இது ஒரு பேய் கதை. சூனியக்கார கிழட்டுத் தாய் பிரசவிக்கப்போகும் பேய்க்குழந்தை பற்றிய கதை. இந்த பேய் கதையை பள்ளி பருவத்தில் நண்பர்களுக்குள் பேசி பயந்திருக்கிறோம். இந்தக் குழந்தை பிறந்துவிட்டால் உலகம் அழிவை சந்திக்கும். பெற்ற தாயையும் உலகையும் கருணையின்றி கொன்றுவிடும். இதன் தலை சுழியில் 3 என்ற எண் சின்னமாக உருப்பெற்றிருக்கும். இந்தச் சின்னம்தான் பேய்க்குழந்தை என்பதற்கு அடையாளம்.

தலையில் மூன்று என்ற அடையாளத்துடன் உலகில் எந்த மூலையில் குழந்தை பிறக்கப்போகிறதோ என்று பயந்தோம். உலகை அழிக்கப்போகும் அந்தக் குழந்தை எப்படியிருக்கும் என்ற ஆர்வம் எங்களிடம் மேலோங்கியிருந்தது. நாட்கள் கடந்தன. ஆண்டுகள் உருண்டன. உயர்கல்விக்குச் செல்லச் செல்ல அறிவியல் திமிருக்கு ஆட்பட நேர்ந்தது.

உலகை அழிக்க ஒரு பேய்க்குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் வெறும் கதை என்று துணிந்துவிட்டோம். அறிவியலின் திமிரால் இந்த துணிவிற்கு ஆளானோம். ஆனால் இன்று வெட்கப்படுகிறோம்.

உண்மையிலேயே ஒரு பேய்க்குழந்தை இந்தியாவில் பிறந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்ற வயிற்றுக்காரி பார்ப்பன (இந்து) மத வெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் என்ற சூனியக் கிழவி. பெற்றவளின் கணவனோ பேரழிவு கரங்களுடைய கிழடுதட்டிபோன ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் இலாப வெறி. இரண்டுக்கும் பிறந்த குழந்தையின் பெயர்தான் மோடியிசம். சின்னம் மட்டும்தான் வித்தியாசம். தலை சுழியில் இருந்த சின்னம் 3 அல்ல, ஸ்வஸ்திக்கை நினைவு படுத்தும் தாமரை.

மோடியிசம் இந்தியாவில் எப்படி பிறந்தது என்று ஆச்சரியமாகப் பார்க்கின்றனர் பலர். இது அம்பேத்கர், பெரியாரின் மண் என்று இறுமாந்துள்ளனர் சிலர். ஆனால் இந்தியாவில் உள்ள சமூக விஞ்ஞானிகள் மூன்று பத்தாண்டுகளாக எச்சரித்து பேசிய வார்த்தைகளை மீண்டும் நினைவு படுத்திப் பார்த்தால் இந்தப் பிறவியின் இரகசியத்தை அறியலாம். இத்தாலியில் பாசிசம் எப்படி பிறந்ததோ, ஜெர்மனியில் நாசிசம் எப்படி பிறந்ததோ அப்படித்தான் இந்தியாவில் மோடியிசம் பிறக்கப்போகிறது என்று எச்சரித்தார்கள். அவர்களின் கணிப்பு தப்பாமல், எதிர்த்துப் போராட சோசலிச முகாம் இல்லாத நிலையில், நிதிமூலதனத்தின் உக்கிரம் புதிய பரிணாமம் அடைந்த நிலையில், தனது தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத ஏகாதிபத்தியம், இன்றைய சூழலுக்கு ஏற்ப புது வகை பாசிசமாக மோடியிசம் பிரசவித்துள்ளது.

