நாடு முன்னேறுதுங்குறான்!

ஓரிரு நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் பாட்டில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரது பேச்சு குறித்து விவாதிக்கும் முன், அவர் என்ன பேசினார்? என்பதை தெரிந்து கொள்வோம்.

‘வெங்காயம் , உருளைக் கிழங்கு விலையை குறைப்பதற்காக மோடி பிரதமராகவில்லை. ஆட்டு இறைச்சியை ரூ 700க்கும், பீட்சாவை ரூ 500 க்கும் எங்களால் வாங்க முடியும்.

அதே நேரத்தில் வெங்காயம் 10 ரூபாய்க்கும் தக்காளியை ரூ 40க்கும் வாங்குவது எங்களுக்கு செலவாகும்! என மக்கள் கருதுகிறார்கள். வெங்காயம், உருளைக்கிழங்கு,
துவரம் பருப்பு, இவற்றில் இருந்து முதலில் நாம் வெளியே வர வேண்டும்.

கபில் பாட்டீல்

நாடு இல்லையென்றால் வெங்காயம், உருளைக்கிழங்கை எங்கிருந்து வாங்குவோம்? முதலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மோடி, அமித்ஷா போன்றோர் நாட்டைக் காப்பாற்றும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

கபில் பேச்சை மேம்போக்காக கவனித்தால் நம்மூர் செல்லூர் ராஜூ பேச்சு போலத் தோன்றும். ஆனால் இப்பேச்சுதான் ஏகாதிபத்திய, கார்ப்ரேட்மய அரசியலின்
உட்பொருளாக இருக்கிறது.

இந்தியாவின் எண்பது சதவீத மக்கள் தினந்தோறும் மட்டனும், பீசாவும் சாப்பிடுபவர்கள் அல்லர். வட இந்திய ஏழைகளுக்கு சப்ஜியும் அவித்த உருளைக்கிழங்குமே முழு நேர உணவு. நமக்கு பழைய சோறு, பச்சை மிளகாய், வெங்காயம்!

கபில் தானேவில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் நான் “வேளாண் சட்டங்கள் – 30 ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டன் டிசியில் எழுதப்பட்டவை” எனும்
சிறு நூலை படித்தேன். தமிழ்நாடு, விவசாயிகள் விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள நூல். இந்திய வேளைண்மை அழிந்த வரலாறையும், வேளாண் சட்டங்களின் தோற்றுவாயையும் விவாதிக்கிற நூல்.

இந்தியாவில் உருளை, வெங்காயம், தக்காளி மற்ற உணவுப்பொருட்களின் விலையேற்றம் என்பது இவற்றை உற்பத்தி செய்வதில் ஏற்பட்ட
தேக்கத்தால் நிகழ்வது அன்று.

ஏகாதிபத்திய சந்தை நலனால் ஏற்பட்ட விளைவு. உணவுப் பொருட்களை
விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும்! எனும் ஐரோப்பிய நாடுகளின் சந்தை வெறியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதன் விளைவு.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948 தொடங்கி , 1994 வரை நடைபெற்ற எட்டு சுற்று ‘காட்’ பேச்சு வார்த்தையின் விளைவால் நிகழ்ந்த மாற்றம்.

விவசாயம் இங்கு ஒரு பண்பாடாக கருதப்பட்டது. உழவுத் தொழிலை, ‘வேளாண் பெரு நெறி’ என்றது தொல்காப்பியம். ‘இருந்தோம்பி இல் வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு’ என்றார் வள்ளுவர்.

ஆனால் காட் ஒப்பந்தம், ஒரு பண்பாடாக (culture) இருந்த வேளாண்மையை வர்த்தகமாக (business) மாற்றியது. உலக விவசாயத்தை தன் கைக்குள் கொண்டுவந்து அதை ஒரு தொழிற்சாலையாக மாற்ற ஆசைப்பட்டது ஏகாதிபத்திய நிதி மூலதனம்.

இதன் பொருட்டு வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் உற்பத்தியிலிருந்து அந்த நாடுகளை நீக்குவது. அதன் சுயசார்பு தன்மையை அழிப்பது! என முடிவு செய்தது. இந்நாடுகள், தம் உணவுத் தேவைக்கு ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தி நிற்கும் நிலையை உருவாக்கியது.

1990 -1991 காலக்கட்டம். இந்தியாவுக்கு கடன் நெருக்கடி. அந்நிய செலாவணி நெருக்கடி. இதன் காரணமாக ஐஎம்எஃப்பிடம் தன்னை ஒப்புக் கொடுத்தது இந்தியா. அது விதித்த காட் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு தன் விதைகளையும் விவசாயத்தையும் இழந்தது.

இந்திய வேளாண் உற்பத்தி மற்றும் நுகர்வை அழித்தது காட் ஒப்பந்தம்.
காட் ஒப்பந்தத்தின் முக்கிமான கட்டளைகளுள் ஒன்று உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என்பது.

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருந்தது. ஏகாதிபத்தியம் காட் ஆபரேஷன் மூலம் அதை உருவியெடுத்து, முதுகெலும்பில்லாத நாடாக இந்தியாவை மாற்றியது.

வயலும் வயல் சார்ந்த இடமும், காடும் காடு சேர்ந்த இடமும், மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் கார்ப்ரேட் சார்ந்த இடங்களாக மாறின. மீத்தேன், நிலக்கரி, ஸ்மார்ட் சிட்டி , எண்வழிச் சாலை, கிரானைட், ஷெல் கேஸ், காஸா கிராண்ட் என அழிந்தது இந்திய விவசாயம். கிராமங்கள் அழிந்து நகரங்களின் தொங்குசதையாக புறநகர்கள் வளர்ந்தன. விவசாயிகளின் பிள்ளைகள் குறைந்த கூலிக்கு கார்ப்ரேட் அலுவலக ஊழியர்களானார்கள்.

முதல் வாரத்தில், அமெரிக்க சிக்கனையும் , மால்களில் பீஸாவையும் கொரித்து செல்ஃபி போட்டார்கள்.

மீதி மூன்று வாரங்களில் லஞ்ச்சுக்கு தக்காளி ரசம் கொண்டு போனார்கள். அவ்வப்போது இன்ஸ்ட்டாவில், தங்கள் லஞ்ச் பாக்ஸை திறந்து காட்டி, தக்காளி விலையேறியதாக பெருமூச்சு விட்டார்கள்.

கபிலோ, மோடியின் வேலை தக்காளி, வெங்காயத்தின் விலையைக் குறைப்பதில்லை. நாட்டை முன்னேற்றுவது! என்கிறார்.

இதன் உட்பொருள் என்ன?

இன்னும், இன்னும், பீசாக் கடைகளை, கென்டகி சிக்கன் கடைகளை, கோக் பெப்ஸி கடைகளை திறக்க வேண்டும். அதற்கு நகரமயமாக்கல் கொள்கையை மேலும் 15 மடங்கு வேகமாக அமல்படுத்த வேண்டும் ! என்பதுதான். ஒருபுறம் வேளாண் நில அபகரிப்பு. இன்னொருபுறம் இந்தியமக்கள் மீதான உழைப்பு சுரண்டல்.
இதுதான் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அதானியை 10 வது இடத்துக்கும், அம்பானியை 11 வது இடத்துக்கும் முன்னேற்றியிருக்கிறது. இதைதான் நாட்டை முன்னேற்றுவது என்கிறார் கபில். அழுகிய தக்காளியைகூட கபில் முகத்தில் வீச விருப்பமில்லாமல், ரசத்துக்கு கரைக்கிறார்கள் ஏழை இந்தியர்கள்!
  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here