தி காஷ்மீர் ஃபைல்ஸ் – சொல்ல மறந்த கதைகள்
காஷ்மீர் ஃபைல்ஸ் பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இது குறித்து எழுதவேண்டும் எனும் தவிப்பு மனமெங்கும் வியாபித்திருந்தது. கடுமையான பணிச் சூழல். உடனடியாக எதிர்வினையாற்ற முடியாமல் போனது.
சமகாலம், இறந்த காலம் என காஷ்மீர் ஃபைல்ஸ் காலத்தை முன்னும் பின்னுமாக (1989 – 2020) அசைத்தபடி நகர்கிறது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பா.ஜ.க அரசு படத்தை ஆஹா, ஓஹோ என பாராட்டுகிறது. கோவா , குஜராத் , ஹரியானா , கர்நாடகா , மத்தியப் பிரதேசம் , திரிபுரா , உத்தரப் பிரதேசம் , உத்தரகண்ட் , பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
அக்னி ஹோத்ரி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த நபர். கார்ப்பரேட் காவி ஃபாசிஸத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் உடையவர். கொகோகோலா விளம்பரங்களில் தொடங்கிய கார்ப்பரேட் விசுவாசம், நகர்ப்புற நக்சல்கள், தி மேக்கிங் ஆஃப் புத்தர் இன் எ டிராஃபிக்ஜாம், தாஷ்கண்ட் ஃபைல்ஸ் என காவி பாசிஸமாக வளர்ந்தது.
ஒரு சினிமாவாக முழுமையடையாத தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை மோடியும் அமித்ஷாவும் இப்படிக் கொண்டாடக் காரணம் என்ன? இந்தப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் அப்பட்டமான இஸ்லாம் வெறுப்பு தவிர்த்து வேறு காரணம் இல்லை. காஷ்மீர் அரசியலின் ஒரு பகுதியை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பெரிதாகக் காட்டும் படம் இது. வரலாற்று திரிபுவாதத்தையும் முஸ்லீம் வெறுப்பையும் அடிப்படையாகக் கொண்ட படம்.
சுருக்கமாக காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் கதையைப் பார்ப்போம்.
1989 ஆம் ஆண்டு வாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதை மிகையாக சித்தரிக்கும் படம்.
டெல்லி ஜெஎன்யுவில் படிக்கும் மாணவன் கிருஷ்ணா பண்டிட் (தர்ஷன் குமார்) . ஜெ.என்.யு பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிடுபவன் . இவனை வலதுசாரி சிந்தனைகளால் வளர்த்தெடுக்கிறார் பேராசிரியர் ராதிகா மேனன் (பல்லவி ஜோஷி – இயக்குநர் அக்னிஹோத்ரியின் மனைவி) .
பெற்றோர்கள் விபத்தில் இறந்ததாக உறவினர்கள் கூறுவதை நம்புகிறான் கிருஷ்ணா. வளர்ந்த பிறகு அவர்கள் இசுலாம் தீவிரவாதத்துக்குப் பலியாகியிருப்பதாக அறிகிறான். கிருஷ்ணாவின் தாத்தா புஷ்கர்நாத் பண்டிட் (அனுபம் கெர்). இவரது மகன் கரன். மருமகள் சாரதா (பாஷா சும்ப்ளி).
கரன் ஓர் இந்திய உளவாளி என அவனைத் தீவிரவாதிகள் தேடுகிறார்கள். தன் மகன் உயிருக்கு தீங்கு நேரிடுமெனக் கருதும் புஷ்கர் , ஐஏஎஸ் அதிகாரியும் தன் நண்பருமான பிரம்மாவிடம் (மிதுன் சக்ரவர்த்தி) மகனுக்கு அடைக்கலம் கோருகிறார்.
இசுலாம் போராளிக் குழுவின் தலைவன் ஃபரூக் மாலிக் பிட்டா (சின்மயி மண்லேகர்). இவன் புஷ்கர் பண்டிட்டின் முன்னாள் மாணவன். இயக்கத்தாரோடு புஷ்கர் வீட்டுக்கு வரும் பிட்டா, அரிசி குதிரில் மறைந்திருக்கும் கரணை சுடுகிறான். குருதியில் நனைந்த அரிசியை பிட்டா, சாரதாவிடம் கொடுத்து சாப்பிடச் சொல்கிறான். கரனுக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்க்கவிடாமல் இடையூறு செய்கிறான். இதனால் கரண் இறந்து போகிறான்.
தொடரும் தீவிரவாதத்துக்கு சாரதா, மூத்தமகன் சிவன் மேலும் பல பண்டிட்டுகளும் பலியாகின்றனர். இந்நிலையில் பிரம்மா J & K ஆளுநரின் ஆலோசகராகிறார். 370 சட்டப் பிரிவை அகற்றவும், பண்டிட்டுகளை மீள் குடியேற்றவும் ஆலோசனை வழங்குகிறார்.
