“எம்புரான்” சேட்டன்களை மிரட்டும் சங்கிகள்!

மலையாள சினிமாவில் உருவாகி இருக்கும் எம்புரான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இது ஆர் எஸ் எஸ் நடை முறைகளை அம்பலப்படுத்துவதால் சங்கிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது.

2
எம்புரான்

மோகன்லால் நடித்து வெளிவந்துள்ள திரைப்படமான எம்புரான் பாஜக ஆர் எஸ் எஸ் சங்கிகளின் மனதை ‘புண்படுத்தி’ உள்ளது. எனவே மோகன்லால் மன்னிப்பும் கேட்கிறார். சங்கிகளை திருப்திப்படுத்த திரைப்படத்தில் சுமார் 17 இடங்களில் காட்சிகளை வெட்டி விட்டு ஓட்டவும் முன் வந்துள்ளனர். இது சரியா?

லூசிபரின் தொடர்ச்சியான எம்புரான்!

மோகன்லால் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான வெற்றிப்படமான லூசிபர்-ன் 2ஆம் பாகமான எம்புரான் கடந்த மார்ச் 27 அன்று ரிலீஸ் ஆனது.

பிரபல மலையான நடிகர் பிரித்விராஜ் நடித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

ரூ.180 கோடி பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படம் மலையாள சினிமாவில் தற்போதுவரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் மட்டும் இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

முதல் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலாக குவித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பு அறிவித்துள்ளது. அதாவது இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

கலக்கத்தில் காவிகள்!

கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் தொடங்கி சமீபத்திய வரவான ச்சாவா வரை  அடுக்கடுக்காக அவதூறுகளை அள்ளிவிடும் படங்களை எடுத்து பரப்பி மகிழ்ந்து வருகிறது பாசிச கும்பல்.

சங்கிகளுக்கு பிடிக்காத உண்மைகளை பேசும்,  வரலாற்று சம்பவங்களை காட்சிப்படுத்தும் படங்கள் விதிவிலக்காக திரைக்கு வரும்போது சங்கிகளுக்கு கடுப்பையே தருகின்றன.

தற்போது வந்த எம்புரான் படத்தில் இஸ்லாமியர்களை இந்து மத வெறி பார்ப்பனர் விரட்டிச் சென்று படுகொலை செய்கிறது. நிறைமாத கர்பினியை வன்புணர்ந்து கொல்கிறது. இது 2002 குஜராத் கலவரத்தை கண் முன்னிறுத்துகிறது.

கலவரத்தில் பாதிக்கப்பட்டு, குடும்பத்தை  பலி கொடுத்து விட்டு, உயிர் தப்பும் சிறுவன் 10 வருடத்திற்கு பின்னர் பழிதீர்க்கிறான். இதற்காக அவனுக்கு உதவி செய்யும், துணை நிற்கும், உலகம் முழுக்க வலை பின்னலை கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய அமைப்பு எது என்று முதல் பாகத்திலோ இரண்டாம் பாகத்திலோ தெளிவுபடுத்தப்படவில்லை.

குஜராத் கலவரத்தில் உயிர் தப்பி நிற்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஆராத ரணமாக நிற்கின்றன கலவர காட்சிகள். (அ)நீதிமன்றத்தால் வஞ்சிக்கப்பட்டு  நீதி மறுக்கப்பட்டு நிற்கும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் மனதிற்கு சற்று ஆறுதலை தரும் வகையில் நடிகர் பிரித்திவிராஜ் கலவர கும்பலின் தலைவனை வேட்டையாடும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

படிக்க:

  இளைய தலைமுறையை காட்சி போதைக்குள் ஆழ்த்தும் சினிமாக்கள்!
♦  சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !

இந்த திசையில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நகர்ந்தால் அது காவி பாசிஸ்டுகளுக்கு நன்மை செய்வதாகவே அமையும். அதாவது எளிதாக அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தி வேட்டையாடுவதற்கே கொண்டு செல்லும். மாறாக காவி பாசிஸ்ட்களை எதிர்த்து நிற்கும் அனைத்து தரப்பு மக்களின் துணையுடன் மோதி வீழ்த்துவதாக இருந்தால் அது நாடு தழுவிய அளவிலான முழு வெற்றியைத் தரும்.

பாதிக்கப்பட்டவர்கள் செல்ல வேண்டிய வழி எது என்று என்பதை தவறாக காண்பித்துள்ளனர். அல்லது தெளிவாக சொல்லாமல் தவிர்த்து உள்ளனர்.  அப்படி இருந்தும் இப்படத்தை பார்த்து காவிகள் கதறுகின்றனர்.

பதற்றத்தில் பஜ்ரங்கள்!

பஜ்ரங் தளம் அமைப்பின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

இந்து மத வெறி தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தள்ளின் பெயரைக் குறிக்கும் பஜ்ரங்கி என்ற பெயரே எம்புரான் படத்தில் வில்லனுக்கு தரப்பட்டுள்ளது.

குறிப்பாக, எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டலுக்கு பணியும் சேட்டன்கள்!

மலையாள சினிமாவில் உருவாகி இருக்கும் எம்புரான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இது ஆர் எஸ் எஸ் நடை முறைகளை அம்பலப்படுத்துவதால் சங்கிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது.

