நூல் அறிமுகம்: முரண்பாடு பற்றி


கம்யூனிசத்தை கற்றுக்கொள்ள விரும்பும் எவரும் இயக்கவியலை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் மூன்று முக்கிய விதிகளில் முக்கியமானதும், அடிப்படையான விதியுமாகிய முரண்பாடு பற்றிய விதி, அதாவது எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய விதி என்பதுதான். இதுவே இயக்கவியலின் சாரம் என்கிறார் தோழர் லெனின்.

இந்த முரண்பாட்டை கையாள்வதில் வறட்டுத்தனமான போக்குகளும், எந்திர வகைப்பட்ட அணுகுமுறைகளும் அடிக்கடி நிகழ்வதால் பல இழப்புகளை கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கிறது.

முரண்பாடுகளில் எதிரிக்கும் நமக்கும் இடையிலான முரண்பாட்டை பகைத் தன்மையுடனும், மக்களிடையே தோன்றுகின்ற முரண்பாடுகளை நட்பு ரீதியிலும் அணுகுகின்ற இயக்கவியல் அணுகுமுறையே எப்போதும் வெற்றியை ஈட்டித் தருகிறது.

“கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இடையே எதிர்ப்பும் போராட்டமும் இடைவிடாது நிகழ்கின்றன. இவை சமுதாயத்தில் உள்ள வர்க்கங்களுக்கு இடையிலும், புதியவை பழையவை இரண்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் கட்சிக்குள் ஏற்படுத்தும் எதிரொலியாகும். கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை என்றால் அவற்றை தீர்ப்பதற்கான சித்தாந்த போராட்டங்கள் எதுவுமே இல்லையென்றால் கட்சியின் வாழ்வு முடிந்து விடும்.” என்று உட்கட்சி வாழ்வில் உள்ள அறிவியலற்ற அணுகுமுறையை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார் தோழர் மாவோ.

ஒரு நாட்டில் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியாக ஏற்படும் மாற்றங்களில் உள்ள குறிப்பான முரண்பாடுகளை பருண்மையாக புரிந்துகொள்வதற்கும்,
கட்சிக்குள் தோன்றுகின்ற இடது, வலது சந்தர்ப்பவாத போக்குகளை உருவாக்குகின்ற அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கும், தோழர்களிடம் ஏற்படும் வாழ்க்கை தொடர்பான சிக்கல்களை கையாள்வதில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை புரிந்துகொள்வதற்கும், அறிவியல்பூர்வமான சிந்தனை முறையை இந்த நூல் உருவாக்குகிறது.

‘படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்’ என்ற பழமொழியை நிரூபிக்கின்ற வகையில் நிஜவாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விதமான போலி கம்யூனிச நபர்களின் ஆழ்மனதில் உள்ள அழுக்குகளை ஊடுருவிப் பார்க்கும் திறனை இந்த நூல் நமக்கு வழங்குகிறது.

இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை பாட்டாளி வர்க்கம் எளிமையாக புரிந்து கொள்கின்ற வகையில் முன்வைத்துள்ள தோழர் மாசேதுங் அவர்களின் இந்த நூல் எப்போதும் நம் கைகளில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் (G PAY)  – 8925648977

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here