காஷ்மீர் தீவிரவாதத்துக்குப் பலியான தன் குடும்பத்தின் கதையை, பல்கலைக் கழக மாணவர்களிடம் பிரச்சாரம் செய்கிறான் கிருஷ்ணா. காஷ்மீர் அரசியலை இசுலாமியர்களுக்கு எதிரான நோக்கில் பேசுகிறான். மாணவர்கள் அவன் கூற்றில் உண்மை இருப்பதாக நம்பவும் செய்கிறார்கள். இவ்வாறாக விவேக் அக்னிஹோத்ரி காஷ்மீரின் பகுதி அரசியலை ஒரு சார்பில் நின்று எடுத்திருக்கும் படம்தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
‘உலகம் இங்கு முடிகிறது. சொர்க்கம் இங்கு தொடங்குகிறது. மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது’. ஜம்மு-காஷ்மீருக்கு செல்லும் நெடுஞ்சாலை முகப்பில் இவ்வாசகத்தைக் காணமுடியும். அந்த அழகிய மாநிலம் நிம்மதி இழந்து பல ஆண்டுகளாயிற்று.
பிரிட்டிஷ் அரசாங்கம் குலாப்சிங் என்கிற மன்னனுக்கு ஜம்மு காஷ்மீரை 75 இலட்சம் ரூபாய்க்கு விற்றது. அவனது மகன் ஹரிசிங். மன்னராட்சி அவலங்களுக்கு எதிராக போராடியவர் ஷேக் அப்துல்லா . அவர் தொடங்கியதே தேசிய மாநாட்டு கட்சி. காஷ்மீரிகள் முஸ்லீம் என்ற போதிலும் அவர்கள் பாகிஸ்தானோடு இணைய விரும்பவில்லை. இந்தியாவோடு இணக்கமாக இருக்கவே விரும்பினார்கள். இணக்கமாக இருக்க விரும்பியவர்களை அடிமைகளாகளாக மாற்றத் துடித்தது இந்தியா.
சனநாயகத்தில் அக்கறையுடைய நேரு, காஷ்மீரிகளைப் புரிந்துகொண்டதன் விளைவே 370 மற்றும் 35- ஏ போன்ற சிறப்பு சட்டங்கள்.
இந்நிலையில் விடுதலைக்குப் பிறகு காஷ்மீரை ஆக்கிரமிக்க படையை அனுப்பியது பாகிஸ்தான். காஷ்மீரைப் பாதுகாக்கிறேன் பேர்வழியென உள்ளே நுழைந்தது இந்திய ராணுவம். அன்று நுழைந்த இந்திய ராணுவம் இன்றுவரை காஷ்மீரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு காஷ்மீரிக்கு ஒரு ராணுவ வீரர் என்கிற அளவில் ராணுவ ஆக்கிரமிப்பு உள்ளது. காஷ்மீர் போராட்டம் என்பது நமது ஈழ விடுதலை யுத்தத்தை ஒத்த
ஓர் இன விடுதலைப் போராட்டம். அதை இந்தியா, இந்து முஸ்லீம் போராட்டமாக, பாகிஸ்தான் எதிர்ப்பு சம்பந்தப்பட்டதாக மாற்றிவிட்டது.
லட்சக்கணக்கான காஷ்மீரிகளை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி ராணுவம் கொலை செய்திருக்கிறது. அபலை காஷ்மீர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. ராணுவ வீரர்கள் பொதுவெளியில் மது அருந்துவது, காஷ்மீர் பெண்களைக் கண்டால் ஜிப்பைத் திறந்து தங்கள் ஆண்குறியை எடுத்துக்காட்டுவது போன்ற இழிசெயல்களையும் அங்கு அரங்கேற்றியுள்ளனர்.
படிக்க:
♦ கண்ணீரை வற்ற வைக்கும் காஷ்மீர் படுகொலைகள்! தீர்வு என்ன?
♦ இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்
ஈழத்தைப்போலவே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம் கணவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இறந்துவிட்டார்களா? எனத்தெரியாமல் பாதிக்கும் மேற்பட்ட காஷ்மீர் பெண்கள் காலம் கழித்து வருகின்றனர். இப்படி, காஷ்மீரின் முழு பரிமாணத்தை அக்னிஹோத்ரி போன்றோரிடம் எதிர்பார்க்க முடியாது.
காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடந்த தாக்குதல்களை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அங்கு தீவிரவாதம் உருவானதற்கான கொதிநிலையை ஏற்படுத்தியது இந்தியா.
காஷ்மீரில், இசுலாமியர்களும் பண்டிட்டுகளும் தங்களை காஷ்மீரிகளாகவே உணர்ந்த காலமிருந்தது. அதெல்லாம் படத்தில் காட்டப்படவே இல்லை.
காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதில் அப்போதைய கவர்னர் ஜக்மோகனுக்கு தொடர்பிருக்கிறது. இசுலாமியர்கள் மீது வெறுப்பை வளர்க்கும்பொருட்டு இவரால் எடுக்கப்பட்ட அரசியல் முடிவே , காஷ்மீர் பண்டிட்டுகளை டெல்லியில் குடியேற்றியது. அங்கு அவர்களுக்கு நல்ல குடியிருப்புகள், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மற்ற அகதிகளைப் போலல்லாமால் பண்டிட்டுகளை கரிசனத்தோடு கவனித்துக் கொண்டது இந்தியா! என்பதையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தப் படம் நிகழும் இதே காலத்தில் காஷ்மீரெங்கும் ஊரடங்கு உத்தரவு. ஜவஹர் நகரில் வசிக்கும் பண்டிட் ஒருவரின் குடும்பத்தில் சாப்பிட அரிசி இல்லை. நோய்வாய்ப்பட்ட பண்டிட்டின் அம்மா. பண்டிட் மனைவி தன்னோடு டீச்சராக வேலை பார்த்த சுபைதா பேகத்துக்கு நிலைமையை விளக்கி ஃபோன் செய்கிறார். பேகம் குடும்பம் இருப்பதோ ஸ்ரீநகரில். இரு நகரங்களுக்கும் இடையே வெகு தொலைவு.
வீட்டிலிருந்த அரிசி, பருப்பு, மசாலா சாமான்களை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டனர் பேகமும் அவளது கணவரும். பஸ், ஆட்டோ எதுவும் இயங்காத நிலையில் பல மைல்கள் நடந்தே சென்றனர். சந்தேகத்துக்கு இடமானவர்களை சுடலாம் எனும் உத்தரவு இருந்த காலம். இடையில் போலீஸ்காரர்கள் பேகம் தம்பதியை தடுத்து நிறுதினர். தங்கள் நட்பின் கதையை அவர்கள் கூறியபோது காக்கி மனசும் கரைந்தது.
இதுதான் யதார்த்த நிலை. பகையோ, இந்திய ராணுவமும் உளவுத்துறையும் உருவாக்கியதால் விளைந்தது. இசுலாமியர்களை முரடர்களாக, மனிதாபிமானமற்றவர்களாக, கொடூர நெஞ்சு படைத்தவர்களாக, வலிந்து சித்தரிக்கும் அக்னஹோத்ரி போன்றவர்களிடம் மூடப்பட்டு கிடக்கும் குஜராத் ஃபைல்ஸை புரட்டிப் பார்க்கும் கலை நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?
ஒரே நாளில் இசுலாமியர்கள் தங்கள் குடும்பத்தை, உடைமைகளை இழந்து நின்ற குஜராத் கதைகளை சொல்வார்களா? கர்ப்பிணியின் வயிற்றில் திரிசூலத்தை செருகி கருவிலிருந்த குழந்தையைக் கொன்றதை காட்டுவார்களா? பிஜேபி, விஹெச்பி, பஜ்ரங்தள், ஆர்எஸ்எஸ் இந்திய இசுலாமியருக்கு நிகழ்த்திய கொடுமைகள் மானுட நேயமுடையோரின் இதயத்தில் குருதி கசிய வைப்பவை.
கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 790 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். 223 பேர் காணாமல் போனார்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்திய மக்களுக்குப் பொதுவானவர்கள். ஆனால் மோடியும், அமித்ஷாவும் அப்படி ஒருபோதும் நடந்து கொண்டதில்லை.
குஜராத் படுகொலைகள் குறித்து , இறுதி தீர்வு (Final solutions) என்றொரு ஆவணப்படம் 2002 வெளியானது. ஹிட்லர் தனது இறுதி தாக்குதலுக்கு வைத்த பெயர்தான் Final solutions . ராகேஷ் சர்மா இயக்கிய படம். கலைஞர்களுக்குரிய பொறுப்போடு குஜராத் கலவரத்தை அணுகியிருப்பார் ராகேஷ் சர்மா. இப்படி நேர்மையோ, சினிமா பொறுப்போ எதுவுமில்லாமல் எடுக்கப்பட்ட ஒரு வக்கிரக் குப்பை தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
மோடி அமித்ஷா போன்றோர் அக்னிஹோத்ரிக்கு விருந்து கொடுக்கலாம். விருது வழங்கி மகிழலாம். வரலாறு என்னவோ இத்தகைய நசிவுக் கலைஞர்களை, திரிபுவாத சித்தரிப்புகளை குப்பைத் தொட்டியில் வீசியெறியப் போவது திண்ணம்!
- கரிகாலன்