“பூனைகள் கண்ணை மூடிக் கொள்வதால் பூலோகம் இருண்டு விடுவதில்லை!” அதுபோல இந்தியாவில் வரதட்சிணை கொடுமைகள் எல்லாம் பழைய கதை என்ற திண்ணைப் பேச்சு (சாரி) வாட்ஸப், பேஸ்புக் அரட்டைகள் உண்மையல்ல. இந்திய சமூக அமைப்பில் ஒரு பொருளை விலை பேசி வாங்குவதைப் போல, பெண்களிடம் வரதட்சணை கேட்டு திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இன்று அதிகரித்துள்ளது என்ற முகத்தில் அறையும் உண்மை பற்றி கட்டாயம் நாம் சிந்தித்தே ஆக வேண்டும். ஒரு காலத்தில் வரதட்சிணைக் கேட்பது குற்றம் என்றும், அவ்வாறு வரதட்சணை கேட்பவர்கள் சிறந்த ஆண்மகன்கள் இல்லை என்று கருத்து சமூகத்தில் நிலவி வந்தது. ஆனால் இன்று வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமாகவும், சொற்பமான அளவில் மட்டுமே நடக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கு மிகப்பெரும் தடையாக உள்ள வரதட்சணைக் கொடுமை இன்றளவும் நீடிக்கிறது என்பது சகிக்க முடியாத கொடுமையாகும்.
ஜூலை மாதத்தில் கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா, அர்ச்சனா, சுசித்ரா ஆகிய மூன்று பெண்களும், சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ என்ற பெண்ணும் வரதட்சிணை கொடுமைக்கு தனது உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஜோதிஸ்ரீ தனது கணவனுக்கும், தனக்கும் இடையில் உரையாடல்கள், வரதட்சணை கேட்டு கணவன், மாமியார் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் நடத்திய கொடுமைகள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.
பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கள்ளிப்பாலையும், நெல்லையும் வாயில் புகட்டி பெண் சிசுக் கொலை செய்த உசிலம்பட்டி இன்றும் தமிழகத்தின் அவமானச் சின்னமாக திகழ்கிறது. கிராமப்புறங்களில் இருப்பவர்கள்தான் படிப்பறிவு இல்லாமல் வரதட்சணை கேட்பதையும், வரதட்சணை கொடுப்பதையும் செய்கிறார்கள் நாங்கள் அப்படி இல்லை என்று படித்த மேதாவி கூட்டம் திமிராக பேசி திரிகிறது.
ஆனால் 1990 களில், புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்த தொடங்கிய பிறகு இந்தியாவில் திருமணத்தில் ஒரு புதிய வகையிலான போக்கு துவங்கியுள்ளது. குறிப்பாக ஒரு மருத்துவர் திருமணம் என்றால் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொள்வது, ஒரு ஆசிரியர் என்றால் ஆசிரியரை திருமணம் செய்து கொள்வது, ஒரு வழக்கறிஞர் என்றால் வழக்கறிஞரை திருமணம் செய்துகொள்வது இவற்றையெல்லாம் தனது தொழிலுக்கு வலு சேர்க்கவும், தனது தொழிலில் வாரிசுகளை உருவாக்கவும் தான் என்று கதை அளக்கிறார்கள். ஆனால் இவை ஒரு நவீன வகையிலான வரதட்சணை கொடுமையின் அம்சமாகும். இது தான் படித்தவர்களின் லட்சணமாகும்.
2020 தேசிய குற்ற ஆவணத்தின், 2018- ஆம் ஆண்டு கணக்கின்படி, பெங்களூரில் 53 பெண்களும், சென்னையில் 7 பெண்களும், ஐதராபாத்தில் 17 பெண்களும், கொச்சியில் ஒரு பெண்ணும் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 137 பேர் வரதட்சிணை கொடுமையால் உயிழந்துள்ளனர் என்பது உச்சபட்ச அளவாகும். அன்றாடம் கணக்கில் வராமல் பல மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற மரணங்கள் நாட்டின் அவமான சின்னங்களாகும்.
