வேதங்களின் உள்ளடக்கம்: அவை அறநெறி ஆன்மிகப் பண்பு கொண்டவையா?

வேதங்கள் மீறமுடியாதவை, பொய்யாதவை என்று ஏற்கப்பட வேண்டுமானால் அவற்றின் போதனைகள் அறநெறிப்பண்பும் ஆன்மிகப் பண்பும் கொண்டவையாக ஏற்க வேண்டும் என்ற கருத்தை ஜைமினி போன்ற தத்துவ அறிஞர் ஆதரிப்பதனால் மட்டும் ஒரு பழங்கத்தைப் புத்தகத்தை மீற முடியாதது என்றும், பொய்யாதது என்றும் யாரும் கருத முடியாது. வேதங்களுக்கு அறநெறி, ஆன்மிகப் பண்பு எதுவும் இருக்கிறதா? வேதங்கள் பொய்யாதவை என்று கருதும் ஒவ்வொரு இந்துவும் இந்தப் பிரச்சினையை ஆராய வேண்டும்.

நவீன கால எழுத்தாளர்கள் வேதங்களுக்கு ஆன்மிகப் பண்பு எதுவும் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாகப் பேராசிரியர் முயிரின் கருத்துக்களைக் குறிப்பிடலாம். அவர் கூறுகிறார்:

”இந்தப் பாடல்களின் தன்மையும், இவை, இயற்றப்பட்ட சூழ்நிலைகள் பற்றிய அகச்சான்றுகளும், இவை, இவற்றை முதலில் பாடிய பண்டைக்காலக் கவிகளின் சொந்த நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றின் இயல்பான வெளிப்பாடுகளே தவிர வேறொன்றும் அல்ல என்ற கருத்துக்கு இணக்கமாக உள்ளன. இந்தப் பாடல்களில் ஆரிய ரிஷிகள் பரம்பரையாகத் தாங்கள் வணங்கும் கடவுள்களின் புகழைப் பாடி (அதே சமயம் அந்தக் கடவுள்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அளித்து, பொதுவாக எல்லா மனிதர்களும் விரும்புகின்ற ஆசிகளை – உடல் நலம், செல்வம், நீண்ட ஆயுள், கால்நடைகள், குழந்தைகள், எதிரிகள் மீது வெற்றி, பாவ மன்னிப்பு, சொர்க்க போகம் ஆகியவற்றை அருளும்படி அவர்களை வேண்டிக் கொள்கிறார்கள்”

வெளிநாட்டு அறிஞர்கள் அனைவரும் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் என்றும், எனவே அவர்களின் கருத்துக்களை ஏற்க முடியாது என்றும் ஆட்சேபம் கூறப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிர்ஷ்டவசமாக, வெளிநாட்டு அறிஞர்களின் கருத்தை மட்டுமே நாம் சார்ந்திருக்கவில்லை.

நம் நாட்டிலேயே சில சிந்தனைப் பிரிவுகளின் தலைவர்கள் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மிகப் பிரபலமான உதாரணமாகச் சார்வாகர்களைக் குறிப்பிடலாம்.

சார்வாகர்களின் எதிர்ப்பை, வைதிகர்களுக்கெதிரான வாதங்களை எடுத்துக்கூறும் பின்வரும் மேற்கோளில் காணலாம்:

“வருங்கால உலகம் ஒன்றில் இன்பம் அனுபவித்தல் என்பது இல்லை என்றால், அனுபவம் மிக்க அறிவு பெற்ற மனிதர்கள் அக்னிஹோத்திரம் முதலான, மிகுந்த பணச் செலவும் உடல் உழைப்பும் தேவைப்படும் வேள்விகளை எப்படிச் செய்வார்கள் என்பது உங்களுடைய ஆட்சேபம் என்றால் உங்கள் ஆட்சேபம் எங்களுக்கெதிரான கருத்திற்கு நிரூபணமாகாது. ஏனென்றால் அக்னிஹோத்திரம் முதலானவை வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு வழியாகத்தான் பயன்படுகின்றன. வேதம் மூன்று குறைபாடுகளால் கறைபட்டுள்ளது – உண்மையல்லாதது, தனக்குத் தானே முரண்படுதல், கூறியது கூறல் என்பவை இந்தக் குறைபாடுகள். மேலும், வேத பண்டிதர் என்று

தங்களைக் கூறிக்கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அழிப்பவர்களாயிருக்கிறார்கள். கர்ம காண்டத்தின் அதிகாரத்தை ஏற்பவர்கள் ஞான காண்டத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிகிறார்கள்; ஞான காண்டத்தை ஏற்பவர்கள் கர்ம (அம்பேத்கர் பெளண்டேசன் வெளியிட்டுள்ள தமிழ் பதிப்பில் இந்த வரியுடன் பாரா முடிந்து விடுகிறது)

”அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசி, திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது. இவையெல்லாம் ‘ – ”ஆண்மையும் அறிவும் இல்லாதவர்களுக்கு வயிறு வளர்க்கும் வழிகளே” என பிருகஸ்பதி கூறுகிறார்;

இதே சிந்தனைப் பிரிவைச் சேர்ந்த மற்றொரு உதாரணம் பிருகஸ்பதி. வேதங்களை எதிர்ப்பதில் இவர் சார்வாகர்களைவிடத் துணிச்சலாகவும் தீவிரமாகவும் பேசுகிறார். மாதவ ஆசார்யர், பிருகஸ்பதியின் வாதத்தை இவ்வாறு கூறுகிறார்:

”சுவர்க்கம் என்பது இல்லை, இறுதி முக்தி என்பது இல்லை, வேறொரு உலகில் ஆன்மாக்கள் என்பது இல்லை. நான்கு சாதிகள், ஆசிரமங்கள் முதலானவற்றின் செயல்களும் உண்மையில் விளைவு எதையும் தருவதில்லை. அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசியின் திரிதண்டம், சாம்பலைப் பூசிக் கொள்வது இவையெல்லாம் அறிவும் ஆண்மையும் இல்லாதவர்களின் வாழ்க்கைக்காக இயற்கையால் செய்யப்பட்டவை. ஜ்யோதிஷ்டோமா சடங்கில் கொல்லப்படும் விலங்கே கூட சுவர்க்கத்துக்குப் போகும் என்றால். வேள்வி செய்பவர் தமது தந்தையை அதில் பலி கொடுக்காதது ஏன்?

சிரார்த்தம் நடத்துவது இறந்து போனவர்களுக்குத் திருப்தி அளிக்கும் என்றால், இங்கேயும் கூட, பயணம் செய்பவர்கள் புறப்படும்போது அவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொடுத்து விடுவது அவசியமில்லை .

இங்கே சிரார்த்தத்தில் நாம் கொடுக்கும் நிவேதனங்கள் சுவர்க்கத்தில் உள்ளவர்களை மகிழ்விக்கும் என்றால் இங்கே வீட்டின் கூரைமேல் நிற்பவர்களுக்கு உணவைக் கீழேயே ஏன் கொடுக்கக்கூடாது?

உயிர் உள்ளபோது மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும்; கடன்பட்டாலும் கூட அவன் நெய்யுணவு உண்ணட்டும்; உடல் சாம்பலாகிப் போனபின் அது எப்படி மீண்டும் வர முடியும்?

உடம்பிலிருந்து பிரிந்து செல்பவன் மற்றொரு உலகத்துக்குச் செல்கிறான் என்றால், அவன் தன் உற்றார் மீது கொண்ட அன்பினால் திரும்பி வராமலிருப்பது ஏன்?

எனவே, பிராமணர்கள் இங்கே ஏற்படுத்தியிருப்பவை வாழ்க்கை நடத்துவதற்கான வழியே.

இந்தச் சடங்குகள் எல்லாம் இறந்தவர்களுக்காக நடத்தப்படுகின்றன; இவற்றால் எங்கேயும் எந்தப் பலனும் இல்லை. வேதங்களை இயற்றிய மூன்று பேரும் கோமாளிகள், அயோக்கியர்கள், பிசாசுகள்.

