லைசுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளவர்கள் நூலை வாசிக்க வேண்டாம் என டிஸ்கிளைமர் போடுமளவுக்கு, பிணவரைக்குள் வாசகரை கட்டி வைத்து கதை சொல்லி இருக்கிறது, ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதி NCBH வெளியிட்டுள்ள கிடங்கு நாவல்.

வலைத்தள பக்கமொன்றில் வந்த தொடர் கட்டுரைகளை தொகுத்து நாவலாக வெளியிட்டுள்ளார்கள்.

96 பக்கங்களில், 15 அத்தியாயங்கள். வேதாளம் – விக்கிரமாதித்தன் கேள்வி பதில் வகையில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அதன் சாரத்தை அசைபோடும் வகையில் அமைத்துள்ள பாங்கு சிறப்பு.

சாதிய படிநிலை சமூகத்தால் அடித்தட்டு சாதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைப்பிரிவினைகளில், மலம் அள்ளுதல், குப்பை அள்ளுதல், மாடறுத்தல், பிணம் எரித்தல் போன்ற முக்கியதொரு ‘உத்யோக’மான பிணக்கூராய்வு தொழிலாளர்களின் அக – புற வாழ்வியலை பேசும் நாவல்.

தொழிற்சங்கத் தலைவர் மாயாண்டியை மையமாக வைத்து, சாதி, மதம், மனிதம், பால் வேற்றுமைகள், தொழிலாளர் பிரச்சனைகள், நிர்வாக சீர்கேடுகள் என அனைத்தையும் தொட்டுக்காட்டி செல்லும் நாவல் பல இடங்களில் உள்ளூர் முதல் சர்வதேச அரசியல் வரை நையாண்டி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாமானியர்கள் உள்ளே செல்ல அஞ்சும், குடலை பிடிங்கும் நாற்றமெடுக்கும் பிணவறைக்குள் வெகு இயல்பாக அன்றாட பணிகளை செய்யும் தொழிலாளர்கள். அவர்களுக்கு இடையிலான உறவுகள். சிரிப்பு, கேலி, கிண்டல், அழுகை, கோபம் இயல்பான அவர்களின் வாழ்வினை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

நேர்மையான தொழிற்சங்க தலைவரின் மகள் இதயா கருணை அடிப்படையிலான வேலையை நிராகரித்து, சுயதொழில் தொடங்கப் போவதாக முடிகிறது, நாவல். அங்குதான் கொஞ்சம் நெருடல்.

நேர்மையான தொழிற்சங்கத் தலைவரின் மகள், மருத்துவமனையில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள் முதல், பணியாளர்கள் படும் துன்பங்களை அறிந்தவர், தான் வாழும் அடித்தட்டு மக்களின் துன்பங்களை உணர்ந்தவர். அனைத்தையும் உதறிவிட்டு உணவகம் திறந்து ரவுசு (நாவலில் வரும் திருநங்கை) போன்றவர்களுக்கு வாழ்வளிக்க போகிறேன் என்று சொல்வதில் தான் நமக்கு கொஞ்சம் நெருடலாக உள்ளது.

வர்க்கங்களாய் பிளவுண்டுக் கிடக்கும் சமூகத்தில், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியாக போராடும் மாந்தர்கள் தான் கதை நாயகர்களாக இருக்க முடியும். இருக்க வேண்டும். நாவலின் இறுதியில் வர்க்கப் பார்வையை மறுக்கும், சீர்த்திருத்த கருத்து தான் நமக்கு பிணவரை நாற்றத்தை விடவும் குமட்டுகிறது.

நாயகர்கள் சினிமாவில் துன்பத்தில் உழன்று கிடந்து, திடீரென கிளைமாக்சில் முன்னேறி விடுவதை போன்றதல்லவே எளிய மக்களின் வாழ்க்கை. பெண்ணொருத்தி தனித்து சமூகத்தில் முன்னேறுகிறாள் என்பது மட்டும் பெண் விடுதலையின் அளவுகோல் இல்லையே!


இதையும் படியுங்கள்:


மாயாண்டியின் இறப்புக்கு பின்னர் தனக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்கிறது என்கிற செய்தி அறிந்த மாத்திரத்தில், நானும் நவீன கொத்தடிமையாக வேண்டுமா என கோபமடைகிறார், இதயா  தன் தந்தையோடு இத்தனை காலம் பணிபுரிந்த உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் பழைய கொத்தடிமைகளாகவே அந்த பிணவறை புழுக்களுடனும், அழுகிய பிணத்தின் சதை ரத்தத்துடனும் கிடக்கிறார்கள். அதைப் பற்றி இதயாவின் கருத்து என்ன என்பது தான் எழுப்பப்பட வேண்டிய முக்கிய கேள்வி.

“புதுசா ஏதாவது சாதிக்கனும், பெருசா ஏதாவது பண்ணனும்” இந்த சிந்தனை தான், இளைய தலைமுறை தொழிலாளர்களை தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கிறது. சங்கமாக சேர்ந்து போராடி நமது உரிமைகளை பெற வேண்டும் என்கிற பாட்டாளி வர்க்க உணர்வை, தொழிற்சங்க உணர்வை மழுங்கச் செய்வது இந்த முதலாளித்துவ சிந்தனையே. அதுதான் இதயாவின் ‘இதய’த்திலும் இருந்தது என்றால், இந்த விளிம்புநிலை மக்களின் துயரங்களை பரிதாபத்துக்குரிய கதையாகவே கடந்து செல்ல முடியுமே ஒழிய, அவர்களின் விடுதலைக்கான ஒரு தூண்டுகோலாக இந்த நாவல் அமையாது…

  • செல்வா

விலை: 120

வெளியீடு: NCBH

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here