பத்திரிக்கைச் செய்தி

02.08.2022

சக்தி மெட்ரிக் பள்ளி வன்முறை – திசைமாறும் சிறப்பு புலனாய்வு பிரிவு !


க்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கத்தை போலீசு காவலில் எடுத்து அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாக சொல்லி பொய்யான கட்டு கதைகளை எழுதி எண்ணற்ற மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்பு தோழர்களை இந்த வழக்கில் இணைத்து கைது செய்யும் சதிதிட்டம் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் இதைதான் செய்தனர். நீதிமன்றத்தின் மூலம் அவற்றை முறியடித்தோம்.

மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கம் மற்றும் மணிகண்டன், கோபு, சரண்குரு, பிரதீப் ஆகிய ஐந்து பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு நேற்றைய தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதி போலீஸ் காவலுக்கு விசாரணைக்காக எடுத்து அழைத்துச் சென்றார்கள். அவர்களிடம் போலீஸ் காவலை ஆட்சேபணை செய்வதற்கான வாய்ப்புகளையும், தகவல்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் தெரிவிக்காமலேயே நேற்றைய தினம் ரகசியமாக போலீஸ் காவலுக்கான உத்தரவை சிறப்பு புலனாய்வு துறை பெற்றுள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினம் ஆகஸ்ட் 2 கள்ளக்குறிச்சி மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக தோழர். ராமலிங்கம் அவர்களுடைய மனைவி உஷா சார்பிலே மேற்படி போலீசு காவல் பற்றி முறையிட்டோம். அதை தொடரந்து 24 மணிநேர போலீஸ் காவல் முடிந்து மீண்டும் இன்றைக்கு மதியம் ஒரு மணிக்கு ஐந்து பேரையும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம் காவல்துறையிடம் எந்த ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கவில்லை என்பதை நீதித்துறை நடுவர் அவர்களிடம் பதிவு செய்ய கூறினோம். தோழர் ராமலிங்கமும் நீதிமன்றத்தில் “காவல்துறையினர் என்னிடம் ஐந்தாறு தாள்களில் கையெழுத்தை வாங்கினார்கள். அதில் என்ன எழுதி இருந்தது என்பது எனக்கு தெரியாது” என்பதை நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிபதியும் அதை பதிவு செய்து கொண்டார். அடுத்ததாக மீதி நான்கு பேரிடமும் அதே போல் தனித்தனியாக நீதிபதி கேட்டு அதே பதிலை பதிவு செய்தார்.

இவ்வாறு பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தில் போலீசார் எதை வேண்டுமானாலும் எழுதி கொள்ளலாம். இதன் மூலம் சிறப்பு புலனாய்வு துறை போலீசார் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர்கள் மற்றும் பெரியார் திராவிட கழக இயக்கத்தினர்களையும் ஏனைய நான்கு பேர் சார்ந்திருக்கும் செம்பாகுறிச்சி, சிறுநெசலூர்,வேப்பூர், மேலபட்டு, ரங்கநாதபுரம் ஆகிய ஊர்களில் போலீசாருக்கு தேவையான பெயர்களை சேர்த்து கொண்டு மேலும் பலரை கைது செய்ய முடியும். இது போலீசின் வழக்கமான கேடு கெட்ட நடைமுறை.

சக்தி பள்ளி வன்முறைக்கும் மக்கள் அதிகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் பிரபலமான பெயராக மக்கள் அதிகாரம் இருக்கிறது அதை கேடாக இதில் சேர்தது விட்டு வழக்கை திசைதிருப்ப பார்க்கிறது. பா.ஜ.க எச்.ராஜா தொடர்ந்து கள்ளகுறிச்சி வன்முறைக்கு மக்கள் அதிகாரம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் காரணம் என பழி சொல்லி வருகிறார். பத்திரிக்கை தொலைகாட்சியும் அதை ஒலிபரப்புகிறது. போலீசும் எச்.ராஜா சொன்ன திசையில் விசாரணையை நகர்த்துகிறது. அதனால்தான் மாவட்ட செயலளர் தோழர் ராமலிங்கத்தை போலீசு காவலுக்கு எடுத்து பொய்யான வாக்குமூலத்தின் மூலம் மக்கள் அதிகார தோழர்களை வேண்டுமென்றே இந்த வன்முறை வழக்கில் இணைப்பதற்காக இந்த சதித்திட்டத்தை போலீசார் செய்கிறார்கள்.

மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மட்டுமல்ல, எண்ணற்ற அமைப்புகள், பொது மக்கள் பங்கேற்றார்கள். நான்கு நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் செயலற்ற தன்மையும், சக்தி மெட்ரிக் பள்ளியின் நிர்வாகம் தடயங்களை அழித்து உண்மையை மூடி மறைக்க முயன்றதன் காரணமாகதான் மக்களின் போராட்டம் ஆத்திரமாக வன்முறையில் முடிந்திருக்கிறது. வன்முறையை திட்டமிட்டு நிகழ்த்தியது யார் என்பது பள்ளி தாளார் ரவிக்குமார், அவர் மனைவி சாந்தி மற்றும் அவரை சார்ந்தோரின் செல்போன் அழைப்புகளை விசாரித்தால் ஸ்ரீமதி மரணத்திற்கான காரணமும், வன்முறைக்கான காரணம் தெரியும். 300க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்து சிறையிலிடைக்கும் அவசியம் இல்லை.

அதே போல காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்தின் மீது உறுதியான நடவடிக்கை மக்கள் போராட்டத்தின் போது எடுத்திருந்தால் 17ஆம் தேதி வன்முறை நடந்திருக்காது. தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை, அடக்குமுறை, போட்டி கல்வி வியாபாரத்திற்காக மாணவர்களை கசக்கி பிழிவது, கற்பதில் ஜனநாயகம் இல்லை, குழந்தை தனம் இல்லை, ஸ்ரீமதியை காவு வாங்கிய இத்தகைய தனியார்கல்வி முறைக்கு எதிராக போராட்டம் திரும்பவில்லை.

அதே நேரம் ஸ்ரீமதி மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு. பள்ளி வன்முறைக்கு காரணமான குற்றவாளிகளை தொடர்ந்து தேடி கைது செய்தாக வேண்டும் என்பது முன்னுக்கு வருகிறது. தற்போது பாதிக்கபட்டவர்கள் பள்ளி நிர்வாகிகளாகி விட்டார்கள். எந்த தவறும் செய்யாத இளைஞர்கள் சிறையில் துன்பத்தில் இருக்கிறார்கள். தனது மகள் எப்படி செத்தாள் என்பதைகூட தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் தயார். மற்றும் அவரது குடும்பத்தினர். இது பின்னுக்கு தள்ளப்படுகிறது.

நீதி கேட்டு போராடுவதையும், கூலிப்படைகளால் நிகழ்த்தப்பட்ட வன்முறை என இரண்டையும் ஒன்றிணைத்து போராடியவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்கிறது போலீசு. இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஸ்ரீமதியின் நீதி என்பது அவருக்காக போராடியவர்கள் சிறையிலிருந்து விடுதலை அடைவதோடு இணைந்தது.

தமிழக காவல்துறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை. மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது திட்டமிட்டு ஏவப்பட்டுள்ள இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல சிறையில் இருப்பவர்கள், கல்லூரிக்கு சென்றவர்கள், படிப்பவர்களை அழைக்க சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் இப்படி எண்ணற்றவர்களை, அப்பாவிகளை இடை மறித்து போலீசின் அதிகார த் திமிரை கொண்டு அடித்து நொறுக்கி , வலுக்கட்டாயமாக சிறை பிடித்து இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீமதியினுடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைப்பதன் மூலம் மட்டும்தான் இதுபோன்று இனி கல்வி நிலையங்களில் ஒரு மாணவியும், ஒரு மாணவரும், குழந்தை செல்வங்கள் பலியாவதை தடுக்கும். தனியார் கல்விக் கொள்ளையர்களிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை உயிரை பாதுகாப்பது என்பது இதில் கிடைக்கக்கூடிய நீதியாக இருக்க முடியும்.

அதை விடுத்து போராடுபவர்களை ஒடுக்குகின்ற வகையில், இனிமேல் யாரும் போராடி விடக்கூடாது அதற்கு எப்படி சரியான பாடம் புகட்ட வேண்டும் என சட்ட விரோதமான முறையிலும் கிரிமினல் தனமாகவும் சிந்திக்கும் போலீஸினுடைய மூளையிலிருந்தும், போலீஸினுடைய நிலையிலிருந்தும் இந்த பிரச்சனையை அணுகுவது அடிப்படையிலேயே ஜனநாயக விரோதமானது.

என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here