பண்டிதர்களின் நன்கு தெரிந்த மந்திரங்கள் ஜர்பரி, துர்பரி ஆகியவையும், அசுவமேதத்தில் அரசிக்குக் கட்டளையிடப்பட்டுள்ள ஆபாசச் சடங்குகளும்;

இவையெல்லாம் கோமாளிகளால் கண்டு பிடிக்கப்பட்டவை: புரோகிதர்களுக்குக் கொடுக்கப்படும் பல்வேறு தட்சணைகளும் இப்படிப்பட்டவையே.

இதுபோலவே, மாமிசத்தை உண்பதும் இரவில் திரியும் பிசாசுகளால் கூறப்பட்டதே.”

சார்வாகர்களின் கருத்தும், பிரகஸ்பதியின் கருத்தும் ஏற்கப்படவில்லை என்றால், வேறு சான்றுகள் நிறைய உள்ளன. நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகிய தத்துவவாதப் பிரிவுகளின் புத்தகங்களில் இந்தச் சான்றுகள் கூறப்பட்டுள்ளன. இந்தத் தத்துவங்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதியவர்கள், வேதங்களின் அதிகாரத்துக்கு ஆதரவாகத் தங்கள் தரப்பை எடுத்துரைப்பதற்கு முன், வேதங்களின் அதிகாரத்தை மறுக்கின்ற எதிர் தரப்பினரின் வாதங்களை மிகக் கவனமாக எடுத்துக் கூறுகிறார்கள். இதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் நிரூபணமாகின்றன :

வேதங்களைப் பிரமாண நூல்களாக ஏற்க மறுத்த சிந்தனையாளர்களின் பிரிவு ஒன்று இருந்தது; இவர்களுடைய கருத்துக்களை, பிரமாணமாக ஏற்பவர்களே கூடப் பரிசீலனை செய்யவேண்டிய அளவுக்கு மதிப்புக்குரியவர்களாக இந்தப் பிரிவினர் இருந்தார்கள். நியாயம், பூர்வமீமாம்சை ஆகிய தத்துவப் பிரிவினர் எதிர்த் தரப்பு வாதத்தை எடுத்துக் கூறியபடி இங்கே தருகிறேன்.

நியாய தத்துவப்பிரிவின் ஆசிரியரான கோதமர் வேதங்களின் அதிகாரத்தை ஏற்றவர். அவர் இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்களின் வாதங்களை 57-ஆவது சூத்திரத்தில் எடுத்துக்கூறுகிறார்.

அது வருமாறு:

”வேதத்துக்கு அதிகாரம் இல்லை ; ஏனென்றால் அதில் பொய், முன் பின் முரண்படுதல், கூறியது கூறல் ஆகிய குறைபாடுகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் தொடர்பான சான்றுகளைப் போலன்றி, சொற்களால் ஆன சான்று. அதாவது, வேதம் அதிகாரம் உள்ளதல்ல. ஏன்? ஏனென்றால் அதில் பொய் முதலான குறைபாடுகள் உள்ளன.

இவற்றுள், பொய் என்ற குற்றத்துக்கு நிரூபணமாக, புதல்வனை அல்லது வேறு எதையேனும் வேண்டிச் செய்யப்படும் வேள்விக்குப் பலன் இல்லாமல் போவதைச் சில சமயங்களில் நாம் காண்கிறோம். முரண்பாடு என்பது முதலில் கூறியதற்கும் பின்னர் கூறியதற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு. இவ்வாறாக, வேதம் கூறுகிறது: ‘அவன் சூரியன் உதித்தபின் வேள்வி செய்கிறான்; அவன் சூரியன் உதிப்பதற்கு முன் வேள்வி செய்கிறான். அவன் வேள்வி செய்கிறான். (இங்கு அடுத்து வரும் சொற்களை விளக்க முடியவில்லை என்று முயிர் கூறுகிறார்) பழுப்பு மஞ்சளான ஒன்று (நாய்?) சூரியன் உதிப்பதற்குமுன் வேள்வி செய்பவனின் நிவேதனத்தைத் தூக்கிச் செல்கிறது. இந்த இரண்டும் வேள்வி செய்பவனின் நிவேதனத்தைத் தூக்கிச் செல்கின்றன. இங்கே முன் பின் முரண்பாடு காணப்படுகிறது. வேள்வி செய்யும்படிக் கூறுகின்ற சொற்களும், இந்த வேள்விகளால் கெடுதலான பலன்கள் விளையும் என்று பொருள்படுமாறு கூறும் சொற்களும் ஒன்றுக் கொன்று முரண்படுகின்றன. மேலும் வேதத்தில் கூறியது கூறல் என்ற குற்றம் காணப்படுவதால் அதற்கு அதிகாரம் கிடையாது. அவன் முதலாவதை மூன்று முறை திருப்பிச் சொல்கிறான், அவன் கடைசியானதை மூன்று முறை திருப்பிச் சொல்கிறான்’, என்று வேதத்தில் கூறப்படுகிறது. ஆனால் இறுதியாக, கடைசியானதும் முதலாவதும் ஒன்றேயாகச் சேர்ந்து விடுவதனாலும், சொற்கள் மூன்று முறை திரும்பக் கூறப்பட்டிருப்பதாலும் இந்த வாக்கியம் கூறியது கூறல் ஆகிறது. இந்தக் குறிப்பிட்ட வாக்கியங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால், இந்த உதாரணங்களை வைத்து வேதம் முழுவதுமே இதே போன்ற நிலையில்தான் உள்ளது என்பது நிரூபணமாகிறது. ஏனென்றால் மற்ற எல்லாப் பகுதிகளும் இதே ஆசிரியரால் செய்யப்பட்டவையே, அல்லது அவையும் இதே தன்மை கொண்டவையே”

ஜைமினியைப் பார்ப்போமானால், அவர் வேதங்களை எதிர்ப்பவர்களின் கருத்துக்களைத் தம்முடைய பூர்வ மீமாம்சையின் 28 ஆம் சூத்திரத்தின் முதல் பகுதியிலும் 32 – ஆம் சூத்திரத்திலும் சுருக்கித் தருகிறார். 28-ஆம் சூத்திரம் கூறுகிறது:

“வேதங்களில் சாசுவதமல்லாதவர்களும், பிறப்பு – இறப்புக்கு உட்பட்டவர்களுமான மனிதர்கள் குறிப்பிடப்படுவதால் வேதங்கள் சாசுவதமானவை அல்ல என்று ஆட்சேபம் கூறப்படலாம். இவ்வாறாக, வேதத்தில் ‘பபரப்ரவாகினி விரும்பினார்’, ‘குசுர்விந்த அவுத்தாலகி விரும்பினார்’ என்று கூறப்படுகிறது. இவர்களைக் குறிப்பிடும் வேத வாக்கியங்கள் இவர்கள் பிறப்பதற்கு முன்பு இருந்திருக்க முடியாது; எனவே இந்த வாக்கியங்களின் தொடக்ககாலம் ஒன்று உண்டு. இவ்வாறாக இவை சாசுவதமானவை அல்ல என்பதால், இவை மனிதரால் செய்யப்பட்டவை என்று நிரூபிக்கப்படுகிறது”

சூத்திரம் 32 கூறுகிறது:

வேதத்தில் அறிவுக்குப் பொருந்தாத, கோவையற்ற கூற்றுகள் இருப்பதால் அது எப்படி கடமைக்கு நிரூபணமாக முடியும் என்று கேட்கப்படுகிறது. உதாரணமாக இந்த வாக்கியம்: ‘ஒரு கிழட்டு மாடு போர்வையும் செருப்பும் அணிந்து வாசலில் நின்று கொண்டு ஆசீர்வாதங்களைப் பாடிக்கொண்டிருக்கிறது. குழந்தை பெற விரும்பும் ஒரு பிராமணப்பெண் ‘ஓ, மன்னரே, அமாவாசை நாளில் புணர்ச்சி என்பதன் பொருள் என்ன என்று கூறுங்கள்’ என்று கேட்கிறாள் மற்றொரு உதாரணம்: ‘பசுக்கள் இந்த வேள்வியைச் செய்தன!”