தமிழகத்தில் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் அவள் விகடன் எடுத்த ஒரு சர்வேயில் வரதட்சணை வழக்கம் இன்னமும் இருக்கிறது என்று 25.2 சதவீத மக்களும், இல்லை என்று 23.4 சதவீத மக்களும். கொடுப்பது தானே கவுரவம் என்று 4.8% மக்களும், கேட்டு வாங்குகிறார்கள் என்று 38.9% மக்களும், வீடு, கார் என்று பெண்களும்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று 11 சதவீதம் மக்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 1960 முதல் 2008 வரை 40,000 திருமணங்களை ஆய்வு செய்த உலக வங்கியின் ஆய்வு, இந்த திருமணங்களில் 95% வரதட்சிணை பெற்றுதான் திருமணமே நடந்துள்ளது என்றும், கிராமப்பகுதிகளில் மக்களுடைய சேமிப்பில் 14% வரதட்சிணைக்காக செலவிடப்படுகிறது என்றும், ஆனால் 2007 க்கு பிறகு குடும்ப வருவாயில் திருமண செலவுகளை கணக்கிடுவது கைவிடப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளது.
வரதட்சணை கொடுமை என்பது ஏழைகள் வீட்டில் தான் நடக்கிறது என்பது உண்மை அல்ல. கேரளாவின் விஸ்மயா மரணத்தை பார்க்கும் போது கணவருக்கு வாங்கிக் கொடுத்த கார் விலை குறைவு என்ற ஒரே காரணத்தினால் விஸ்மயா தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு இருக்கிறார். அவர் தனது காயங்களை தனது நண்பர்களுக்கு புகைப்படமெடுத்து அனுப்பி இருந்தார். ஆனாலும் வீட்டை விட்டு வெளியேறும் துணிச்சல் அவருக்கு வரவில்லை.
இந்தியாவில் கேரளா படித்து முன்னேறிய சமூகம் என்று பேசப்படுகிறது. ஆனால் கேரள திருமணங்களின் மையமான விவாதப் பொருள் எத்தனை சவரன் நகை போட்டீர்கள் என்பதுதான். குறைந்தபட்சம் 100 சவரன் நகை போடுவது அங்கு சாதாரணமான ஒன்று. இருவர் சந்தித்துக் கொள்ளும் போது “என் மகளுக்கு 100 பவுன் நகை போட்டேன், 125 பவுன் நகை போட்டேன்“ என்று பேசிக்கொள்வது சர்வ சாதாரணமாக கேரளாவில் உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பு பெற்றவர்களாக இருப்பதும், வெளிநாடுகளிலும் வேலை செய்து வருவதாலும் ஒரளவு வசதியான வாழ்க்கையில் உள்ளனர். இதனால் நுகர்வு கலாச்சாரத்திற்கு மிகவும் அடிமையாகி வரதட்சணைக் கொடுமையில் இந்தியாவில் கேரளா முன் நிற்கிறது என்பது வெட்கக்கேடாகும். பிற்போக்கு கோட்டையான குஜராத் மற்றும் பஞ்சாப், அரியானா அடுத்தடுத்த வரிசையில் வருகிறார்கள்.
இந்தியாவில் வரதட்சிணை சந்தையில் 1960 முதல் 1999 வரை 25,000 கோடி டாலர் (18 லட்சம் கோடிகள்) புழங்கியுள்ளதாக சமீபத்தில் வெளிவந்த உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த இருபது ஆண்டுகளில் அது பல மடங்கு கூடி இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. வரதட்சிணை வாங்குவதை நியாயப்படுத்துவதற்காக மோசடியான கருத்துகள் பரப்பப்படுகிறது. சட்டம் அதை அங்கீகரிக்கிறது. அதாவது தான் பெற்ற பெண்ணுக்கு பெற்றோர்கள் விருப்பத்துடன் கொடுத்து அனுப்பும் ’சீதனங்கள்’ வரதட்சணை ஆகாது என்றும், கட்டாயமாக பேரம் பேசி வாங்குவது மட்டுமே வரதட்சணை என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது.
பெண் பார்க்கும் படலம் துவங்கும்போது “உங்க வீட்டு பொண்ணு நீங்க போடறத, அதுதான் அனுபவிக்கப் போவுது! நாங்களா எடுத்துட்டு போக போறோம்“ என்று நைச்சியமாக பேசுவதும், “எங்க பொண்ணுக்கு இவ்வளவு போட்டு கட்டி கொடுத்து இருக்கிறோம்! அங்க வாழ வர்ற உங்கப் பொண்ணு கம்மியா போட்டுகிட்டு வந்தா மரியாதையா இருக்குமா?” என்று சாதுர்யமாகவும், “எங்களுக்கு உங்கள் மகளை கட்டிக் கொடுத்தால் போதும்! உங்கப் பொண்ணு மனசு கோணாமல் நீங்கள் செய்து அனுப்பினால் போதும்!” என்று நல்லவர்களை போலவும், வரதட்சணை கேட்பது அன்றாட வாடிக்கையாகிவிட்டது, அதுமட்டுமல்ல வரதட்சிணை என்பது ஒவ்வொரு சாதி அடையாளத்திற்கும் தகுந்தாற்போல் மாறுபடுகிறது.