வாக்கு எந்திரங்களும், வாக்கு ஆணையங்களும் விசுவாசமாக சேவையாற்றியதால் தான் இந்தியாவில் மோடியிசம் பிறந்தது என்று விளக்குவோர் பலர். வாக்கு ஆணையத்தில் பணியாற்றிய ஒரு பெண்மணி உட்பட பலரும் வாக்காளர்களின் முடிவுகளை எந்திரங்கள் மாற்றிவிடும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் வாக்காணையம் இது குறித்து வாய் திறக்காமலேயே மோடியிசம் பிறப்பதற்கு சேவையாற்றியது. எனினும் சிலர் பதறிக்கொண்டு மறுக்கிறார்கள். மோடியிசம் ஏமாற்று வித்தையால் பிறந்தது அல்ல. மாறாக, இந்திய மக்களின் பேரன்பால் பிறந்ததுதான் என்று சத்தியம் செய்கிறார்கள். இந்திய மக்கள் என்றால் கூட இரு வகை இந்தியர்கள் எப்போதும் இருக்கிறார்கள் என்பதே மெய்நடப்பாகும். சமஸ்கிருதமயமாக்கபட்ட இந்தி, பார்ப்பன மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் இந்து, சார்க் (SARC) நாடுகளை விழுங்க துடிக்கும் இந்தியா என்பதை கனவுகாணும் மிகச் சிறுபான்மை இந்தியர்கள்.

பேரன்பிற்கும், மோடியிசத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். உலகை அழிக்க வந்த பேய்க்கும், கருணைக்கும் தொடர்பு இருக்க சாத்தியம் உண்டா. சாத்தியமெனில் பேரன்பிற்கு வழிவகுத்த மோடியிசம் கொள்கைகள்தான் என்ன? அதன் செயல்பாடுகள் எத்தகையவை?

சமூகத்தின் பண்பாடு, அரசியல், பொருளாதாரம் அனைத்திலும் கார்ப்பரேட்டுகளுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதும், அகண்ட பாரதம் என்ற சவக்குழி அமைத்து மக்களை உயிருடன் அதில் தள்ளுவதுமே மோடியிசம் கொள்கை எனில் பேரன்பு எப்படி சாத்தியப்படும்? இலாப வெறி பிடித்த கிழட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தாகத்திற்கு, மக்களின் வாழ்வையே அருந்தக் கொடுக்கும் மோடியிசம் பேரன்பு எப்படி மலரும்?

ஒரு சதவிகித பெரும் பணக்காரர்களிடம் 70 சதவிகித மக்களுக்கு பிரித்து கொடுப்பதற்கான செல்வங்கள் குவிந்துள்ளன. வெறும் 30 சதவிகித செல்வங்களை 99 சதவிகித மக்கள் சமச்சீரற்ற நிலையில் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வை மோடியிசம் போற்றிப் பாதுகாக்கின்றது.மக்களின் வரிப்பணத்திலிருந்து பல்லாயிரம் கோடிகளை பெற்ற பெரு முதலாளிகளுக்கு கடன்களை முழுதாக தள்ளுபடி செய்கிறது. ஆனால், விவசாயத்திற்காகவும் கல்விக்காகவும் எளிய மக்கள் பெற்ற கடன்களை திருப்பிக் கட்ட இயலாததற்காக தற்கொலையில் மடியச் செய்கிறது மோடியிசம்.

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்து, பழங்குடிகளிடமிருந்து காடுகளை அபகரித்து, இயற்கையிடமிருந்து தாதுமணல், ஆற்றுமணல், நன்னீர் போன்ற அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து இலாப வெறிபிடித்த முதலாளித்துவ நிறுவனங்களிடம் பணிவாக ஒப்படைக்கின்றது மோடியிசம்.

விளைபொருளுக்கு விலை கேட்டால், நிலங்கள் மீது உரிமை கேட்டால், காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கப் போரிட்டால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக விஷ ஆலைகளை மூடக் கோரினால், உயிர் வாழ்வதற்கும், உரிமைக்காக போராடுவதற்கும், வலிதாங்காமல் அழுவதற்கும் உரிமை கோரினால் குருவியைச் சுடுவதுபோல சுட்டுக் கொல்கிறது மோடியிசம்.

இஸ்லாம், கிறித்துவம் போன்ற சிறுபான்மை மதங்களுக்கு எதிராக சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை சண்டை மூட்டுவதும், இ்ந்துக்களுக்குள் சாதிச் சண்டைகள் நிலைப்பதற்கும், சூத்திரர் அல்லாத பார்ப்பன, மேல்சாதி இந்துக்களைக்கொண்டு சூத்திர இந்துக்களை ஒடுக்குவதற்கும், சூத்திர இந்துக்களைக் கொண்டு தலித் இந்துக்களை ஒடுக்குவதற்கும், ஒட்டுமொத்த சாதி ஆண்களும் பெண்களை ஒடுக்குவதற்கும் மோடியிசம் சேவை செய்கிறது. மனுநீதியை அகண்ட பாரதத்தின் நீதியாக்க அரும்பாடுபடுகிறது மோடியிசம்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீது மோடியிசம் வன்முறைகளையும் படுகொலைகளையும் நிகழ்த்துகிறது. பெண்களை பாலுறவு அடிமைகளாகவும், பொருளாதார அடிமைகளாகவும், பண்பாட்டு அடிமைகளாகவும், அரசியல் அடிமைகளாகவும் போற்றி பாதுகாக்கின்றது மோடியிசம்.