இதே கருத்தைத்தான் நிருக்தத்தின் ஆசிரியரான யஸ்கர் கொண்டிருக்கிறார், அவர் கூறுகிறார்:

”(முந்திய பகுதியில் குறிப்பிடப்பட்ட நான்கு வகையான பாடல்களில்), (அ) ஒரு தேவர் நேரில் இல்லாமல் அவரை விளித்துக் கூறும் பாடல்கள், (ஆ) அவர் நேரில் இருப்பதாக அவரை நோக்கிக் கூறும் பாடல்கள், (இ) தேவர் நேரில் இல்லாமலும், வழிபடுவோர் நேரில் இருப்பதாகவும், வழிபடுவோரை நோக்கிக் கூறும் பாடல்கள் ஆகியவைதான் மிக அதிகமாக உள்ளன; (ஈ) பேசுபவரையே குறிப்பிட்டுக் கூறுபவை மிக அரிதாகவே உள்ளன. யாரேனும் ஒரு தேவரிடம் எந்த ஒரு ஆசீர்வாதமும் கேட்காமலே அவரைப் புகழும் பாடல்களும் உள்ளன. உதாரணமாக இருக்வேதம் 1, 32), ‘நான் இந்திரனின் வீரச்செயல்களைக் கூறுகிறேன்’ என்பன போன்றவை. புகழ்ந்து கூறாமலே ஆசீர்வாதம் கோரும் பாடல்களும் உள்ளன. உதாரணமாக, ‘நான் என் கண்களால் நன்றாகப் பார்ப்பேனாகவும், முகத்தில் ஒளி படைத்தவனாக இருப்பேனாகவும், காதுகளால் நன்றாகக் கேட்பேனாகவும். இது அத்வர்யவா (யஜுர்) விலும், வேள்வி மந்திரங்களிலும் அடிக்கடி காணப்படுகிறது. மேலும், சில இடங்களில் சபதங்களும் சாபங்களும் காணப்படுகின்றன (ருக் வேதம் 7,104,15): ‘நான் ஒரு யதுதானா என்றால் நான் இன்றே இறப்பேனாகவும். சில நிலைமைகளை வர்ணிக்கும் அசையைச் சில இடங்களில் காண்கிறோம். உதாரணமாக (ரிக்வேதம் 10, 129, 21), ‘அப்போது மரணம் இருக்கவில்லை, மரணமின்மையும் இருக்கவில்லை என்பது போன்றவை. சில நிலைமைகளைக் குறித்து வருந்தும் பாடல்களும் உள்ளன. உதாரணமாக இருக்வேதம் 10, 95, 14) : ‘இந்த அழகான தேவர் மறைந்து விடுவார், மீண்டும் வரமாட்டார்’ போன்றவை. குற்றம் கூறலும் புகழ்ந்து கூறலும் உள்ளன (ருக் வேதம் 10, 117, 6): தனியாக உண்ணும் மனிதன் தனியாகப் பாவம் செய்பவன்’ சூதாட்டம் பற்றிய பாடலில் (ருக்வேதம் 10, 34, 13) சூதாட்டத்தைக் கண்டித்துக் கூறி, விவசாயத்தைப் பாராட்டிக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக, ரிஷிகள் மந்திரங்களை உருவாக்கியதன் நோக்கங்கள் பலவாறாக உள்ளன.”

யஸ்கரின் சொற்களை மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

”ஒவ்வொரு பாடலிலும் ரிஷி ஏதேனும் நோக்கத்தை அடைய விரும்பி எந்தக் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறாரோ, அந்தக் கடவுள் அந்தப் பாடலின் தெய்வமாயிருக்கிறார்.”

வேதங்களில் அறநெறி அல்லது ஆன்மிகப் பண்பு இல்லை என்பதை நிரூபிப்பதற்கு இது போதாது என்றால் மேலும் சான்றுகள் காட்ட முடியும்.

அறநெறியைப் பொறுத்தமட்டில் ருக்வேதத்தில் அதைப்பற்றிய பேச்சே கிடையாது. அறநெறி வாழ்க்கையைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் உதாரணங்களும் அதில் இல்லை. இதற்கு மாறான மூன்று உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

முதலாவதாக, சகோதரனும் சகோதரியுமான யமனுக்கும் யமிக்கும் இடையிலான உரையாடல்:

(யமி பேசுகிறாள்), “நான் என் நண்பனை நட்புக்கு அழைக்கிறேன். பரந்த பாலைவனக் கடலைக் கடந்து வந்தபின் வேதஸ், சிந்தனை செய்தபின், பூமியில், சிறந்த குணங்களை உடைய தந்தையின் (உன்னுடைய) சந்ததியைத் தோற்றுவிப்பானாகவும்.”

(யமன் பேசுகிறான்), “உனது நண்பன் இந்த நட்பை விரும்பவில்லை . ஒரே இடத்திலிருந்து தோன்றியிருந்தாலும் அவள் வேறுபட்ட வடிவம் கொண்டிருக்கிறாள் ; பெரும் அசுரனின் வீரப்புதல்வர்கள் சுவர்க்கத்தைத் தாங்குவோராகவும், பெரும் புகழ் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.”

(யமி பேசுகிறாள்), ‘அமரர்கள், மரணமடைவோருக்குத் தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற (சேர்க்கையில்) இன்பம் காண்கிறார்கள்; உன் மனம் என் மனத்துடன் இணங்கட்டும்; (எல்லோரையும்) பிறப்பித்தவர் (தனது மகளின்) கணவர் ஆதலால் நீ என் உடலை அனுபவிப்பாயாக.”

(யமன் பேசுகிறான்), “முன்பு எது செய்யப்பட்டதோ அதை இப்போது நாம் செய்யவில்லை; உண்மையைப் பேசும் நாம் இப்போது எப்படி உண்மை அல்லாததைச் சொல்ல முடியும்? கந்தர்வன் (சூரியன்) தண்ணீர்மயமான (வானில்) இருந்தான், தண்ணீர் அவனது மணமகளாயிருந்தாள். அவள் நமது பொதுவான தாய் ஆவாள், அதனால்தான் நம்முடைய நெருங்கிய உறவு.”

(யமி பேசுகிறாள்), ”தெய்வத்தன்மையுடைய, அனைத்து வடிவமான தந்தை த்வஷ்ட்ரி நம் இருவரையும் கணவனாகவும் மனைவியாகவும் கருவிலேயே படைத்தார். அவருடைய செய்கையை யாரும் கெடுக்க வேண்டாம்; பூமியும் வானமும் இந்த நமது (சேர்க்கையை) அறிந்துள்ளன.”

(யமன் பேசுகிறான்), ‘யார் இந்த (அவனுடைய) (உயிர் வாழ்க்கையின் முதல் நாளைப் பற்றி அறிந்திருக்கிறான்? யார் இதைப் பார்த்திருக்கிறான்? யார் இதை வெளிப்படுத்தியிருக்கிறான்? மித்திரனும் வருணனும் வசிக்குமிடம் மிகப் பரந்தது. நீ என்ன சொல்கிறாய், யார் மனிதர்களுக்கு நரக தண்டனை கொடுக்கிறார்?”

(யமி பேசுகிறாள்), ‘யமனுடைய ஆசை, யமியான என்னை , அவனுடன் ஒரே படுக்கையில் படுக்குமாறு அணுகியிருக்கிறது; நான் என் உடலை ஒரு மனைவி தன் கணவனிடம் விட்டுவிடுவதைப் போல் விட்டுவிடுவேன்; நாம் நமது சேர்க்கையில் முனைந்து ஈடுபடுவோமாக, வண்டியின் இரண்டு சக்கரங்களைப் போல.”

(யமன் பேசுகிறான்), ”கடவுள்களின் ஒற்றர்கள் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் ஒரு போதும் ஓய்வதில்லை, கண்களை மூடுவதில்லை. நாசகாரியே, என்னைத் தவிர வேறு யாருடனாவது விரைவாக இணைந்து, இருவரும் சேர்க்கையில் முனைந்து ஈடுபடுங்கள், வண்டியின் இரண்டு சக்கரங்களைப் போல.”

(யமி பேசுகிறாள்), ”அவனுக்கு (யமனுக்கு) ஒவ்வொருவரும் பகலும் இரவும் வேள்வி செய்வார்களாக; அவன் மீது சூரியனின் கண்கள் மீண்டும் மீண்டும் உதிக்குமாக, (அவனுக்கு) தொடர்புள்ள இரண்டும் (இரவும் பகலும்) சுவர்க்கத்துடனும் பூமியுடனும் இணையுமாக; யாமி, யமனின் உறவின்மையைப் பற்றி நடப்பாள்.”