ஏகாதிபத்தியங்கள் உத்தரவிட்டு அடிமைப்படுத்தும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் நுகர்வு கலாச்சாரத்தை உழைக்கும் மக்கள் உட்பட அனைவர் மீதும் திணிக்கிறது. ஏற்கனவே இங்கே நிலவும் பிற்போக்கு கலாச்சாரமும் இணைந்து, திருமணம் என்றவுடன் ஆண்மகன், பெண் பார்க்கும் வீட்டில் அண்டர்வேருடன் சென்று சில சமயங்களில் அதுவும் இல்லாமல் சென்று, உள்ளாடை முதல் கோட், சூட் அல்லது ஜீன்ஸ் ஆடைகள் அனைத்தையும் வாங்கி போட்டுக்கொண்டு, டேபிள்ஸ்பூன் முதல் ஏசி,, டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து நவீன நுகர்வு சாதனங்களையும் பெற்றுக்கொள்வது, தவறாமல் மரக்கட்டில், மரபீரோ என்று கேட்டு வாங்கிக் கொள்வது, தான் பார்க்கும் வேலைக்கு தகுந்தார்போல் குறைந்தபட்சம் இரண்டு சக்கர வாகனம், அதிகபட்சம் நான்கு சக்கர வாகனம் என்று ’டிமாண்ட்’ செய்து வாங்கிக் கொள்வது இவை அனைத்தும் எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஒரு கலாச்சாரமாகவும், இழிவான பண்பாடாகவும் இந்திய சமூக அமைப்பில் நீடிக்கிறது.
இந்த கேடுகெட்ட கலாச்சாரத்தை சட்டரீதியாக தண்டிப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அதேசமயம் நீயும் பெண்தானே, அந்தப் பெண்ணை இவ்வாறு துன்புறுத்தலாமா? இன்று மருமகளாக இருப்பவள் நாளை மாமியாராகி ஒரு வீட்டில் அதிகாரம் செலுத்த போகிறாள், பெண் பிள்ளைகள் பெற்றோர் கஷ்டங்களை உணராமல் பிறந்த வீட்டிலிருந்து அனைத்தையும் வாங்கிக் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள்!, கடன் சுமையை சகோதரர்கள், பெற்றோர்கள் தலையில் ஏற்றுகிறார்கள்! என்று சப்பைக் கட்டு பேச்சுகள் ஒன்றுக்கும் உதவாது. இதெல்லாம் சரியா என்று மொன்னையான விவாதங்கள் மட்டுமே நடக்கின்றன. வரதட்சனை பெற்றுக்கொண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது கையாலாகாத்தனம் என்ற இழிவாக பார்க்கப்படுவதில்லை. மாறாக ஒவ்வொரு வர்க்கத்திற்கும் தகுந்தாற்போல் அந்தஸ்தையும், கௌரவத்தையும் நிலைநிறுத்தும் ஆயுதமாகவே வரதட்சணை பார்க்கப்படுகிறது.
சீர்திருத்தத் திருமணங்கள், முற்போக்கு திருமணங்கள் என்று பேசப்படுகின்ற திருமணங்களில் கூட சாதி – சடங்கு மறுப்பு, பார்ப்பனர்கள் புறக்கணிப்பு போன்றவை செய்யப்பட்டாலும், வரதட்சணை பெற்றுக்கொள்வது என்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தவிர்க்கமுடியாமல் கடைப்பிடிக்கப்படும் படி பார்த்துக் கொள்கிறார்கள். இதை அவமானமாக கருதுவதில்லை. வரதட்சணையை ஒரு சமூக குற்றமாகவும் பார்க்கப்படுவதில்லை. 90- களுக்கு முன்பு நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் மேலோங்கியிருந்த காலத்தில் கூட ஊடகங்களில் குறைந்தபட்சம் இது குறித்து விவாதம் நடக்கும். வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் கொலை செய்யப்படுவது, பெண்கள் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாகவே வாழ்க்கையை நடத்துவது போன்ற கொடுமைகள் பற்றி சிறுகதைகள், நாவல்கள் போன்ற வடிவங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றோ விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒரு பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியாக வரதட்சணை பற்றிய விவாதங்கள் நடத்தப்படுகிறது. வரதட்சிணை கேட்பதற்கு வெட்கப்படுவதில்லை. மாறாக தலைநிமிர்ந்து பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. சன் டிவியின் கல்யாண மாலைகள் முதல் திருமண வரன் நிலையங்கள், மேட்ரிமணி டாட்காம்கள் வரை அனைத்திலும் கூச்ச நாச்சமின்றி நடக்கிறது.
