வெற்றி ஒன்றே இலக்கு என்ற பெயரில் சக மனிதர்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்ற அற்ப சிந்தனையையே ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்குகிறது. அதன் முகத்தில் அறையும் வகையில் மனிதத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் இவான் போன்ற மனிதர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
2012 டிசம்பரில் புர்லாடா, ஸ்பெயினில் நடைபெற்ற நீண்டதூர (cross-country) ஓட்டப்பந்தயத்தில் கென்யாவின் ஓட்டப்பந்தய வீரர் ஆபெல் முட்டாய் (Abel Mutai) பந்தய வெற்றிக் கோட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார். ஆனால் பந்தயப்பாதை குறிகளால் குழப்பமடைந்து வெற்றிக் கோட்டை அடைந்துவிட்டோம் என்று ஓட்டத்தை முடித்துக்கொண்டார். ஒட்டத்தில் ஆபெல்லுக்கு பின்னால் (ஸ்பானிஷ் பேசும்) இவான் பெர்னாண்டஸ் (Ivan Fernandez) இருந்தார். கென்ய வீரர் ஆபெல் குழம்பிப்போய்விட்டார் என்பதை உணர்ந்த இவான் தொடர்ந்து ஓடுமாறு ஆபெலை நோக்கிக் கத்த ஆரம்பித்தார். ஆபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது. இவான் என்ன சொல்லுகிறார் என்று ஆபெல்லுக்கு புரியவில்லை. தான் கூறுவது ஆபெல்லுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்த பெர்னாண்டஸ் ஆபெல்லை வெற்றிக்கோட்டை நோக்கி விரையச் செய்தார்.
இதைக் கவனித்த ஒரு நிருபர் இவானிடம், “நீங்கள் இதை ஏன் செய்தீர்கள்?” என்றார். அதற்கு இவான் பதிலளித்த பதில்: “ஒரு நாள் நாம் ஒரு மேம்பட்ட சமுதாய வாழ்க்கை நிலைக்கு உயர்வோம் என்பது என் கனவு. அந்த சமூக அமைப்பில் நாம் மற்றவர்களையும் வெற்றி பெற வைக்கவேண்டும்.”
நிருபர் முன்வைத்த அடுத்த கேள்வி: “ஆனால் நீங்கள் ஏன் கென்யாவை வெல்ல அனுமதித்தீர்கள்?” அதற்கு இவானின் பதில்: “நான் அவரை வெல்ல விடவில்லை; அவர்தான் வெல்லவேண்டும். போட்டி அவருடையது” என்றார்.
நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார்: “ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!” இவான் நிருபரைப் பார்த்து பதிலளித்தார்: “ஆனால் நான் ஆபெல்லின் குழப்பத்தை பயன்படுத்தியிருந்தால் எனது வெற்றியின் தகுதி என்னவாக இருக்கும்? இந்த பதக்கத்தின் மரியாதை என்னவாக இருக்கும்? எல்லாவற்றுக்கும் மேலாக என் அம்மா என்னைப் பற்றி என்ன நினைப்பார்?”
மதிப்பீடுகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரவுகின்றன. நாம் நமது குழந்தைகளுக்கு என்ன மதிப்பீடுகளைக் கற்பிக்கிறோம்? மற்றவர்களுக்கு நாம் எவ்வளவு ஊக்கமளிக்கிறோம்? நம்மில் பெரும்பாலோர் மக்களின் பலவீனங்களை பலப்படுத்த உதவுவதற்குப் பதிலாக அவற்றைப் பயன்படுத்துகிறோம். இது எவ்வளவு தவறானது என்பதற்கு இவான் மிகச் சிறந்த உதாரணம்.
நம்மில் எத்தனைபேர் இவானோடு ஒத்துப்போகிறவர்களாக இருக்கிறோம்? பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் போட்டியை முன்னிறுத்தி பேசும்போது எங்கள் மகனும் இவானைப் போலவே பலமுறை கேள்விகேட்டுள்ளார். மகனின் கேள்விக்கு இன்று ஓட்டப் பந்தயவீரர் இவான் மூலம் தக்க பாடம் கற்றுக் கொண்டோம்.
நன்றி இவான்…
நன்றி : விக்னேஷ் ஜனார்தனன் (முகநூல் ஆங்கில பதிவு)
தமிழில்: தோழர் இரவிச்சந்திரன்.தோழர் இரவிச்சந்திரன்.