(யமன் பேசுகிறான்), ‘பின் வரும் காலங்களில், சகோதரிகள் தங்கள் சகோதரன் அல்லாத ஒருவனைக் (கணவனாகத்) தெரிந்தெடுப்பார்கள்; ஆதலால், மங்களமானவளே, என்னைத் தவிர வேறு ஒருவனைக் கணவனாகத் தெரிந்தெடுத்து, உனது கையை உன் துணைவனுக்குத் தலையணையாக்கு.”

(யமிபேசுகிறாள்), ‘யாருடைய சகோதரிக்குப் பதி இல்லையோ அவன் ஒரு சகோதரனா? (யாருடைய சகோதரனை) துரதிர்ஷ்டம் நெருங்குகிறதோ அவள் ஒரு சகோதரியா? ஆசையால் ஆளப்பட்டு நான் இந்த ஒரே வேண்டுகோளை வற்புறுத்துகிறேன்; உன் உடலை என் உடலுடன் இணைத்துக்கொள்.”

(யமன் பேசுகிறான்), ”நான் என் உடலை உன் உடலுடன் இணைக்க மாட்டேன். ஒரு சகோதரியிடம் நெருங்குபவனை, பாவி என்று அழைக்கிறார்கள். என்னைத்தவிர யாருடனாவது இன்பம் அனுபவி. மங்களமானவளே, உன் சகோதரனுக்கு அந்த ஆசை இல்லை .”

(யமிபேசுகிறாள்), “ஐயோ, யமனே, நீ பலவீனமானவனாயிருக்கிறாய்; உன் மனத்தையோ உள்ளத்தையோ நாம் புரிந்துகொள்ளவில்லை. வேறொரு பெண் உன்னை, குதிரையைச் சேணக்கச்சை தழுவுவது போலவும், மரத்தைக் கொடி தழுவுவது போலவும் தழுவுகிறாள்.”

(யமன் பேசுகிறான்), “யமி, நீயும் வெறொருவனைத் தழுவிக் கொள்; வேறொருவன் உன்னை , மரத்தைக் கொடி தழுவுவது போலத் தழுவட்டும்; அவனுடைய அன்பை நாடு, அவன் உன் அன்பை நாடட்டும்; இருவரும் மகிழ்ச்சியாக இணைந்து வாழுங்கள்.”

”ராட்சசர்களை அழிப்பவனான அக்னி நமது பிரார்த்தனைக்கு இணங்கி நோயின் (வடிவில்) உன் கருவைத் தாக்குகின்ற (தீய ஆவியை), துர்னாமன் என்ற நோயைப் போல உன் கருப்பையைத் தாக்கும் அவனை விரட்டுவானாக”

‘அக்னி நமது பிரார்த்தனைக்கு இணங்கி, நோயாக வந்து உன் கருவைத் தாக்குகின்ற நரபட்சணியை, துர்னாமன் நோயைப்போல உன் கருப்பையைத் தாக்கும் அவனை அழிப்பானாக”

”கருவுறுத்தும் சக்தியை, அமருகின்ற வித்தினை, அசையும் கருவை அழிக்கின்ற (தீய ஆவியை) (குழந்தை) பிறக்கும்போது அதை அழிக்க நினைப்பவனை நாம் ஒழித்து விடுவோமாக”

”உனது தொடைகளைப் பிரிக்கின்ற (தீய ஆவியை), கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கிடக்கின்ற, உனது கருப்பையில் புகுந்து (வித்துக்களை விழுங்குகின்ற அவனை நாம் ஒழித்துவிடுவோமாக. சகோதரன், கணவன், காதலன் என்ற வடிவில் உன்னை அணுகி உன் சந்ததியை அழிக்க எண்ணும் (தீய ஆவியை) நாம் இங்கிருந்து ஒழித்து விடுவோமாக”

”தூக்கத்தால் அல்லது இருளால் உன்னை ஏமாற்றி, உன்னை அணுகி, உன் சந்ததியை அழிக்க நினைக்கும் (தீய ஆவியை) நாம் இங்கிருந்து ஒழித்து விடுவோமாக”

ருக் வேதத்தில் வரும் சில பிரார்த்தனைப் பாடல்களைப் பாருங்கள், சில உதாரணங்கள் –

1. ஓ, வாயுதேவனே, நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய். நாங்கள் சோமரசத்தை (ஒரு மதுபானம்) வாசனைப் பொருள்களுடன் தயாரித்து வைத்திருக்கிறோம். நீ வந்து அதை அருந்தி எங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்று – ருக் வேதம் 1.1.2.1.

2. ஓ, இந்திர தேவனே, நீ எங்களின் பாதுகாவலுக்குச் செல்வத்தைத் தருவாயாக. நீ எங்களுக்குத் தரும் செல்வம் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்து, என்றும் பெருகி நீடித்து, எங்கள் எதிரிகளை நாங்கள் கொல்வதற்கு உதவுமாக 1.1.8.1

3. நீங்கள் எப்போது யக்ஞம் செய்தாலும், தேவர்களான இந்திரனையும் அக்னியையும் புகழத்தவறாதீர்கள். அவர்கள் நிலையை உயர்த்தி, அவர்களது புகழைக் காயத்திரி சந்தத்தில் பாடுங்க ள் 1.21.2.

4. ஓ, அக்னியே, சோமரசம் பருக ஆவலாயிருக்கும் தேவர்களின் மனைவியரையும் த்வஷ்டாவையும் அழைத்து வாருங்கள்.

5. தேவர்களின் மனைவியர் விரைவாகவும் மகிழ்ச்சியுடனும் எங்களிடம் வரவேண்டுமென்று விரும்புகிறோம் – 1.22.11.

6. இந்திரன், வருணன், அக்னி ஆகியோரின் மனைவியர் என் வீட்டுக்கு வந்து சோமரசம் பருக நான் விரும்புகிறேன்.

7. ஓ, வருணனே, உன்னுடைய சினத்தை விட்டுவிட வேண்டுகிறோம். ஓ, அசுரனே, நீங்களெல்லாம் விவேகமுள்ளவர்கள், எங்களுடைய பாவங்களிலிருந்து எங்களை விடுவியுங்கள் – 1.23.14.

8. பெண்கள் முன்னும் பின்னுமாகக் கடைந்து எங்கள் சோமரசத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ஓ, இந்திரனே, நீ வந்து சோமரசம் பருக வேண்டுகிறோம் -1.28.3

9. உனக்கு நிவேதனம் கொடுக்காத உன்னுடைய எதிரிகள் மறைந்து போகட்டும்; உன்னைப் பின்பற்றுவோர் செழித்து வாழட்டும். ஓ, இந்திரனே, எங்களுக்குச் சிறந்த பசுக்களையும் சிறந்த குதிரைகளையும் கொடுத்து, எங்களை உலகில் புகழ் பெறச் செய்-129.4

10. ஓ, அக்னியே, எங்களை ராட்சசர்களிடமிருந்து தந்திரமான எதிரிகளிடமிருந்து, எங்களிடம் வெறுப்புக் கொண்டு எங்களைக் கொல்ல விரும்புவோரிடமிருந்து எங்களைக் காப்பாற்று.

11. ஓ, இந்திரனே, நீ வீரன். நீ வந்து, நாங்கள் தயாரித்திருக்கும் சோமரசத்தைப் பருகி, எங்களுக்குச் செல்வத்தைக் கொடு. உனக்கு நிவேதனம் கொடுக்காதவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அதை எங்களுக்குக் கொடு -1.81-8-9.

12. ஓ, இந்திரனே, சிறந்ததான, அமரத்துவம் கொடுக்கின்ற, மிகவும் போதை தருகின்ற சோமரசத்தைப் பருகு -1.84-4

13. ஓ, ஆதித்தியர்களே, எங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் எங்களுக்குப் போரில் வெற்றி தருகிறீர்கள். நீங்கள் செல்வம் உடையவர்கள். நீங்கள் அறம் செய்பவர்கள். கடினமான பாதையில் தேர் இழுத்துச் செல்லப்படுவது போல நீங்கள் எங்களை அபாயங்களிலிருந்து இழுத்துச் செல்கிறீர்கள் 1106-22.