வரதட்சைணைக் கொடுமைகள் தொடர ஏறக்குறைய அனைத்து திருமணங்களும் அகமண முறையிலேயே தொடர்வதும், ’கல்லானாலும் கணவன்’ என்ற பிற்போக்குத்தனம் நீடிப்பதால் அவன் ஆயிரம் கொடுமைகள் செய்தாலும் அடங்கி போக பெண்கள் நிர்பந்திக்கப்படுவதும், திருமணத்திற்கு பின் பெண்கள் கணவனின் வீட்டில் கட்டாயம் வாழ வேண்டிய நிலைமையே இருப்பதும் (கூட்டுக் குடும்பம் என்ற முறையில்), திருமணங்கள் பெரும்பான்மையாக பெற்றோரால் தீர்மானிக்கப்படுவதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. வழமையான பிற்போக்கு கண்ணோட்டத்திற்கு மாறாக சிந்திக்க பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கலாநிதிமாறன் வகையறாக்களின் சன் குழுமம் உள்ளிட்ட தொலைக் காட்சிகள் அன்றாடம் ஒலிபரப்பும் நெடுந்தொடர்கள் இந்த திருப்பணியை சிறப்பாக செய்கிறது.
பெண்களை பண்டமாகவும், நுகர்வுப் பொருளாகவும் அணுகுகின்ற ஆணாதிக்க தன்மையை எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக் கொள்ளும் நிலவுடமை சமூக அமைப்பும், அனைத்து மதங்களும் முன்வைக்கும் சீரழிந்த கலாச்சார, பழக்க – வழக்கங்களும், இத்தகைய பிற்போக்குத் தனங்களை தனது சுரண்டல் நலனுக்காக பாதுகாத்து நிற்கும் ஏகாதிபத்திய கலாச்சாரமும் அடித்து நொறுக்கபடாமல் பெண்களின் மீதான எத்தகைய வன்கொடுமைகளுக்கும் தீர்வு காண முடியாது. எனினும் அத்தகைய சமூக மாற்றம் நிகழும் வரை இதுபோன்ற கொடுமைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. குறிப்பாக இளைய தலைமுறையினர் சுயமரியாதையுடன் வரதட்சணை கேட்பதை நிராகரிப்பதும், பெண்கள் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்து கொள்வோம் என்று முன்வருவதும், இவற்றை ஒரு இயக்கமாக கருத்து பிரச்சாரமும், நேரடியாக பல திருமணங்களை முன்னின்று நடத்துவதன் மூலம் அழுகி நாறி, புழுத்து போயுள்ள இந்த சமூக அமைப்பில் இருந்து பெண்களை ஓரளவிற்கு மீட்டுக் கொண்டுவர முடியும்.
தமிழகத்தில் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடிய தந்தை பெரியார் உள்ளிட்ட முற்போக்கு மரபுகள் பரப்பப்பட வேண்டும். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஒரு முன்னுதாரணமான பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்கள். அது நாடு முழுவதும் உள்ள மாணவ சமுதாயத்திடம் பரவ வேண்டும். மார்ச்-8 பெண்கள் தினம், அன்னையர் தினம் போன்ற தினங்களில் மட்டும் சடங்குத்தனமாக பெண்கள் உரிமைகளை கதைத்துத் திரியாமல், வரதட்சிணை என்னும் கொடிய மிருகத்திற்கு எதிரான போராட்டத்தை இன்றே துவங்குவோம் என்று உறுதி எடுப்போம்!
— பா. மதிவதனி
கடைசி வரியில் மார்ச்-8 என்பதற்கு பதிலாக மார் – 8 என்று உள்ளது.திருத்திக் கொள்ளவும்.
புள்ளிவிவரங்கள் சிறப்பு.