பாட்டாளி வர்க்க கட்சியின் இயல்பு பற்றி

               ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியுமான லெனினிச சகாப்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி போக்கானது கடந்த 100 ஆண்டுகளில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. நிதி மூலதனத்தின் பாய்ச்சல் உலகெங்கிலும் குறுக்கு நெடுக்காக 24 மணி நேரத்தில் பல லட்சம் கோடி டாலர்கள் என்ற வகையில் பாய்ந்து கொண்டுள்ளது.. ஆனால் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தும் வல்லமை படைத்த பாட்டாளி வர்க்கமும், மூலதனத்தின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உலகம் முழுவதும் குறுக்கு நெடுக்காக வேலை தேடி அலைந்து கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று படுத்துகின்ற அரிய சித்தாந்தம் மார்க்சிய-லெனினிய, மாவோ சிந்தனை மட்டுமே ஆகும். அந்த சித்தாந்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை சாதிக்க முடியாது. சித்தாந்தத்தை அமுல்படுத்தக் கூடிய எஃக்குறுதி கொண்ட, போல்சவிக் மயமான கட்சியை கட்டுவதன் மூலமே பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான ஆயுதத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிறுத்த முடியும்.

அத்தகைய உயிர்த்துடிப்புள்ள பாட்டாளி வர்க்க கட்சி மற்ற முதலாளித்துவ கட்சிகளை போல அல்லாமல் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் தனது ஒற்றுமையை உருவாக்கிக் கொள்கிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தத்தை உடைக்க முடியாத போது பாட்டாளி வர்க்கத்தை தனிநபர் வழிபாட்டுக்கும், வரம்பற்ற தனிநபர் சுதந்திரத்திற்கும் ஆட்படுத்தி மன உறுதியை உடைக்கப் பார்க்கிறது.

ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளை நிராகரிக்கும் வகையில் தனிநபர்களின் அதிகாரத்தின் கீழ் பாட்டாளி வர்க்க கட்சியை சீரழிப்பது, இதற்கு கூம்பு வடிவிலான அமைப்பு முறையே சிறந்தது என்று சவடால் அடிப்பது, ஜனநாயக மத்தியத்துவத்தையே கிடைமட்டம் என்று நக்கலடிப்பது, ஆனால் நடைமுறையில் மொட்டைக் கூம்பாக  (கோபுரமாக) நிற்பது, இதையும் தோழர். லெனின் பெயரால் நெஞ்சழுத்தத்துடன் முன்வைப்பது, கட்சியை சொந்த சொத்தாக கருதும் அதிகார வெறியர்களின் திமிர்தனங்களை திரை கிழிக்கிறது இந்த நூல்.

இவற்றை விமர்சித்துக் கொண்டே ஜனநாயகம் இல்லாத மத்தியத்துவம், மத்தியத்துவத்தை அமல்படுத்தாத ஜனநாயகம் என்றெல்லாம் பல வார்த்தைகளில் குழப்பிக் கொண்டு திரியும்  அதீத ஜனநாயக போக்குகளுக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்கத்தை சித்தாந்த ரீதியில் ஆயுத பாணியாக மாற்ற  இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே கட்டுப்பாடு – ஒழுக்கம் போன்ற விதிமுறைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று அஞ்சியும், தனது தாராளவாத – மட்டற்ற, சுதந்திர உணர்வுகளுக்கு எதிரானது என்றும், தன்னிடம் உள்ள பலவிதமான குட்டி முதலாளித்துவ அற்ப உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி விடும் என்று தயங்கியும் பலவிதமான வார்த்தை ஜாலங்களில் பிதற்றிக் திரியும் எண்ணற்ற சுதந்திர மார்க்சியர்களுக்கு எதிராக உறுதியான ஸ்டாலினிச பாணியிலான கட்சி கட்டுவதன் அவசியத்தை இந்த சிறு நூல் எடுத்துரைக்கிறது.

மார்க்சிய – லெனினிய கட்சியை தனது அகநிலை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க முயல்கின்ற அல்லது மார்க்சிய – லெனினிய கட்சி தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற சு’தந்திர’ மார்க்சியர்களின் புரட்டுகளை முறியடிக்கும் ஆயுதமாக, புரட்சியை நேசிக்கின்ற உண்மையான கம்யூனிஸ்டுகள் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய கையேடு இந்த நூல்.

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977

கருத்துப் போராட்டத்தில் இணையுங்கள்! செய்திகளை மக்களுக்கு பகிருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here