ஆய்வுப்படிப்புகள் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலங்களாக இருக்கின்றனவே ஏன்?

ஜோஹன்னா தீக்சா.

(எதிர்கால விளைவுகளைக் கணக்கில் கொண்டு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

கடந்த ஆண்டு  அம்ரிதா குமார் என்ற பல்கலை மாணவி தனது தோழி வீட்டில் அவள் விருப்பத்திற்கிணங்க 2014- ஆம் ஆண்டின் ஆஸ்கர் பரிசு பெற்ற “Whiplash” (சாட்டையடி) என்ற திரைப்படத்தைப் பார்க்கிறாள். தோழி “படம் உனக்கு  நிச்சயம் பிடிக்கும் ” என்கிறாள்.  திறமைபெற்ற ஒரு ஜாஸ் இசை மாணவன் சொல்லாலும்  உடல்ரீதியாகவும் கொடூர ஆசிரியனால் மிக மோசமாக நடத்தப்பட்டு , காதலை இழந்து, தற்கொலை வரை சென்று எப்படி தற்செயலாக மீள்கிறான் என்பது தான் கதை.

whiplash படக் காட்சி

படத்தில் காட்சிகள் வரவர, அம்ரிதா அசையாமல் உட்கார்ந்துவிட்டாள். “சொன்னேன்ல, படத்தைப் பார்த்த உடனே வாயடச்சிப்போவேன்னு சொன்னேன்ல” என்றாள் தோழி. அம்ரிதா பதிலே பேசவில்லை. அவள் முகத்திலிருந்த புன்சிரிப்பு மெள்ள மறைந்து மரத்துப்போய் அசைவில்லாமல் இருந்தாள்.

அவள் பாதம்கூட அசையவில்லை. மயக்கம் போல கிடந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு உடல் நடுக்கம் கண்டது. சீராக மூச்சும் விடவில்லை. மிக மோசமான வலிப்பு வந்தவள்போல் ஆனாள். அன்று ஒருவழியாக தோழி அம்ரிதாவை அமைதிப்படுத்தினாள்.

அம்ரிதா ஆய்வு தொடங்கி ஆறுமாதங்கள் கடந்திருந்தது. அவள் குடும்பத்திலேயே  முனைவர் பட்டப்படிப்பை எட்டிய முதல் ஆள் அவள்தான். அந்நாட்களில் அம்ரிதா தனது தோழியிடம் அனுபவங்களைப்  பகிர்ந்துகொண்டே வந்தாள். ‘வழிகாட்டும்’ பேராசிரியருக்கு எதிராக அவள் நடத்திய போராட்டங்கள். அந்த ஆள் எப்படி அவள் எதிர்காலத்தையே கைக்குள்  போடத் தொடங்கினார், இப்படி எல்லாவற்றையுமே அம்ரிதா சீக்கிரம் புரிந்துகொண்டாள்.

“Whiplash” திரைப்படத்தை தோழி பார்க்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அப்படத்தின் கதாப்பாத்திரமான டிரம்மர் ஆண்ட்ரூஸ் வாழ்க்கை அம்ரிதாவுடையதை ஒத்திருந்தது. ஆனால் அம்ரிதா தன்னிடம் அப்படம்  ரொம்பத்  தீவிரமான மன அழுத்தத்தைத்  தூண்டிவிடும் என்றே எதிர்பார்க்கவில்லை.