14. ஓ, மருத்துக்களே …. உங்களை வழிபடுவோர் உங்கள் புகழைப் பாடுகிறார்கள். உங்களுக்காகப் புல்மெத்தை தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதில் அமர்ந்து சோமரசம் பருக வாருங்கள் -757-1- 2.

15. ஓ, மித்ர-வருணனே, நாங்கள் யக்ஞத்தில் உங்களுக்கு வழிபாடு செய்தோம். நீங்கள் அதை ஏற்று எங்களை எல்லா அபாயங்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் – 760 – 12.

இவை ருக் வேதம் என்ற பெரிய மூட்டையிலிருந்து எடுத்த சில பாடல்களே. இவை மிகச் சிலவேதான் என்றாலும், மொத்தமும் எப்படிப்பட்டது என்பதைச் சரியாகக் காட்டுகின்றன.

ருக் வேதத்திலும் யஜுர் வேதத்திலும் காணப்படும் பல ஆபாசமான பகுதிகளை நான் வேண்டுமென்றே விட்டுவிட்டேன். இதைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறவர்கள் ருக் வேதத்தில் சூரியனுக்கும் புஷனுக்கும் இடையிலான உரையாடலையும் (மண்டலம் 10, 85, 37), இந்திரனுக்கும் இந்திராணிக்கும் இடையிலான உரையாடலையும் (மண்டலம் 10, 86, 6) பார்க்கலாம். மேலும் ஒரு ஆபாசத்தை யஜுர் வேதத்தில் அசுவமேதம் பற்றிய பகுதியில் காணலாம்.

இந்த ஆபாசங்களை விட்டு விட்டு ருக்வேதத்தின் பிரார்த்தனைப் பகுதியை மட்டும் பார்த்தாலும், இவை அறநெறியிலும் ஆன்மிகத்திலும் மனிதனை உயர்த்துவனவாக உள்ளன என்று யாரேனும் கூறமுடியுமா? தத்துவ ஞானம் என்று பார்த்தால் ருக் வேதத்தில் ஒன்றும் இல்லை . பேராசிரியர் வில்சன் கூறுவது போல், முக்கிய வேதமான ருக்வேதத்தில் தத்துவ ஞானம் அல்லது கோட்பாடுகள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. பிற்காலத்தில் பல்வேறு சிந்தனைப் பிரிவினர் கூறிய கருத்துக்களைப் பற்றியோ, மறுபிறவி பற்றியோ, அதனுடன் நெருங்கிய தொடர்புள்ள கருத்தான உலகம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுதல் பற்றியோ அதில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆரியர்களின் சமூக வாழ்க்கையைப் பற்றி அறிவதற்கு வேதங்கள் ஆதாரத் தகவல் நூலாகப் பயன்படலாம். நாகரிகத்தின் ஆரம்பநிலையில் உள்ள வாழ்க்கை பற்றிய சித்திரமாக அதில் நிறைய விசித்திரங்கள் உள்ளன ; ஆனால் உள்ளத்தை உயர்த்துவதாக எதுவும் இல்லை . அதில் கேடானவைதான் அதிகமாகவும் நலமானவை மிகச் சிலவாகவுமே உள்ளன.

இனி நாம் அதர்வண வேதத்தின் உள்ளடக்கம் என்னவென்று பார்ப்போம். இதற்கு மிகச் சிறந்த வழியாக அதர்வண வேதத்தின் உள்ளடக்க அட்டவணையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன்.

புத்தகம் 1. நோய்களையும் பேய் பிடிப்பையும் குணமாக்குவதற்கான மந்திர வசியங்கள்.

V.22. காய்ச்சல் முதலான நோய்களுக்கெதிரான மந்திர வசியம்.

VI.20. காய்ச்சலுக்கு எதிரான மந்திர வசியம். 1.25. காய்ச்சலுக்கு எதிரான மந்திர வசியம்.

VII.116. காய்ச்சலுக்கு எதிரான மந்திர வசியம்.

V. 4. காய்ச்சலைப் போக்குவதற்குக் குஷ்டா செடிக்கு ஒரு பிரார்த்தனை.

XIX. 39. காய்ச்சலையும் அதனுடன் தொடர்புள்ள நோய்களையும் போக்குவதற்குக் குஷ்டா செடிக்குப் பிரார்த்தனை.

I.12. காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவற்றுக்குக் காரணம் என்று கருதப்பட்ட மின்னலுக்கு ஒரு பிரார்த்தனை.
1.22. மஞ்சள் காமாலை, அதனுடன் தொடர்புள்ள நோய்களுக்கெதிரான மந்திர வசியம்.

VI.14. ஹலசா நோய்க்கெதிரான மந்திர வசியம்

VI.105. இருமலுக்கெதிரான மந்திர வசியம்.

I.2. உடம்பிலிருந்து மிகுதியான வெளியேற்றங்களுக்கெதிரான மந்திர வசியம்.

II.3. உடம்பிலிருந்து மிகுதியான வெளியேற்றங்களுக்கெதிரான மந்திர வசியம், ஊற்று நீரைக் கொண்டு செய்யப்படுவது.

VI.44. உடம்பிலிருந்து மிகுதியான வெளியேற்றங்களுக்கெதிரான மந்திர வசியம். 1.3. மலச்சிக்கல், சிறுநீர் போகாமை ஆகியவற்றுக்கெதிரான மந்திர வசியம்.
VI.90. ருத்ரனின் கண்களால் ஏற்படும் உள் வலி (சூலைக்கு எதிரான மந்திர வசியம். 1.10. நீர்கோப்பு நோய்க்கெதிரான மந்திர வசியம்.

VII. 83. நீர் கோப்பு நோய்க்கெதிரான மந்திர வசியம்.

VI.124. நீர்கோப்பு நோய், இதய நோய், இவற்றுடன் தொடர்புள்ள நோய்களுக்கு ஓடும் தண்ணீர் மூலம் சிகிக்சை .

VI.80. இரண்டில் ஒன்றாகக் கருதப்படும் சூரியனுக்கு ஒரு நிவேதனம்.

II.8. ஷேத்ரியா என்ற பரம்பரை நோய்க்கெதிரான மந்திர வசியம்.

II.10. ஷேத்ரியா என்ற பரம்பரை நோய்க்கெதிரான மந்திர வசியம்.

III.7. ஷேத்ரியா என்ற பரம்பரை நோய்க்கெதிரான மந்திர வசியம். 1.23. கருமையான ஒரு செடியின் மூலம் தொழுநோயைப் போக்குதல்.

I.24. கருமையான ஒரு செடியின் மூலம் தொழுநோயைப் போக்குதல்.

VI.83. கண்டமாலை நோயைப் போக்குவதற்கு மந்திர வசியம்.

VII.76. (அ) கண்டமாலை நோய்க்கெதிரான மந்திர வசியம்.
(ஆ) பொறாமையைச் சாந்தப்படுத்தும் மந்திரவசியம்.
(இ) சபதங்களின் அதிபதியான அக்னிக்குப் பிரார்த்தனை.

VI.25, கழுத்திலும் தோள்களிலும் வரும் கண்டமாலைப் புண்ணுக்கு எதிரான மந்திரவசியம்.

VI.57. கண்டமாலை நோய்க்குச் சிறுநீர்ச் சிகிச்சை

IV. 12. எலும்பு முறிவுக்கு அருந்ததி (லக்ஷா) செடியினால் சிகிச்சை அளிக்கும் மந்திர வசியம்.

V.5. காயங்களுக்கு சிலாகி (லக்ஷா) அருந்ததி செடியினால் சிகிச்சை அளிக்கும் மந்திரவசியம்.

VI.109, காயங்களுக்கு மிளகினால் சிகிச்சை

I.17. இரத்தப் போக்கை நிறுத்துவதற்கு மந்திர வசியம்.
II.31.புழுக்களுக்கெதிரான மந்திர வசியம். II. 32. கால்நடைகளில் புழுக்களுக்கெதிரான மந்திர வசியம்.

V. 23. குழந்தைகளிடம் காணப்படும் புழுக்களுக்கெதிரான மந்திர வசியம்.

IV. 6. நஞ்சுக்கெதிரான மந்திர வசியம்.

IV.7. நஞ்சுக்கெதிரான மந்திர வசியம்.

VI.100. நஞ்சுக்கு முறிவாக எறும்புகள்.

