நூல் அறிமுகம்:

நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் தமிழகத்தின் முற்போக்கு வழக்கறிஞர்களில் ஒருவரான, மூத்த வழக்கறிஞர் திரு.தி.லஜபதிராய் எழுதி 2019 ஆம் ஆண்டு வெளியானது.

“கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூக போராட்டங்களில் பின் விளைவு தான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்து மையம் நோக்கி சிறிதளவு நகர்த்தி உள்ளது.

ஈயேன இரத்தல் இழிந்தன்று என்பதை தவிர உழைத்து வாழும் எந்த தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்துவிட நினைப்பது ஒருவகை பண்ணை அடிமைத்தன (feudal) எண்ணவோட்டமே!

இன்று உயர்வாகவும் அல்லது தாழ்வாகவும் கருதப்படும் எல்லா சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிக சிறிய வேறுபாடுகளை கொண்ட கிட்டத்தட்ட ஒரே மரபணுக்களைக் கொண்ட மனித குலத்தினர் தாம் என்பது நிரூபிக்கப்பட்ட அடிப்படையான மானுட வியல். கருப்பு, வெள்ளை மனித இனங்களில் கூட மரபணு வேறுபாடுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.

இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்வதன்று. சமீபகாலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய -கிருத்தவ சமூகத்தினருடனும், பிற பட்டியல் இன விளிம்புநிலை மக்களுடன் நிற்கவேண்டிய நாடார்களின் மன ஓட்டத்தில், இந்து வலதுசாரி சிந்தனை மிகுதியாக இருப்பதை காணமுடிகிறது.

இந்நிலையில் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது” என்று நூலின் துவக்கத்திலேயே தனது அறிமுக உரையில் தோழர் லஜபதிராய் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஆனால் இந்த நூலை நாடார் சாதிப் பெருமையைப் பேசுகிறது என்று இழிவுபடுத்தியது ஒரு கும்பல். வினவு இணையதளத்தில் இந்த நூலை அறிமுகப்படுத்தி எழுதியதை கொச்சைப்படுத்தி புறந்தள்ள நிர்ப்பந்தித்தது.

நூலின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாமல் மேலெழுந்தவாரியாக சில அம்சங்களை படித்துவிட்டு அதிமேதாவிகள் போல காட்டிக் கொள்ளும் நுனிப்புல் மேயும், அரைவேக்காடுகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டனர். இவர்கள் பின்னால் ஒளிவட்டம் சுற்றுவதால் இவர்கள் கூறுவது உண்மை என்று சிலர் அப்பாவித்தனமாக நம்புகின்றனர்.

வழக்கறிஞர் லஜபதிராய் சுட்டிக் காட்டியது  போல பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த அய்யா வைகுண்டர் வழிபாட்டு முறையை இன்று ஆர் எஸ் எஸ் கைப்பற்றி அவரை இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்றுவதற்கு சதித் தனத்தை செய்துவருகிறது.

இந்திய தத்துவ மரபில் பார்ப்பன எதிர்ப்பு கருத்துக்களை இருட்டடிப்பு செய்தோ அல்லது செரித்தோ இந்து தத்துவ மரபாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு வால் பிடிக்கின்ற வகையில்  நாடார்களில் ஒரு பிரிவினர் செல்கின்ற அபாயத்தை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ள இந்த நூல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நூலை பரவலாகக் கொண்டு செல்வோம்! குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நாடார்கள் மத்தியில் அவர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் தொழில் முடக்கம், வர்த்தக பாதிப்பு போன்றவற்றுக்கு அடிப்படை ஆர்எஸ்எஸ் முன்வைத்துள்ள பொருளாதாரக் கொள்கைகளே என்பதை தெளிவாக புரிய வைப்போம்.

வரலாறு குறித்த வலதுசாரி பார்வையை பரிசீலனைக்கு உட்படுத்த கோருவோம்.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here