அம்ரிதா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவள். ஒரிசாவில் எங்கோ ஒரு மூலையில் குடிசை வீட்டில் பிறந்து வளர்ந்தவள். முதுகலை ஆய்வில் முதல் தலைமுறை. இது மிகப்பெரிய விசயம். ஆனால் கல்வி என்பது அவளைப் போன்றவர்களுக்கு எத்தனைப்பெரிய சவால் என்பதையும் சீக்கிரமே உணர்ந்துகொண்டாள். பட்டமேற்படிப்பை அவள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்தபோது வகுப்பறை, சமூகம் இரண்டிலும் ஒரேநேரத்தில் ஒடுக்கப்படுவதை அனுபவித்தாள். முனைவர் படிப்பில் சகமாணவர்கள் இல்லாத ஒரு வெறுமையில் தூக்கி எறியப்பட்டதாய் உணர்ந்தாள் அம்ரிதா. ‘வழிகாட்டும்’ பேராசிரியர்கள் இருவரை மட்டுமே சூழ்ந்து படிப்பு நடந்தது. வழிகாட்டி மூலம் ஒரு சிறந்த முன்னோடியின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஆய்வுவளாகத்தில் கழுத்தறுப்புப் போட்டியே வட்டமடித்தது. சமாளிப்பது எளிதாக இல்லை. மாணவர் எத்தனை ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிறார்? கருத்தரங்குகளில் எப்படித் தயாரிக்கிறார், எப்படிப் பேசுகிறார்? சோதனைகளை எதிர்த்துத் தாக்குப்பிடித்து நிற்கிறாரா? அம்ரிதாவுக்கும் அது சோதனைக்காலம்.

“பொதுவாக கல்வித்துறையில் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவே முடியாது என்று சொல்வார்கள். அது உண்மை” என்றார் அம்ரிதா.

இப்போது அம்ரிதா ஆய்வில் இரண்டாமாண்டு. நாளும் தீராத தனிமை, பிடுங்கி எடுக்கும் சந்தேகங்கள், எப்போதும் துளைக்கும் தாழ்மை உணர்ச்சி. கடந்த இரு ஆண்டுகளில் ஆய்வையே விட்டுத் தொலைக்கலாமா என்று கூடப் பலமுறை யோசித்திருக்கிறார். சமீபத்தில் மன அழுத்தம், மனக்கவலை இரண்டும் ஒன்றாகத் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் அறிந்து சொன்னார்கள்.

“ஆய்வு காரணமாகத்தான் இந்தச் சிக்கல்கள் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அது நிலைமையை இன்னமும் மோசமாக்கிவிட்டது” என்றார் அம்ரிதா.

நாடுமுழுக்க முனைவர் படிப்பில் மாணவர்களின் அனுபவங்கள் பொதுவாக ஒன்றுபோல் இருக்கின்றன. “அவை இயல்பாகக் கூட மாறிவிட்டன. நீங்கள் முனைவர் படிப்பில் நுழைகிறீர்கள் என்றால் உங்களுக்காக மனோரீதியான பிரச்சினை காத்திருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். அதிலும் நீங்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒருவர் என்றால் இன்னமும் மோசம்” மனம்நொந்து பேசினார் அம்ரிதா.

ஏப்ரல் 2021 காசர்கோடு கேரள மத்தியப்பல்கலைக்கழக  ‘பொதுநலம் மற்றும் சமூக மருத்துவத்துறை’-யின்  ஆய்வாளர்கள் மாநிலத்தின் இரண்டு அரசுப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் மனநலம் பற்றி ஆய்வு செய்தார்கள். மனஅழுத்த நோய் பாதிப்பு எத்தனைப்பேருக்கு என்று  ஆராய்ந்தார்கள். சுமார் 70% மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டது. 17.9% பேருக்கு சுமாரான பாதிப்பு, 6.7% பேருக்கு மிக அதிகப் பாதிப்பு, 2.1% அதிக பாதிப்பு என்றும் அளவிட்டார்கள்.