V.13 பாம்பு நஞ்சுக்கெதிரான மந்திர வசியம்.

VI.12. பாம்பு நஞ்சுக்கெதிரான மந்திர வசியம்.

VII.56. பாம்புகள், தேள்கள், பூச்சிகள் ஆகியவற்றின் நஞ்சுக்கெதிரான மந்திர வசியம்.

VI.16. கண் அழற்சிக்கெதிரான மந்திர வசியம்.

VI.21. முடி வளர்வதற்கான மந்திர வசியம்.

VI.136. முடி வளர்வதற்கு நிடவுனி செடியினால் மந்திர வசியம்.

VI.137. முடி வளர்வதற்கு மந்திர வசியம்.

IV.4. ஆண்மை பெருக மந்திர வசியம்.

VI.iii. பைத்தியத்துக்கெதிரான மந்திர வசியம்.

IV. 37. ராட்சசர்கள், அப்சரசுகள், கந்தர்வர்கள் ஆகியோரை விரட்டுவதற்கு அகசிருங்கி செடியினால் மந்திர வசியம்.

II. 9. நோய் தரும் பிசாசுகள் பிடித்திருப்பதை விரட்டுவதற்குப் பத்துவிதமான மரக்கட்டைகளைக் கொண்ட தாயத்து.

IV.36. நோய்க்குக் காரணம் என்று கருதப்படும் பிசாசுகளுக்கெதிரான மந்திர வசியம்.

II. 25. கண்வ என்ற நோய்க்குக் காரணமாகக் கருதப்படும் பிசாசுக்கெதிராக பிரிசினிப்பரணி என்ற செடியினால் மந்திர வசியம்.

IV.32. ராட்சசர்களையும் பிசாசுகளையும் விரட்டுவதற்கு மந்திர வசியம்.

XIX. 34. நோய்களுக்கும் பிசாசுகளுக்கும் எதிராக கங்கிதா மரத்தினால் செய்த தாயத்துடன் மந்திர வசியம்.

XIX. 35. நோய்களுக்கும் பிசாசுகளுக்கும் எதிராகக் கங்கிதா மரத்தினால் செய்த தாயத்துடன் மந்திர வசியம்.

VI. 85. வரணா மரத்தினால் செய்த தாயத்தின் மூலம் நோய் தீர்க்கும் மந்திர வசியம்.

VI. 127. எல்லா நோய்களுக்கு மருந்தாக கிபுத்ரு மரம்.

VI.91. எல்லா நோய்களுக்கும் மருந்தாக பார்லியும் தண்ணீரும்.

VIII. எல்லா நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்துவதற்கு மந்திர சக்தியுள்ள, மருத்துவகுணம் உள்ள எல்லாச் செடிகளுக்குமான பாடல்.

VI.96. எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் செடிகள்
ii. 33. உடல் நலம் சிறப்புடன் விளங்குவதற்கு மந்திர வசியம்.
ix.8. எல்லா நோய்களிலுமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு மந்திர வசியம்.
ii. 29. நீண்ட ஆயுளும், செல்வச்செழிப்பும் பெறுவதற்கு மந்திர வசியம்.
II. நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை.
ii.11, ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை.
ii. 28. ஒரு உடலை வைத்து நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனை.
iii. 31, ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை.
vii.53. நீண்ட ஆயுளுக்குப் பிரார்த்தனை.
viii. 2. மரண அபாயங்களிலிருந்து விலக்குப் பெறுவதற்குப் பிரார்த்தனை.

V.30. நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் விலக்குப் பெறுவதற்குப் பிரார்த்தனை.

iv. 9. உயிருக்கும் உறுப்புகளுக்கும் பாதுகாப்பாகப் பயன்படும் பூச்சுக் களிம்பு.
iv. 10. முத்தையும் முத்துச்சிப்பியையும் நீண்ட ஆயுளும் செல்வமும் தரும் தாயத்துகளாகப் பயன்படுத்துதல்.
xix.26. நீண்ட ஆயுள் தரும் தாயத்தாகத் தங்கம்.
III. பிசாசுகள், மந்திரவாதிகள், எதிரிகள் ஆகியோரைச் சபித்தல்.
i.7. மந்திரவாதிகளுக்கும் பிசாசுகளுக்கும் எதிராக.
i.8. மந்திரவாதிகளுக்கும் பிசாசுகளுக்கும் எதிராக.

I.16. பிசாசுகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் எதிராகக் காரியத்தைப் பயன்படுத்தி மந்திர வசியம் .
vi.2. ராட்சசர்களுக்கெதிராக சோம் நிவேதனம்.
iii.14. ஆண்களுக்கும் கால் நடைகளுக்கும் வீட்டுக்கும் கெடுதல் செய்வதாகக் கருதப்படும் பல பெண் பிசாசுகளுக்குக்கெதிரான மந்திர வசியம்.
iii.9. விஷ்கந்தா, கபவா (என்ற பிசாசுகளுக்கு) எதிராக.
iv. 20. பிசாசுகளையும் எதிரிகளையும் காட்டிக்கொடுக்கம் சதம் பூசணா என்ற செடியினால் மந்திர வசியம்.
iv. 17. மந்திரவாதம், பிசாசுகள், எதிரிகள் ஆகியோருக்கெதிராக அபமார்கா செடியினால் மந்திர வசியம். iv. 18. மந்திரவாதம், பிசாசுகள், எதிரிகள் ஆகியோருக்கெதிராக அபமார்கா செடியினால் மந்திர வசியம்.
iv. 19. பிசாசுகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் எதிராக அபமார்கா செடியின் சக்தி.
vii. 65. சாபங்களுக்கும் பாவச் செயல்களின் விளைவுகளுக்கும் எதிராக அபமார்கா செடியினால் மந்திர வசியம்.
V.1. மந்திரங்களின் சக்தியை எதிர்க்க மந்திர வசியம்.
V. 14. மந்திரங்களின் சக்தியை எதிர்க்க மந்திர வசியம் .
V.31. மந்திரங்களின் சக்தியை எதிர்க்க மந்திர வசியம்.
viii.5 சிரக்தியா மரத்தினால் செய்யப்பட்ட தாயத்து பாதுகாப்பளிப்பதற்கான பிரார்த்தனை.
X.3. வாரணமரத்தினால் செய்யப்பட்ட தாயத்தின் சக்தியைப் புகழ்தல்.
X.6. கதிரா மரத்தினால் ஏர் வடிவில் செய்யப்பட்டதாயத்தின் புகழ்ச்சி.
ix.16. துரோகச் செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு வருணனுக்குப் பிரார்த்தனை.
ii. 12. புனிதப் பணிக்கு இடையூறு செய்யும் எதிரிகளுக்கு எதிராகச் சாபம் கொடுத்தல்.
vii.70. எதிரியின் வேள்வியைக் கெடுத்தல்.
ii. 7. சாபங்களையும் சதிகளையும் எதிர்த்து ஒரு வகைச் செடியினால் செய்யப்படும் மந்திர வசியம்.
iii.6. எதிரிகளை அழிக்கும் அரச மரம்.
vi.75. எதிரிகளை ஒடுக்குவதற்கு நைவேத்தியம்.
Vi. 37. தீங்கான மந்திரவாதம் செய்பவர்மீது சாபம்.
vii. 13. எதிரிகளைப் பலம் இழக்கச் செய்யும் மந்திர வசியம்.
IV. பெண்கள் தொடர்பான மந்திர வசியங்கள்.
ii.36. கணவனை அடைவதற்கு மந்திர வசியம்.
vi. 36. கணவனை அடைவதற்கு மந்திர வசியம்.
vi.82. மனைவியை அடைவதற்கு மந்திர வசியம்.
vi.78. தம்பதியருக்கு ஆசீர்வாதம்.

vii. 36. திருமணம் முடிந்த மணமக்கள் சொல்வதற்கான காதல் மந்திர வசியம்.
vii. 37. மணமகன் மீது மணமகள் செய்வதற்கான மந்திர வசியம் .
vi.81. கருத்தரிப்பதற்குத் தாயத்தாகக் கையில் அணியும் காப்பு.
iii. 23. புதல்வனை அடைவதற்கான மந்திர வசியம்.
vi.11. புதல்வனை அடைவதற்கான மந்திர வசியம்
vii. 35. பெண் கருத்தரிக்காமல் செய்வதற்கு மந்திரம்.
vi. 17. கருச்சிதைவைத் தடுப்பதற்கு மந்திரம்.
i.11. சுகப்பிரசவத்துக்கு மந்திர வசியம் .
i.34. பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு அதிமதுரத்தை வைத்து மந்திர வசியம்.
ii.30. பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு மந்திர வசியம்.

