்,எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து போர்க்கால அடிப்படையில் அமல்படுத்து என மாநாடு கோருகிறது.
 • விவசாய உள்ளீடு பொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்ற அனைத்தையும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மாற்றி அரசாங்கமே குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது!
 • விவசாயத்தை நட்டமின்றி நடத்துவதற்கு தேவையான இலவச மின்சாரம், நீர்ப்பாசன வசதி போன்றவற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆறு, குளங்கள், ஏரிகளை தூர்வாருவதும், மழைக் காலங்களில் சேமிப்பிற்கு பொருத்தமான கட்டமைப்பை உருவாக்குவதும் அவசியம் என்பதை மாநாடு வலியுறுத்துகிறது.
 • விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் அனைத்தையும் உடனே தள்ளுபடி செய்! நீண்ட கால கடன்களுக்கு வட்டிக்களை குறைத்துக் கொடு. வெள்ளம், மழை, வறட்சி போன்ற காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கை முற்றிலுமாக அழிந்து போகாத வண்ணம் அனைத்து பயிர்களுக்கும் உடனடியாக இலவச பயிர் காப்பீட்டை அரசே ஏற்பாடு செய் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது!
 • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயிகளுடன் ஆலோசித்து பயிரிடும் காலங்களிலும், அறுவடை காலங்களிலும் பொருத்தமான நேரத்தில் வழங்குவது பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை விவசாயிகள் கமிட்டிக்கே வழங்கு என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
 • தமிழகத்தில் பாய்கின்ற காவிரி, பாலாறு, வைகை, கிருஷ்ணாநதி நீர் போன்ற அனைத்திலும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் உத்தரவாதப்படுத்து எனவும், தண்ணீரை தனியார்மயமாக்கும் கேடான செயலை கைவிட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
 • “வயலில் இருந்து வாய்வரை” என்பதையே முழக்கமாக கொண்டு விவசாயத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக மாற்றியுள்ள கார்ப்பரேட்டுகளின் பிடியிலிருந்து விவசாயத்தை மீட்டெடுப்போம் என இந்த மாநாடு அறைகூவுகிறது.
 • ஆதீனங்கள், மடங்கள், வக்பு வாரியங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் குவித்து வைத்துள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை பறிமுதல் செய்து உழுபவனுக்கே நிலம் என்ற அடிப்படையில் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கு. குத்தகை விவசாயிகளுக்கு குத்தகையை குறை எனவும், மனைகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் விவசாயிகளுக்கு வீட்டடி மனையும், உழவர்கள் பயன்படுத்தும் நிலங்களுக்கு உரிய பட்டாவையும் வழங்கு! மறு நிலப் பகிர்வு சட்டம் கொண்டு வந்து அமல்படுத்து என இந்த மாநாடு மூலம் எச்சரிக்கை விடுக்கிறது.
 • விவசாயிகளின் அழிவு! சமூகத்தின் பேரழிவு! என்பதை உணர்ந்து விலை நிர்ணயிக்கும் உரிமை முதல் அரசியல் அதிகாரம் வரை அனைத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் கமிட்டிக்கே என மாநாடு அறை கூவுகிறது.
 • விவசாயத்தை முற்றிலும் அழிக்கின்ற வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மின்சார திருத்த சட்டம் 2020 நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023, வன பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023 போன்ற அனைத்தையும் நிபந்தனையின்றி ரத்து செய் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது..
 • விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுகின்ற ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் கார்ப்பரேட் விவசாயக் கொள்கையை முற்றாக கைவிடு! காவிரி டெல்டாவை பாலைவனமாக்க இந்திய ஒன்றிய அரசு கொண்டு வரத்துடிக்கும் மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ் திட்டம், நிலக்கரி வயல்கள் திட்டம், மீனவர்கள்-விவசாயிகள் வாழ்வை அழிக்கும் சாகர்மாலா,பாரத்மாலா, நெய்வேலி சுரங்க விரிவாக்கத் திட்டம் போன்ற அனைத்துவகை திட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்! என இந்த மாநாடு மூலம் எச்சரிக்கை விடுக்கிறது.
 • நாட்டையும் மக்களையும் அழித்து வரும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை அதிகாரத்திலிருந்து 2024 தேர்தலில் வீழ்த்த வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், இன்ன பிற வகையிலான வர்க்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கட்டுவதும் ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவுவதும் உடனடிக் கடமையாகும் என இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
 • தேர்தலுக்கு வெளியே ஆர்எஸ்எஸ்_-பாஜக அன்றாடம் ஏறித்தாக்கி வரும் நிலையில் அதனை நேருக்குநேர் எதிர்கொண்டு களத்தில் வீழ்த்த வேண்டும் என விவசாயிகளுக்கு இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது. நாட்டின் இறையாண்மையை கட்டிக் காக்கவும், சுயசார்பு பொருளாதாரத்தை உருவாக்குகின்ற வகையில் விவசாயக் கொள்கையை தீர்மானிக்கின்ற அதிகாரத்தை விவசாயிகள் கீழிருந்து கைப்பற்ற வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

விவசாயிகள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here