PADA – மலையாளம் திரைப்படம் ஒரு பார்வை.


மிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளிவந்து வெற்றிவாகை சூடிய ஜெய்பீம் திரைப்படம் வரிசையில், கேரளாவில் 2022 மார்ச் 10ம் தேதி வெளியான PADA  திரைப்படம் 1996-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ளது.

இப்படம் ஏறக்குறைய இரண்டேகால் மணிநேரம் அடுத்தடுத்து என்ன என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் படம் போல் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மலையாள திரைத்துறையில் முன்னணி நடிகர்களான குஞ்சாக்கபோபன், திலிஷ்போத்தன், விநாயகன், ஜோஜிஜார்ஸ், பிரகாஷ்ராஜ், சலீம்குமார் போன்றோர் அவரவர் கதாப்பாத்திரத்தில் அவர்களுக்கே உரியபாணியில் நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள். படத்தின் எழுத்து-இயக்கம் கமல்கே.எம், பின்னணி இசைஅஜயன், எடிட்டிங் ஷான்முகம்மது, ஒளிப்பதிவு தாகிர் ஆகியோர் அவ்வளவுதரமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்த்தியான முறையில் கொடுத்த அனைவரையும் பாராட்டியே ஆகவேண்டும்.

*******

1996 அக்டோபர் 4-ம் தேதி பாலக்காடு ஜில்லா கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்கும் நாளில் மக்களோடு மக்களாக அய்யங்காளிபடையின் (பிரவர்தகர்கள்) என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட 4 இளைஞர்கள் கடந்தவாரம் சட்டமன்றத்தில் கொண்டு வந்த ஆதிவாசி மக்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், ஆதிவாசி மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை ஆதிவாசி மக்களுக்கே திருப்பித்தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

இது legislative action, நான் எப்படி இதனை செய்யமுடியும், நான் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மட்டுமே எனக்கு உள்ளது என்று பாலக்காடு ஜில்லா கலெக்டர் கூறுகிறார். அப்படியென்றால் இதுதான் எங்கள் counter action உங்களை பந்தியாக்கி (பனையகைதி) கொண்டு அநீதிக்கு எதிராக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்று கூறி, பையில் வைத்திருந்த கையெறிகுண்டு, பைப்குண்டு, ஒரு கைத்துப்பாக்கி ஆகியவைகளை காட்டி மிரட்டி, கலெக்டரை நாற்காலியில் பிடித்துகட்டி, அங்கிருக்கும் மக்களை, அதிகாரிகளை பலவந்தமாக வெளியேற்றி, கலெக்டர் அறையின் அனைத்து வாயில்களையும் பூட்டி போராட்டத்தை துவங்குகிறார்கள்.

கலெக்டர் அலுவலகத்தில் கூடி நின்று செய்வதறியாது திகைத்து நின்ற வெகுமக்கள் மத்தியில் 4 தோழர்களும், பொதுமக்களின் கவனத்திற்கு என அறிவிப்பு விடுக்கிறார்கள். இப்போராட்டம் பெரிய அநீதிக்கு எதிராக நடைபெறும் போராட்டம், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிக்கவே இதை செய்கிறோம், இப்போராட்டம் அடித்து துரத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக மட்டுமே, போலீசுக்கு வேண்டுமென்றால் தகவல் சொல்லுங்கள் மற்றபடி மக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் எனகையில் வெடிகுண்டுகளுடன் முழங்குகிறார்கள்.

 

பந்தியாக்கி பிடித்து வைக்கப்பட்டுள்ள கலெக்டர் நான் இதற்கு ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன், இது ஜனநாயக விரோதம் என அலறுகிறார். போராட்டகாரர்கள் சுதந்தரத்திற்கு பிறகு அரியனையேறிய ஒவ்வொரு ஆட்சியும், இடது – வலது சர்கார்களும், ஆதிவாசி மக்களுக்கு  எதிராகதான் வேலை செய்கிறார்கள், இந்த போலி ஜனநாயகம் தான் எங்களுக்கு மிகப்பெரிய எதிரி, ஆகையால் இதனை எதிர்த்து போராட வேண்டியது தான் அவசியம் என கர்ஜிக்கிறார். நீங்கள் நினைக்கலாம் நாங்கள் உங்களை பந்தியாக்கி செய்கிறோம் என்று, ஆனால் உண்மையில் உங்கள் ஜனநாயகத்தில் மக்கள் தான் பந்தியாக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக அமைப்பு மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, கோடானு கோடி மக்களுக்கு அல்ல என இடித்துரைக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக தொடர்பு குறிப்புகளை எடுத்து தலைமைசெயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தங்கள் கோரிக்கையை தெரிவிக்கிறார்கள், அதேப்போல் பத்திரிக்கை, தூர்தர்ஷன், ஆகாஷவானி போன்ற ஊடகத்திற்கு எதற்காக போராட்டம்என்பதை விளக்கி செய்தி வெளியிட கூறுகிறார்கள். அதேநேரத்தில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த மூத்தகிரிமினல் வழக்கறிஞரும், சமூகசெயற்பாட்டாளருமான திரு.ஜெயராமன் அவர்களை அய்யங்காளிபடை சார்பாக அரசுடன் பேசநியமிக்கிறார்கள், இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்க மத்தியஅரசு NSG என்ற மத்தியப்படையை அனுப்பிவைக்கிறது. அதுவரை போராட்டக்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை கடத்துவது என அரசு திட்டமிடுகிறது. ஆனால் தலைமைசெயலாளர் கலெக்டரை விடுவித்து விட்டால் மத்தியப்படையின் அவசியம் இல்லை என கூறுகிறார். அவர்கள் வாளையார் வந்துவிட்டார்கள் என்ற செய்தி கேட்டு விழிப்பிதுங்குகிறார். அதற்குள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.