vi.8. பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு மந்திர வசியம்.
vi.9. பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு மந்திர வசியம்.
vi.102. பெண்ணின் அன்பைப் பெறுவதற்கு மந்திரவசியம்.

iii.25. பெண்ணின் தீவிர அன்பைப் பெறுவதற்கு மந்திர வசியம்.
vii. 38. ஆணின் தீவிர அன்பைப் பெறுவதற்கு மந்திர வசியம்.
vi.130. ஆணின் தீவிர அன்பைத் தூண்டுவதற்கு மந்திர வசியம்.
vi.132. ஆணின் தீவிர அன்பைத் தூண்டுவதற்கு மந்திர வசியம்.
iv. 5. காதல் சந்திப்பில் மந்திர வசியம்.

vi.77. விட்டுச்சென்ற பெண் திரும்புவதற்கு மந்திர வசியம்.
vi.18. பொறாமையைத் தணிப்பதற்கு மந்திர வசியம்.
i. 14. பெண் தனக்குப் போட்டியான பெண்ணுக்கு எதிராகச் சொல்லும் மந்திரம்.
iii.18. போட்டியான பெண் அல்லது சக மனைவிக்கெதிராகப் பெண் சொல்லும் மந்திர வசியம்.

vi.138. ஆணின் ஆண்மையை அழிப்பதற்கான மந்திர வசியம்.

vi.110. கெட்ட நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்குத் தோஷம் நீக்கும் மந்திர வசியம்.
vi. 140. குழந்தைக்கு முதல் இரண்டு பற்கள் ஒழுங்கின்றி முளைப்பதன் தோஷத்தை நீக்கும் மந்திர வசியம்.

V. மன்னர்கள் தொடர்பான மந்திர வசியங்கள்.
iv.8. மன்னனின் அபிஷேகத்தின்போது சொல்லும் பிரார்த்தனை.
iii. 3. நாடு கடத்தப்பட்ட மன்னன் மீண்டும் பதவி பெறுவதற்கு மந்திர வசியம்.
iii. 4. மன்னன் தேர்வின்போது சொல்லும் பிரார்த்தனை.
iv.22. மன்னன் உயர்நிலை பெறச் செய்வதற்கு மந்திர வசியம்.
iii. 5. மன்னனின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக பர்ணா மரத்திலிருந்து செய்யப்படும் தாயத்தின் புகழ்ச்சி.
i. 9. பூமியிலும் சுவர்க்கத்திலும் வெற்றி பெறுவதற்குப் பிரார்த்தனை.
Vi. 38. ஒளியும் அதிகாரமும் பெறுவதற்குப் பிரார்த்தனை.
viii.8. போரில் மந்திர வசியம்.
i.19. போரில் அம்புகளால் காயமடையாதிருக்க மந்திர வசியம்.
iii.1. போரில் எதிரி குழப்பமடையச் செய்வதற்கு மந்திர வசியம்.
iii.2. போரில் எதிரி குழப்பமடையச் செய்வதற்கு மந்திர வசியம் \
vi.97. போர் தொடங்குவதற்கு முந்திய நாளில் மன்னனின் மந்திர வசியம்.
vi.99. போர் தொடங்குவதற்கு முந்திய நாளில் மன்னனின் மந்திர வசியம்.
vi.9. போரில் உதவுமாறு அர்புதிக்கும் நியர்புதிக்கும் பிரார்த்தனை.
vi.10. போரில் உதவுமாறு திரிஷம்திக்குப் பிரார்த்தனை.
vi.20. போர் முரசுக்குப் பாடல்
vii.21. எதிரிக்கு அச்சமளிக்கும் போர் முரசுக்குப் பாடும் பாடல்.

VI. சபையில் இணக்கமும் செல்வாக்கும் பெறுவதற்கான மந்திர வசியங்கள்.
III. 30. இணக்கம் பெறுவதற்கு மந்திர வசியம்.

VI. 73. பிணக்கைத் தணிப்பதற்கு மந்திர வசியம்.

VI.74. பிணக்கைத் தணிப்பதற்கு மந்திர வசியம்.

VII.52. பூசலும் இரத்தம் சிந்தலும் ஏற்படாமலிருக்க மந்திர வசியம்.

vi.64. பிணக்கைத் தணிப்பதற்கு மந்திர வசியம்.
vi. 42. சினத்தைத் தணிப்பதற்கு மந்திர வசியம்.
vi.43. சினத்தைத் தணிப்பதற்கு மந்திர வசியம்.
vii.12. சபையில் செல்வாக்குப் பெறுவதற்கு மந்திர வசியம்.
ii.27. வாதத்தில் எதிரிகளை வெல்லுவதற்குப் படா செடியினால் மந்திர வசியம் .
VI.94. தனது விருப்பத்துக்குப் பிறரைப் பணிய வைக்கும் மந்திர வசியம்.
VII. வீடு, வயல், கால்நடைகள், வணிகம், சூதாட்டம் முதலானவற்றில் செழிப்பதற்கு மந்திர வசியங்கள்.
iii.12. வீடு கட்டும்போது சொல்லும் பிரார்த்தனை.

vi. 142. தானியம் விதைக்கும் போது ஆசீர்வாதம்.
vi.79. தானியம் பெருகுவதற்கு மந்திர வசியம்.
vi.50. வயலில் தானியங்களைத் தாக்கும் புழு, பூச்சிகளை ஒழிக்கும் மந்திரம்.
vi.11.தானியத்தை மின்னலிலிருந்து காப்பாற்றும் மந்திர வசியம்.
ii.26. கால்நடைகள் செழிப்பதற்கு மந்திர வசியம்.
iii.14. கால்நடைகள் செழிப்பதற்கு மந்திர வசியம்.
iii.28. இரட்டைக் கன்றுகள் பிறந்த தோஷம் நீங்க மந்திரம்.
vi.92. குதிரைக்கு வேகம் கொடுக்கும் மந்திர வசியம்.
iii. 13. ஆற்றைப் புதிய பாதையில் பாயச் செய்யும் மந்திர வசியம்.
Vi.106. நெருப்பு அபாயத்தைத் தடுக்கும் மந்திர வித்தை .
iv.3. விலங்குகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஆடு மேய்ப்பவனின் மந்திர வசியம்.
iii.15. வணிகனின் பிரார்த்தனை.
iv.38. சூதாட்டத்தில் வெற்றி பெறப் பிரார்த்தனை.

vii. 50. பகடை ஆட்டத்தில் வெற்றிபெறப் பிரார்த்தனை.
vi.56. வீட்டிலிருந்து பாம்புகளை வெளியேற்றும் மந்திரம்.
x.4. பாம்புகளைக் கொல்கின்ற பேடுவின் குதிரையின் சக்தியால் பாம்புகளுக்கெதிரான மந்திர வசியம்.
xi.2. அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்குப் பாவா, சர்வா ஆகியோரைக் குறித்துப் பிரார்த்தனை. iv.28. அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்குப் பாவா, சர்வா ஆகியோரைக் குறித்துப் பிரார்த்தனை.
vii.9. இழந்த பொருளைக் கண்டு பிடிப்பதற்கு மந்திர வசியம்.
Vi.128. வானிலையை முன்னறிந்து சொல்வோனைத் திருப்தி செய்தல்.

