தமிழ் வேறு, இந்து வேறா?
~
நேற்று ஹெச். ராஜாவின் பத்திரிகையாளர் சந்திப்பு காணொலியைக் காண நேர்ந்தது. வழக்கம்போல பிதற்றியிருக்கிறார்.
‘காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.’ எனும் திருஞானசம்பந்தரின் நமச்சிவாயப் பதிகத்தை ஒப்புவிக்கிறார்.
ஒப்புவித்த பிறகு,
‘இந்து இல்லாவிட்டால்
தமிழ் எங்கிருந்து வந்தது?’
எனக் கேள்வி கேட்கிறார்.
ஏதோ இந்து மதம்தான் உலகில் பழமையான மதம் போலவும்,
இந்து மதத்தை பாடிதான் தமிழ் வளர்ந்தது போலவும் பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார் ராஜா.
சங்க இலக்கியங்களிலோ,
பக்தி இலக்கியங்களோ, இந்து
என்கிற சொல்லே இல்லை.
தமிழில் மட்டுமில்லை. 200 ஆண்டுகட்டு முந்தைய இந்திய இலக்கியங்களில் இந்து குறித்த குறிப்பே இல்லை.
இந்தியாவுக்கு வெளியே இந்திய நிலத்தை சிந்து என அழைத்தார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்
‘யார் முஸ்லீம்கள் இல்லையோ,
யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ,
யார் பார்சீக்கள் இல்லையோ
அவர்கள் எல்லாம் இந்துக்கள்’
என்கிற விளக்கத்தையே தருகிறது.
சைவம், ஆசீவகம் போன்ற பண்டைய தமிழர் மதங்களுக்கும் தற்போதைய இந்து மதத்துக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. இவை அனைத்தும் கடவுளை மறுத்த மதங்கள்.
சார்வாகம்,பெளத்தம்,சமணம்,சாங்கியம்,யோகம் என இங்கிருந்த மதங்களை அழித்து கடந்த இரு நூறாண்டுக்குள் வளர்ந்த மதமே இந்து மதம்.
கி.மு 400 காலத்திலேயே தமிழில் இலக்கியங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.
2500 ஆண்டுகால இலக்கியப் பாரம்பரியம் உடைய தமிழை,
இந்து மதத்தை பாடி வளர்ந்த மொழி!
என ஹெச். ராஜா கூறுவது எத்தகைய மலிவான வாதம்.
தமிழரின் தொன்மை சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கிறது. அது கற்றோர் மொழியால் எழுதப்பட்டவை.
பக்தி இலக்கிய வளர்ச்சி 7 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.
அது சங்க இலக்கியத்தில் பரிபாடலின் தொடர்ச்சியை உடையது. சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் பதிகங்களால் பாடப்பட்டது.
பக்தி இலக்கியங்கள் , இன்றைய இந்து மத அடையாளங்களைக் கொண்டவை அன்று. அவை சனாதானப் பண்புகளை ஏற்றுக் கொண்டவை இல்லை.
இறைவனுக்குமுன் எல்லா மனிதர்களும் சமம் என அணுகியதே தமிழரின் பக்தி இலக்கிய மரபு.
‘என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி’ என்கிறார் சுந்தரர். இறைவனை காம்ரேட்டாக பார்த்தது தமிழர்தம் பக்தி இலக்கியம்.
‘நாமார்க்கும் குடியல்லோம்’
என சுயமரியாதை பாடியவர் திருநாவுக்கரசர்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’
என சமத்துவம் பேசியவர் திருமூலர்.
அந்த பக்தி இலக்கியத்தைதாம்,
‘வான் கலந்த மாணிக்க வாசக
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்
நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து,
செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
என்ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’
எனப் போற்றுகிறார் தமிழாசான் வள்ளலார்.
இத்தகைய பக்தி தமிழை, தமிழர்தம் கோவில்களில் பாட அனுமதித்ததா ஹெச்.ராஜாவின் இந்து மதம்?
பக்தியை இசைத்தாலும் தமிழ் நீச பாஷை. சமஸ்கிருதம் தேவபாஷை. என தமிழை இகழ்ந்ததுதானே ஆரிய வரலாறு.
சாதியால் பிரிந்துகிடப்பவன், இனத்தால், மொழியால், தமிழராக இணைந்து விடக்கூடாது என்பதுதானே, ஆர்எஸ்எஸ் அஜெண்டா!
அதைதானே ஹெச்.ராஜா
வாய்கிழிய பேசுகிறார்.
‘காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி’ என்று பத்திரிகையாளர் முன் பாடுகிறாரே, இந்தப் பாடலை தன் வீட்டு பூஜையறையில் பாடுவாரா ஹெச். ராஜா?
ஸ்ரீரங்கத்தில், ஆழ்வார்களின்
தமிழ் பாடலுக்கு இடமில்லை.
தில்லையம்பலத்தில் ஆறுமுகசாமியை தேவாரம் பாட விடவில்லை.
யாரிடம் கதைவிடுகிறாய் ராஜா.
‘தமிழ் வேறு ,இந்து வேறா? ‘ என்று!
எங்கள் பக்தி தமிழை,
உன் இந்து மதம் மதிக்காத கோபத்தில்தானே,
எங்கள் தமிழ்க் கவி பாவேந்தன்,
‘சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ?’
எனப் பாடினான்.
அடேய், ஹெச்.ராஜா!
சீரங்கநாதனையும்
தில்லை நாடராசனையுமே
பீரங்கி வைத்து பிளக்கும்
தமிழ் வீரம் என்றால்
நீயெல்லாம் எம்மாத்திரம்! 👍
கரிகாலன்