இந்த ஆய்வு முடிவுகள் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் நடத்தப்பட்ட  ஆய்வுகளுடன் ஒத்துப் போயிருந்தன. 2017–ல் பெல்ஜிய பல்கலைகழகங்களில் 12,191 மாணவர்களிடம் எடுத்துத் தொகுக்கப்பட்டதில் இரண்டுபேரில் ஒருவர் மன அழுத்தத்திலும் , மூன்றுபேரில் ஒருவர் மிக இயல்பாக மனநலம் பாதிக்கப்படும் சூழலில் இருந்ததாகவும் கண்டறிந்தனர். 2018–ல் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை ஒன்று அமெரிக்காவில் பொருளாதாரத் துறை ஆய்வுத்திட்டங்களில் ஈடுபட்ட 18%மாணவர்களில் “ஓரளவு  அல்லது கடுமை என்று இரு எல்லைகளில்  மனஅழுத்தம் மற்றும் மனக்கவலையால் பாதிக்கப்பட்டிருந்ததாக”  கண்டறிந்தது. நாட்டில் பல்கலைக்கழக மாதிரிகளின் மொத்தச் சராசரியைவிட இது 3 பங்கு அதிகம்.  “இருவார இடைவெளியில் கணக்கிட்டபோது தற்கொலை எண்ணத்தில் 11%மாணவர்கள் இருந்திருக்கிறார்கள்.”

கேரள ஆய்வாளர்களின் கூற்றுப்படி மாதம் 20,000 ரூபாய் வருமானத்துக்குக் கீழே சம்பாதிக்கும் பொருளாதாரப் பின்னணி உள்ள குடும்பங்களிலிருந்து வந்த ஏழை மாணவர்கள் மனஅழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் (ஒரு சில ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு இதைவிட அதிகமான உதவித்தொகை கிடைக்கும்; அதேவேளையில் பெரும்பாலான ஆராய்ச்சிப் படிப்புகளுக்குக்கான உதவித்தொகை மிகவும் குறைவானதே).

“இந்தியாவில் வர்க்கம் சாதியாக இருக்கிறது” என்று ஆதித்யா என்ற பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர் கூறுகிறார். கல்வித் திட்டங்களிலும் மிகக்குறைவாகவே இவ்வகை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நாடாளுமன்றத்தில் 2021-ல் ஒன்றியகுழு முன்வைத்த தகவல்படி 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IIS) 20%க்கும் குறைவாக SC/ST மற்றும் OBC அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 69% ஆவர்.  மேலும் 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில் 34.4% மட்டுமே நாட்டிலுள்ள 23 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) முனைவர்பட்ட ஆய்வுக்குச்  சென்றார்கள். இவை அனைத்தும் ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள்.

ஆய்வு மாணவர்கள், ஆய்வு துணைப் பேராசிரியர்கள் scroll.in– செய்தியாளரிடம் தெரிவித்த தகவல்களின்படி, பொருளாதார அழுத்தங்கள் மட்டுமல்லாமல் சாதிப்  பாகுபாடுகளும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. அறிவு எங்கிருந்து, எந்த ஆதாரத்தில் பிறக்கிறது  என்பதையும், அறிவைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாத சாதித் திமிர், பார்வை கொண்ட ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மாணவர்களது அனுபவத்தையும், அவர்களின் நோக்கங்களுக்கு மதிப்பு உண்டு என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

இச்செயல்களினால் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆரம்ப நிலை புதிய ஆசிரியர்கள், மூத்த பேராசிரியர்களின்  கழுகுப் பார்வைக்கும், கண்காணிப்புக்கும், கட்டுப்பாட்டுக்கும் கீழே  ஆழ்மன வேதனைக்கும் சித்திரவதைக்கும் ஆளாகிறார்கள்.

(தொடரும்)

****Post extract: பழிவாங்கும் ‘வழிகாட்டும் ‘ பேராசிரியர்கள், தாமதமாகும் உதவித்தொகைகள்  ஆகிய இரு பிரச்சினைகளையும் சந்திக்கும் பட்டியலின, பழங்குடியின, மற்றும் பிற பிற்பட்ட பிரிவின மாணவர்கள் ஒவ்வொருநாளும் ஒடுக்கப்பட்டுவருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here