பாசிசத்தை வீழ்த்து!

ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக் காட்டச் சொன்னான் இறைவன்
நீ எங்கள் கன்னத்திலா அடித்தாய்!
இலாப வெறிபிடித்த பிசாசே
காவித் தீ ஆர்ப்பரிக்க
எம்மை வேள்வி பிண்டம் செய்தாய்
பசு வதை குண்டர்களால்
எம்மை அடித்துக் கொன்றாய்
பாலியல் குண்டர்களால்
எம்மை புணர்ந்து கொன்றாய்
பாசிசக் குண்டர்களால்
சாதி மத வெறி பரப்பி
இலாப வெறி பூஜைக்கு
மனித குலத்தை நரபலித்தாய்
உலகில் இருப்பதெனில்
கொல்பவராய் இரு
இல்லையெனில் கொலைபடு என்றாய்
உன் பாசிச உலகிற்கு
வியாக்கியானம் செய்தாய்
எங்கள் இதயங்களை வெடித்து
நிலங்களைப் பறித்தாய்
வனங்களை எரித்து
சுவாசத்தை அடைத்தாய்
சிறகுகளை முறித்து
உரிமைகள் தடுத்தாய்
உணவுக்கும் நீருக்கும்
தாழ்ந்திடச் செய்தாய்
வளங்களைக் கொன்றாய்
வரிகளைத் தின்றாய்
சொந்த மக்களை
அகதியாய்க் கொன்றாய்
ஒட்டிய ஒற்றை வயிற்றை
ஓராயிரம் முறை உதைத்தாய்
ஒரு வயிற்றில் உதைத்தால்
மறு வயிற்றைக் காட்டச் சொல்வாய்
உழைக்கும் மனிதர் எம்மிடம்
ஒற்றை வயிறுடைய கோடிக் கரங்களே உண்டு
இனி மறு கன்னம் காட்டும் மடமை துறந்தோம்
உன் கல்லறை கட்டவே கரங்கள் இணைந்தோம்
எம் கேடற்ற நல்லுலகம் உன் கல்லறையில் சமைக்கப்படும்
அங்கே வண்ண வண்ண விடுதலை மலர்கள்
ரீங்கரித்து நடனமிடும் உரிமை வண்டுகள்
தலைமுறை போற்றும் மானுட வனங்களில்
இயற்கை நெகிழ்ந்து உருக
சிதைப்பாறற்று கட்டப்பட்டிருக்கும்
அன்புத் தேன்கூடுகள்
மானுட மலர்கள் இயற்கையின் பேரழகாய் வண்ணமிடும்.

புதியவன்.

2 COMMENTS

  1. மானுட மலர்கள் இயற்கையின் பேரழகாய் வண்ணமிடும் நாள் வரும்
    ஒரு நாள் வரும்…..
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here