இழுத்து மூடு!
(செப்டம்பர் 27 – பாரத் பந்த்)
48 வயது மேவா சிங்கின்
கவிதை பாதியில் ஏன் நிற்கிறது?
75 வயது அம்ரிக் சிங் ஏன் படுக்கையிலிருந்து எழவில்லை?
68 வயது யஷ்பால் சர்மா
தனக்கான டீயை தயாரித்தார்
அவரால் அதை பருக
முடியாமல் போனது ஏன்?
காலைக் கடன் கழிக்கச் சென்ற
36 வயது பீம்சிங் ஏன்
வீடு திரும்பவில்லை?
இப்படி, அறுபதுக்கும்
மேற்பட்ட பஞ்சாப் விவசாயிகள்
டெல்லியில் பஞ்சாப்பில்
இறந்தார்கள்
இவர்கள் கரோனா
வைரசால் இறந்தார்களா?
இல்லை
இந்திய அரசின்
மூன்று வேளாண் சட்டங்கள்
இவர்களைக் கொன்றது
பஞ்சாப் பீகார் ஹரியானா
உத்திரப்பிரதேச வயல்களில்
இப்போது கோதுமைக்கு பதில்
கண்ணீர்த் துளிகள் விளைகிறது
பருவங்கள்
இவர்களது நிலங்களில்
தம் தடங்களை
உருவாக்க முடியாமல்
திகைத்தன
நிலங்களில்
பொழிய வேண்டிய மழை போர்த்தியிருந்த உழுகுடிகளின் கம்பளிகளை நனைத்தது
பார்லி வயல்களை
ஈரமாக்க வேண்டிய பனி
சாலையோரம் தூங்கிய
விவசாயிகளின் கண்களை மூடியது
அறுவடை நிலங்களைப்
பதப்படுத்த வேண்டிய குளிர்
இவரது எலும்புகளில் உறைந்தது
உழவர்களின்
உணவுத் தட்டுகளில்
வெய்யில் நிரம்பியிருந்தது
குருத்துவாராவில் குடியிருந்த புறாக்கள் பசியைக் கொறித்து உயிர்விட்டன
நாளை வருவான்
என நம்பியிருந்த உழத்தியின்
கரங்களில் கனத்தது
உழவன் பிணம்
கடவுள் என ஒன்று இருந்திருந்தால்
அமைச்சர்களின்
உணவுக் கோப்பைகளை
மலத்தால் நிரப்பியிருக்கும்
அரசு என ஒன்று இருந்திருந்தால்
உழு குடிகளின் சிதையில்
அதன் சட்டத்தை எரித்திருக்கும்
விவசாயிகளின் தானியங்களை
அவர்களது மண்டிகளை
திருடி கார்ப்ரேட்டுகளுக்கு
கையளிக்கிற சாத்தான்கள்
ஆளும் தேசத்தில்
உழவர்களோடு சேர்ந்து
நீதியும்
தலைநகர் சாலையில்
செத்துக் கிடக்கிறது
விவசாயிகளின்
வாழ்வை மூடிவிட்டது
அரசு
அவரது குழந்தைகளின் பள்ளிக்கூடங்களை மூடிவிட்டது
அவர்களது
மண்டிகளை
கண்மாய்களை
மூடிவிட்டது
ஒருகாலத்தில்
விதை தானியங்கள்
நிரம்பியிருந்த
அவரது குதிர்களை
மூடிவிட்டது
போராட்டத்தில்
இறந்தவர்களின்
கல்லறைகளை
மூடிவிட்டது
விவசாயிகளின்
வாழ்வை மூடிவிட்டு
நமக்கு பசியெடுத்தால்
இந்த அரசு என்ன செய்யும்?
பசித்த நம் வயிற்றில்
அவரது நிலங்களிலிருந்து
அகழ்ந்த மண்ணைப்போட்டு
மூடும்!
நம் மானத்தை மூட
பருத்தி விளைத்தவர்
உழவரல்லவா?
நம் பசியை மூட
நெல்லுக்காகவும்
கோதுமைக்காகவும்
மண்ணை உழுதவர்
விவசாயி அல்லவா?
அவரை உயிரோடு
மண்ணுக்குள் மூட
அதிகாரம் முயல்கிறது
அனுமதிக்கலாமா?
ஒரு நாள் நம்
அசைவை மூடுவோம்
இயக்கத்தை மூடுவோம்
நம் வாகனங்களின்
பெட்ரோல் டேங்க்கை
மூடுவோம்
நாம் பயணிக்கும் சாலைகள
நாம் உணவருந்தும் விடுதிகளை
நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளை
நாம் சாமான் வாங்கும் கடைகளை
நாம் பணி செய்யும்
தொழிற் தலங்களை
மூடுவோம்
நம் வாழ்வை அழிக்கும்
அதிகாரம் சுவாசிக்க முடியாதபடி
அதன் நாசித் துவராங்களை
மூடுவோம்
போராட்டக் களத்தில்
முடிவடையாமல்
பாதியில் நிற்கிறது
48 வயது மேவா சிங்
எழுதிய கவிதை
எல்லாவற்றையும் மூடியபின்..
கதவடைத்த வீட்டுக்குள்
இந்தியர் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வரி எழுதி
அந்த மாபெரும்
கவிதையை முடிப்போம்
அது,
உழுகுடி விரோத ஆட்சிக்கு
இந்தியர்கள் எழுதிய
இரங்கல் கவிதையாக
அமையட்டும்!
••
கரிகாலன்
நன்றி – ஓவியர் பால்ராஜ்