“நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என கொக்கரித்த, கீதை ஓதிய கண்ணனின் வழி நடக்கும் பார்ப்பனக் கும்பல், கருத்துரிமை என்ற பெயரில் நடத்தும் அட்டூழியங்களை எதிர்த்துப் போராடுவோம்.
பாசிஸ்டுகள் விரும்பும் ‘கருத்து சுதந்திரத்தை’ காராக் கிருகத்தில் தள்ளி வழங்கிடுவோம்.

மதிப்பிற்குரிய திரு.ராஜா அவர்களே…..
வணக்கம். உங்களின் அரசியல் உக்தியாக அதிரடியாக எதையேனும் பேசி ஊடகங்களை உங்கள் பக்கம் திசை திருப்பும் நீங்கள் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டீர்கள்.அது “”திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்”” என்பதாகும்.

வியக்கிறேன் உம் நெறி கண்டு. ஆனால் உங்களின் இப்பேச்சு அரசியல் உக்தி,ஊடக கவனம் என்பதைத் தாண்டி அடக்குமுறை சார்ந்ததாக உள்ளது. இரட்டை குவளை முறை, இரட்டை சுடுகாடு முறை, இரட்டை நடைபாதை முறை, இரட்டை கல்வி முறை என்பதை எல்லாம் களைந்து கொண்டு இருக்கும் நேரத்தில் உங்கள் அகத்தின் அழகை உங்கள் வார்த்தைகளால் வெளிக்காட்டி உள்ளீர்கள்.உங்கள் அக அழகை உங்கள் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.வன்மத்தைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது வெறும் பேச்சல்ல.இதுவே வாழ்க்கையின் யதார்த்தம்.வாருங்கள்!வந்து பிரசவ அறையை பாருங்கள்.பிரசவ அறையில் உள்ள பெண்கள் எல்லாம் ஒரே மாதிரியான பிரசவ வலியால் தான் துடிக்கின்றனர்.

அத்துடிதுடிப்பில் உயர்வு தாழ்வு உண்டோ?பிள்ளைப்பேறில் தான் வேறுபாடுகள் உள்ளதா? பிறக்கும் குழந்தைகளில் தான் வேறுபாடுகள் தென்படுகிறதா?வந்து பாருங்கள் பிரசவ அறையை.பிரசவ வலியில் துடிக்கும் பெண்களின் அழுகுரல் அனைத்தும் ஒன்றே.பிள்ளைப்பேறும் ஒன்றே.

“பிரசவ “அறைக்கு அடுத்த படியாக “பிற சவ ” அறையை அதாவது சவக்கிடங்கை பாருங்கள்.பார்த்ததுண்டா நீங்கள்? அங்கே upper berth( birth), lower berth (birth)எல்லாம் இல்லை. எல்லாருக்கும் ஒரே berth தான்.அகங்காரம் கொண்டவனும் ஆணவம் கொண்டு அலைந்தவனும் பிற பிணங்கள் கிடத்தப்பட்ட மேசையில் தான் உயிரற்று கிடக்கிறார்கள்.’தொடமாட்டேன்’ ‘தொடமாட்டோம்’ ‘தொடமாட்டார்கள்’ என்ற வார்த்தையை சொல்ல உயிரும் இல்லை, உற்றார் உறவினர் சொன்னாலும் கேட்பதற்கும் கிடத்துவதற்கும் தனியிடம் வேறு இல்லை.அனைத்துப் பிணங்களும் ஒரே கிடங்கில் தான் உள்ளன.

பேரிடர் காலங்களில் குவியல் குவியலாக பிணங்களை புதைக்கின்றார்களே!காணவில்லையா நீங்கள்? அக்குவியலில் எது உயர் சாதி பிணம்? எது கீழ் சாதி பிணம்? தொட்டால் தீட்டு தொடாதே என்றால் உயிரற்றபின் நாறித்தான் போய் ஊர்முனையில் கிடக்க முடியும்.ஏனெனில் எந்த சுடுகாட்டிலும் பிணங்களை கையாள அடக்கம் செய்ய நீங்கள் கூறும் உயர் சாதியினர் இல்லை.

இதுவரை உரைத்தவை அனைத்தும் மருத்துவ ரீதியாக அணுகப்பட்டவை.அடுத்ததாக சட்டம்.சட்டரீதியாக பாருங்கள்.

சட்டம் என்ன சொல்கிறது? நீங்கள் இந்தியர் என்பதில் ஐயமில்லையே? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்பவர் தானே நீங்கள்?! தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பதை அறிந்தவர் தானே நீங்கள்? அறிந்தும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தை எதிர்கின்றீர்கள் என்று தானே பொருள்?

WHOM DO YOU WANT TO CHALLENGE?
Do you want to challenge Mr.Thirumavalavan?
Or Do you want to challenge Respected MR.B.R.Ambedkar ?OR Do you want to challenge the Constituency of India??

அரசியலில் தேசிய அளவில் பொறுப்பு வகிப்பவர்கள் எவராயினும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும்.அவர்களும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்களே.நீங்கள் ஏன் பிரிவினைவாதத்தை தீண்டாமையை முன்மொழிகிறீர்கள்? உயர்ந்த அரசியல் பொறுப்பில் இருக்கும் நீங்களே பொறுப்பற்று பேசலாமா?

மருத்துவ ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும் மட்டும் நீங்கள் பேசியது தவறல்ல.ஆன்மீக ரீதியாகவும் நீங்கள் பேசியது தவறே. எது ஆன்மீகம்? பிரித்தாளும் சூழ்ச்சியா ஆன்மீகம்? எம்மதம் பிரிவினையை தூண்டுகிறது? அனைத்து மதங்களும் அன்பைத்தானே உணர்த்துகிறது?!! அனைத்து மதங்களும் ஒற்றுமையுடன் வாழத்தான் வழி காட்டுகிறது.

“சாதி இரண்டொழிய வேறில்லை,
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”
என்ற ஒளவையார் பாடியது தாங்கள் அறியாததா?

”ஒன்றே குலம்” என்பது திருமந்திரம்.

“சாதி குலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை” என்று பேசுகிறது மாணிக்கவாசகம்.

“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்கிறது அப்பர் தேவாரம்.

“இச்சாதி சமயவிகற் பங்கள் எல்லாம் தவிர்ந்தே எவ்வுலகும் சன்மார்க்க பொதுவடைதல் வேண்டும்” என்றார் வள்ளலார்.

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்” என்ற அப்பரடிகளின் வழித்தோன்றல்கள் தமிழர்கள் என்பதை கூறி நிறைவு செய்கிறேன்.

நன்றி
மருத்துவர்.அனுரத்னா
13/12/18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here