நடிகர் மோகன்லால் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதன் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

“ஒரு கலைஞனாக, என்னுடைய படங்கள் எதுவும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதப் பிரிவுக்கும் விரோதமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது எனது கடமை. எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் எம்புரான் குழுவினரும் மனதார வருந்துகிறோம், அதற்கான பொறுப்பு படத்தில் பணியாற்றிய நம் அனைவரிடமும் உள்ளது என்பதை உணர்ந்துகொள்கிறோம். இதுபோன்ற கருப்பொருள்களை படத்திலிருந்து நீக்க நாங்கள் ஒன்றாக முடிவு செய்துள்ளோம்.”  என அறிவிப்பு தந்துள்ளார்.

நடுநிலை சாத்தியமா?

சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை கண் திறந்து பார்க்கும் எவரும்,  அடக்குமுறைகள் ஏவப்படும் போது, படுகொலைகள் நிகழும் போது, வன்புணர்வுகள் நடக்கும் போது, கும்பல் படுகொலைகள் அரங்கேறும் போது எழும் கூக்குரலை காது கொடுத்து கேட்கும் எவரும் துடிக்கத்தான் செய்வர்.

இதற்கு நேர் மாறாக, எந்தத் தரப்பையும் புண்படுத்தாமல் ஒருவர் பேசவோ, எழுதவோ, நடிக்கவோ, பாடவோ, இசைக்கவோ முடியும் என்றால் அது சிறிதும் மனிதத் தன்மையற்ற செயலாக தான் அமையும். விதிவிலக்காக இப்படிப்பட்ட கலைஞர்கள் இருக்கவும் செய்கிறார்கள் தான்.

மோகன்லாலின் படக்குழுவினர் ஒருவேளை விண்வெளியில் வேற்றுக்கிரகவாசிகளுடன் மனித இனம் சண்டை போடும் கற்பனை கதைகளை வைத்து திரைக்கதையை அமைத்திருந்தால் இந்த பிரச்சினையை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அத்தகைய கலை படைப்பு சமூகத்திற்கு பொழுதுபோக்கு என்பதை தாண்டி எத்தகைய பலனையும் தந்திருக்காது.

இந்தத் திரைப்படம் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட விமர்சிக்க தான் செய்கிறது. காசுக்காக அல்லது பதவிக்காக கூட்டணி அமைப்பவர்களாக, கார்ப்பரேட்டுகள், காவி கிரிமினலுடன் கூட்டணி வைப்பவர்களாகவும் காட்சி படுத்தியுள்ளது. குறிப்பாக சிபிஐ எம் ஐ சாடுகிறது.

துணைக்கு வரும் காம்ரேடுகள்!

எம்புரான் படம் மறைமுகமாக தம்மையும் சாடுகிறது என்றாலும் அதை ஒதுக்கி விட்டு பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முதலில் நிற்கிறார்கள் கேரள கம்யூனிஸ்ட்கள்.

பாசிஸ்ட்டுகளை எதிர்த்தும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் முதல் குரல் கம்யூனிஸ்ட்களிடம் இருந்தே வருகிறது. முதல்வரின் அறிவிப்பின் மூலம் படக்குழுவினருக்கு உறுதுணையாக காம்ரேடுகள் தான் வருகின்றனர்.

கலைஞர்கள் இப்படி பாசிச சக்தி இடம் பணிவது தவறு என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

“கலைப் படைப்பை கலைஞர்களை அழிக்க முயற்சிப்பது ஜனநாயக உரிமையை மீறும் செயல், சமூகத்தில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். எம்புரான் திரைப்படத்தை எதிர்த்து பாஜக , ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். மிகக் கொடூரமான இனப்படுகொலையை படம் வெளிக்காட்டுவதால் சங்பரிவார்கள் கோபமடைந்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.

நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்.  சேட்டன்களே துணிந்து நில்லுங்கள். கலெக்சன் காசை நினைத்து காட்சிகளை நீக்க வேண்டாம். எதற்கு வம்பு என்று காவிகளிடம் பணியவும் வேண்டாம். நிச்சயமாக கலைஞர்களை காவி கும்பலுக்கு எதிராக ஓரணியில் திரட்ட முடியும்.  ‘சொந்த மூளை’யை கொண்டிருக்கும், சுயமாக சிந்திக்கும் ரசிகர்கள் யாரும் உங்களை கைவிட மாட்டார்கள். சுதந்திரத்தை ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சங்கிகளை எதிர்கொள்வோம்.

  • இளமாறன்

2 COMMENTS

  1. எம்பிரான் திரைப்படம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்தது காவி பாசத்துக்கு எதிராக எதிர் போராடக்கூடிய ஒரு காட்சியாக இந்த திரைப்படம் குஜராத் படுகொலையை ஆர்எஸ்எஸ் காவிகளின் கொடூரத் தாக்குதல்களை வெளிப்படுத்துகிறது என்ற காரணத்தால் ஆர் எஸ் எஸ் பிஜேபி சங்கீகளின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம் மோகன்லால் மற்றும் படக்குழுவினருக்கு மக்களும் கலை இலக்கியத்தை சேர்ந்த படைப்பாளிகளும் துணை நிற்பார்கள் என்று தைரியம் ஊட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை சிறப்பாக உள்ளது

  2. எம்பிரான் திரைப்படம் குஜராத் சம்பவத்தை கண் முன் நிறுத்தியபடக் குழுவிற்கு நன்றி🌹🌹🌹கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்காக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here