சமரச பேச்சுவார்த்தைக்கு போராட்டக்காரர்கள் சார்பில் முன்வைத்த திரு.ஜெயராமன் அவர்களை தலைமைசெயலாளர் விரைந்து செல்ல வலியுறுத்துகிறார். அதனடிப்படையில் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து பேசுவதுடன், போராட்டத்தின் நியாயத்தை புரிந்துக்கொண்டு இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த சட்டஆலோசனையும் வழங்குகிறார்.

இப்பிரச்சனையில் சட்டமன்றம் இயற்றிய சட்டத்தை திரும்பப் பெற நீதிமன்றத்திற்கு மட்டுமே முடியும். ஆகையால் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு கலெக்டரை விடுவிக்க போராளிகள் தயாராக உள்ளனர்.

ஆனால் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சட்டத்தை திரும்பப்பெற உத்திரவாதம் தர வலியுறுத்துகிறார். அதன் படி மாவட்ட நீதிபதி நேரில் வந்து இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுக்காண அரசுக்கு பரிந்துரைக்கிறேன் என உத்திரவாதம் கொடுக்கிறார். 21 ஆண்டுகளாக இடது– வலதுசர்கார்கள் ஆட்சியில் முடிவுக்குவராத இப்பிரச்சனையில் உயிரைபனயம் வைத்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இங்குள்ள யாரையும் அவர்கள் தொந்தரவு செய்யவில்லை. உண்மையில் அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் கலெக்டரிடம் மட்டும்தான் அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் எனகூறுகிறார். மேலும் ஒரு நிபந்தனை கூட போராளிகளுக்கு உள்ளது என வழக்கறிஞர் கூறுகிறார். இவர்களை இங்கிருந்து வெளியே போகவும், இவர்கள் மீது எவ்வித வழக்கும் போடாமல் கைவிடவேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.

அதெப்படி முடியும் கையில் வெடிகுண்டுகள் ஆயுதங்களுடன் வந்து மாவட்ட கலெக்டரை பந்தியாக்கியுள்ளனர் என மாவட்ட நீதிபதி கூறுகிறார். உடனடியாக போராட்டக்காரர்கள் தங்கள் கையில் இருந்த ஆயுதங்கள், வெடிகுண்டுகள் அனைத்து டம்மிதான் என அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்பாக நிரூபிக்கிறார்கள். நீதிபதி மாவட்ட கலெக்டரிடம் புகார் ஏதேனும் உள்ளதா என கேட்கிறார். இவர்கள் செய்தது சரி என்று சொல்லமாட்டேன், ஆனால் தனிப்பட்ட முறையில் இவர்கள் என்னிடம் மிகவும் கண்ணியமாகதான் நடந்துகொண்டனர். ஆகையால் இவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு புகார் ஏதும் இல்லை. கலெக்டர் புகார் ஏதும் இல்லை என்று கூறிய நிலையில் மாவட்டபோலீஸ் நிர்வாகத்திற்கு புகார் ஏதும் உள்ளதா? என கேட்கும்போது, DGP எழுந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத நிலையில் எங்களுக்கு இவர்களை விடுவிப்பதில் ஆட்சேபம் ஏதுமில்லை எனகூறிய நிலையில் போராட்டக்காரர்கள் சமரசம் பேச வந்த வழக்கறிஞர் தலைமையில் வெளியேறுகிறார்கள்.

போராட்டக்காரர்கள் மீது விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் முன்வைக்கிறார்கள். ஆனால் தலைமைசெயலாளர் அதெல்லாம் வேண்டாம் என புறந்தள்ளுகிறார்.

pada படத்தில் வரக்கூடிய நிஜப் போராளிகள்!

ஆனாலும் அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி போராட்டத்தை முன்னெடுத்த நான்கு தோழர்களான விலயோடி சிவன்குட்டி, கல்லறபாபு, காஞ்சங்காடுரமேசன், மன்னூர்அஜயன் ஆகிய போராளிகளை சில மாதங்களில் தேடுதல்வேட்டை நடத்திகைது செய்து சிறை வைக்கிறது போலீசு. ஆறுமாதம் சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் தோழர்கள்.

மக்களை பாதிக்கும் பிரச்சனையில் போராடுவதற்கான தைரியமும், உணர்வும், சரியான திட்டமிடலும் தான் அவசியம் என்பதை இப்படம் நமக்கு உணர்த்துகிறது.

மு.முகிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here