மோடியிசத்தின் வெற்றி மக்களுக்கு வாழ வழி செய்ததில் அல்ல. வாயிலேயே வடை சுடுவதிலும், சாப்பிட வந்தவர்களுக்குப் பாடை கட்டி வாய்க்கரிசி போடுவதிலுமே இருக்கின்றது.

மோடியிசத்தின் நடைமுறைகள் அனைத்தும் அதன் கொள்கைகளை நமக்கு நன்கு உணர்த்துகின்றன. மக்களைச் சவக்குழியில் தள்ளுவதே அதன் கொள்கைகள். இத்தகையக் கொள்கைகளால் மக்கள் நெஞ்சுருகி மோடியிசம் மீது பேரன்பு கொள்வார்களா? பேரன்பு கொள்வர் என்பது உண்மையெனில், நிச்சயம் அவர்கள் மக்கள் அல்ல. மக்குகள் அல்லது மனநோயாளிகள் அல்லது இந்து ராஷ்டிர வெறி பிடித்த தற்குறிகள்.

 

 

அம்பானிகளிடம் கொஞ்சிக்குலாவும் கார்ப்பொரேட்டுகளின் எடுபிடி மோடிபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு, சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு, இந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, பசுபாதுகாவலர்களின் ரவுடித்தனங்களுக்கு எதிர்ப்பு, மாட்டிறைச்சியின் பேரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு எதிர்ப்பு, கல்வியில் காவிமயக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் மீதான பேரழிவு திட்டங்களுக்கு எதிர்ப்பு, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு, வளர்ச்சி திட்ட லேபில்களில் சவக்குழி வெட்டும் திட்டங்களுக்கு எதிர்ப்பு,  சமச்சீரற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு எதிர்ப்பு, அறிவியல் மாநாடுகளில் விளக்கப்பட்ட மோடியிசம் அறிவுகெட்டத்தனமான உரைகளின் மீதான நகைப்பும், கண்டிப்பும், எதிர்ப்பும் என நாடெங்கும் நிகழ்ந்து வரும் மோடியிசம் எதிர்ப்பலைகள் மக்களை சுயமரியாதையும், தன்மானமும் உள்ள மக்கள் என்றே நிரூபித்திருக்கின்றன. மோசடியால் பிறந்த மோடியிசம், மெல்ல வளர்ந்து துஷ்டக் குழந்தையாக வலம் வருகிறது என்பது உறுதி. எனினும் துஷ்டக் குழந்தைக்கு ஆயுள் கெட்டி அல்ல!

மோடியிசத்தை வீழ்த்த மக்களின் எதிர்பலைகள் மட்டுமல்ல, பெரியாரின் கைத்தடியும், அம்பேத்கரின் எழுத்தடியும், காரல்மார்க்சின் சிங்கப் பிடரியும் ஒன்றிணைந்து வினையாற்றுகின்றன. மக்களின் அதிகாரத்தை தீர்வாக பறைசாற்றும் கம்யூனிச அரசியல் முதிர்ச்சிகளே மோடியிசத்திற்கு கல்லறை எழுப்பும். ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் விளைவாக உலகெங்கும் உருமாறி நிற்கும் வலதுசாரி பாசிச அலை இந்திய மண்ணுக்குள் வீசாமல் தடுத்து எதிர்த்து போராடும். அந்த போராட்ட அனுபவத்தை உலகிற்கு உணர்த்தி, அகில நாடுகளுக்கும் இந்தியா கலங்கரை விளக்காக ஒளியூட்டும். பொதுவுடைமை உலகமைக்க மோடியிசத்தை வீழ்த்திய பாதையில் நின்று வழிகாட்டும்!

அடிமைத்தனமும், சமத்துவமின்மையும்

மோடியிசத்தின் உருவமெனில்

கொளுத்திச் சாம்பலாக்குவதே மக்களிசம்!

                                                                                                                   — புதியவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here