நூல் அறிமுகம்:

கம்யூனிசக் கொடியின் கீழ்…

பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றால் தொழிற்சங்கத்தை முறையாக வழி நடத்துபவர்கள், பெரும்பாலும் ஊழல் செய்யாதவர்கள், ஊரின் பொது விஷயங்களில் தலையிடுபவர்கள், பிற அரசியல் கட்சிகளில் இருப்பவர்களை விட ஓரளவு வேறுபட்டவர்கள் என்பதுதான் பொதுவான மக்களின் கருத்தாக உள்ளது.
“கம்யூனிஸ்டுகள் ஆகிய நாங்கள் தனி வார்ப்பு; தனி தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலக பாட்டாளி வர்க்க படையின் நேர் நிகரற்ற போர் தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட சிறந்த பெருமை எங்களுக்கு வேறு எதுவும் இல்லை” என்கிறார் ஜூலியஸ் பூசிக்.

ஜூலியஸ் பூசிக். czechoslovakia நாடு உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு ஈந்த ஒப்பற்ற மாவீரன். இரண்டாம் உலகப்போரில் செக் நாடு ஹிட்லரின் கோரப்பிடியில் சிக்கி திணறிய போது அப் பாசிச இருள் கிழிக்க ஆவேசத்தோடு எழுந்த கம்யூனிச போராளி.
ஜூலியஸ் பூசிக் போன்ற போராளிகளின் வழிமுறைகள், இழப்பு, தியாகத்திற்கு அஞ்சாத நேர்மையான வாழ்க்கை முறை போன்றவைகள் இன்று கேள்விக்குள்ளாக்கப் பட்டு வருகிறது. கம்யூனிஸ்டுகள் என்றால் தவறே செய்யாத ‘கடவுளர்கள்’ அல்ல! வர்க்க சமுதாயத்தில் தோன்றி வாழ்கின்ற போது அதில் நிலவுகின்ற அனைத்து விதமான கசடுகளும் அவர்களின் சிந்தனையில் ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த கசடுகளை அகற்றுவதற்கான நேர்மையான போராட்டத்தின் மூலமே ஒருவர் சிறந்த கம்யூனிஸ்ட் ஆக முடியும். அப்படிப்பட்ட கம்யூனிஸ்டுகள் மட்டுமே பாசிசத்தை ஒழிப்பதிலும் முன்னோடியாக செயல்படமுடியும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு கம்யூனிஸ்டிடமும் இருக்கவேண்டிய கையேடான சிறு வெளியீடு இது. கம்யூனிஸ்டுகளின் உயர்ந்த நெறிமுறைகளை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி தன்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்தி கொள்ள தூண்டுகிறது இந்த நூல்.

“மனிதகுலம் சுதந்திரமாகவும், சமாதானமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு நாங்கள் கடைப்பிடிக்கும் வழியைத் தவிர வேறு வழியே இல்லை. எங்களுடன் வராத ஒருவன் தனக்கு விரோதமாக போகிறான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்” என்று சுட்டிக்காட்டுகிறார் ஜூலியஸ் பூசிக். இவ்வாறு மக்கள் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்து காட்டுவதுதான் ஒரே வழியாகும்.
அப்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு இந்த சிறுநூல் தங்களுக்கு உதவுகிறது.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here