xi:6. ஆபத்திலிருந்து விடுவிப்பதற்கு எல்லாத் தெய்வங்களுக்கும் பிரார்த்தனை.
VIII. பாவத்தையும், தீட்டையும் போக்கும் மந்திர வசியங்கள்.
vi.45. மனத்தால் தவறிழைக்காமலிருக்கப் பிரார்த்தனை.
Vi. 26. தீமையைத் தடுக்கும் மந்திர வசியம்.
Vi.114. வேள்வியில் குறைபாடுகளுக்குப் பரிகார மந்திரம்.
vi.115. பாவங்களுக்குப் பரிகார மந்திரம்.
vi.112. மூத்தவன் இருக்க இளையவனுக்கு முன்னுரிமை கொடுத்ததற்குப் பரிகாரம்.
vi.113. சில கொடிய குற்றங்களுக்குப் பரிகாரம்.
vi.120. பாவங்கள் மன்னிக்கப்பட்டபின் சுவர்க்கம் அடையப் பிரார்த்தனை.
vi.27. தீய குறிகாட்டும் பறவைகளாகக் கருதப்படும் புறாக்களுக்கெதிராக மந்திர வசியம்.
vi.29. தீய குறிகாட்டும் பறவைகளாகக் கருதப்படும் புறாக்களுக்கெதிராக மந்திர வசியம்.
vi.29. தீய குறிகாட்டும் புறாக்களுக்கும் ஆந்தைகளுக்கும் எதிராக மந்திர வசியம்.
vi.64. தீய குறிகாட்டும் கறுப்புப் பறவையால் தீட்டுப்பட்டதற்குப் பரிகாரம்.
vi.46. தீய கனவுகள் வருவதை ஒழிக்க.
vii. தீய சகுனங்களை நீக்கி நல்ல சகுனங்களைப் பெறுவதற்கான மந்திர வசியம்.

இதிலிருந்து, அதர்வண வேதம், மந்திரவாதம், மாய மந்திரங்கள், மருத்துவம் ஆகியவற்றைப் பற்றிய தொகுப்பேயன்றி வேறொன்றுமில்லை என்பதைக் காணலாம். அதன் முக்கால் பகுதியில் மந்திர வாதங்களும் மாய மந்திரங்களுமே நிறைந்துள்ளன. ஆனால் அதர்வண வேதத்தில் மட்டும்தான் இவை உள்ளன என்று கருதக்கூடாது. ருக் வேதத்திலும் இவை உள்ளன. மந்திரவாதம், மாயமந்திரங்கள் தொடர்பான மந்திரங்கள் அதில் உள்ளன. இம்மாதிரியான மூன்று சூக்தங்களைக் கீழே தருகிறேன்.

சூக்தம் 17 (145)

இந்தப் பாடலின் தெய்வம் அல்லது நோக்கம், போட்டியான ஒரு மனைவியை ஒழிப்பதாகும்; இதன் ரிஷி இந்திராணி, பாடலின் கடைசி சுலோகம் பங்கதி சந்தத்திலும், மற்ற சுலோகங்கள் அனுஷ்டூப் சந்தத்திலும் அமைந்துள்ளன.

1. மிகவும் சக்திவாய்ந்த இந்த மூலிகைக் கொடியை நான் தோண்டி எடுக்கிறேன்; இதன் மூலம் (ஒரு மனைவி) தனக்குப் போட்டியான மனைவியை அழித்து, தனது கணவனைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்கிறாள்.

2. ஓ, செடியே, மேல் நோக்கிய இலைகள் கொண்ட மங்களமான செடியே, தேவர்களால் அனுப்பப்பட்ட சக்திவாய்ந்த செடியே, எனக்குப் போட்டியானவளை நீக்கிவிட்டு, என் கணவனை எனக்கு மட்டும் உரிமையாக்கு.

3. சிறப்பு வாய்ந்த (செடியே), நானும் சிறந்தவர்களில் சிறந்தவளாக இருப்பேனாகவும்: எனக்குப் போட்டியாயிருப்பவள் கேடானவர்களிலும் கேடானவளாக இருப்பாளாகவும்.

4. நான் அவள் பெயரைக்கூடச் சொல்ல மாட்டேன்; அவளை எந்த ஒரு பெண்ணுக்கும்) பிடிக்காது; அந்தப் போட்டி மனைவியை நாம் தொலைதூரத்துக்கு அகற்றி விடுவோமாக.

5. நான் வெல்லுகிறேன்; நீ வெல்லுகிறாய்; நாம் இருவரும் பலம் பெற்றிருப்பதால் எனக்குப் போட்டியானவளை வெல்லுவோம்.

6. வெல்லுகின்ற (மூலிகையான) உன்னை நான் தலையணையாக்கிக் கொள்கிறேன். மேலும் வெற்றியுள்ள அந்தத் தலையணையை நான் உனக்கு ஆதரவாக்குகிறேன்; உன் மனம் என்னை நோக்கி, பசுவிடம் கன்று விரைவது போல், விரையுமாக; அது தண்ணீரைப்போல் விரைந்தோடி வருமாக.

சூக்தம் 4 (155)

சுலோகங்கள் 1 மற்றும் 4 ஆகியவற்றின் தெய்வம், துரதிர்ஷ்டத்தைத் தடுப்பது (அலஷ்மிக்னா) ஆகும். சுலோகங்கள் 2 மற்றும் 3 ஆகியவற்றின் தெய்வம் பிராம்மணஸ்பதியும், சுலோகம் 5- இன் தெய்வம் விஸ்வதேவசும் ஆகும். இதன் ரிஷி பரத்வாஜரின் மகனான சிரிம்பிதர் ஆவார். இதன் சந்தம் அனுஷ்டூப்.

1. பரிதாபமான அதிர்ஷ்டமற்ற, உறுப்புகள் கோணலான, பிதற்றிக் கொண்டிருக்கும் (தேவதையே), உன் மலைக்குப் போய் விடு, சிரிம்பிதரின் இந்த வீரச்செய்லகளால் நாங்கள் உன்னை அச்சுறுத்தி ஓட்டுகிறோம்.

2. கருக்களையெல்லாம் அழிப்பவளான இவள் இந்த (உலகிலிருந்து) விரட்டப்படுவாளாக; அடுத்த (உலகிலிருந்து) விரட்டப்படுவாளாக; கூர்மையான கொம்பை உடைய பிரகஸ்பதி நெருங்கிவந்து அந்தத் துன்பத்தை விரட்டி விடு.

3. மனிதர்களிடமிருந்து தொலைதூரத்தில் கடலோரத்தில் மிதக்கும் கட்டையைப் பிடித்துக் கொண்டு (ஓ, தேவதையே) தூரமான கடற்கரைக்குப் போய்விடு.

4. கடூரமான ஒலிகளை உச்சரிப்பவர்கள் விரைந்து செல்லும்போது நீ புறப்பட்டுச் சென்றாய், இந்திரனின் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள், குமிழிகளைப் போல் மறைந்து விட்டார்கள்.

5. இவற்றை, (திருடப்பட்ட) கால்நடைகளை, (விஸ்வதேவஸ்) திரும்பக் கொண்டு வந்து விட்டார்; அவர்கள் நெருப்பு வளர்த்திருக்கிறார்கள்; அவர்கள் தேவர்களுக்கு உணவு படைத்திருக்கிறார்கள்; அவர்களை யார் வெல்வார்கள்?

சூக்தம் 12 (163)

இதன் தெய்வம் காச நோய் ஆகும், ரிஷி, காஸ்யபரின் மகனான விவ்ரிகள்; சந்தம் அனுஷ்டூப்.

1. நான் நோயை உன்னுடைய கண்களிலிருந்து, உன் தலையிலிருந்து, உன் மூக்கிலிருந்து, காதுகளிலிருந்து, முகவாயிலிருந்து, மூளையிலிருந்து, நாக்கிலிருந்து வெளியேற்றுகிறேன்.

2. நான் நோயை உன்னுடைய கழுத்திலிருந்து, தசைநார்களிலிருந்து, எலும்புகளிலிருந்து, மூட்டுக்களிலிருந்து மேல் புயங்களிலிருந்து, தோள்களிலிருந்து, முன் கைகளிலிருந்து வெளியேற்றுகிறேன்.

3. நான் நோயை உன்னுடைய குடலிலிருந்து, குதத்திலிருந்து, அடிவயிற்றிலிருந்து, இருதயத்திலிருந்து, சிறுநீரகங்களிலிருந்து, கல்லீரலிலிருந்து, மற்ற உள் உறுப்புக்களிலிருந்து வெளியேற்றுகிறேன்.
4.நான் நோயை உன்னுடைய தொடைகளிலிருந்து, முழங்கால்களிலிருந்து, குதிகால்களிலிருந்து, கால்விரல்களிலிருந்து, அரையிலிருந்து, பிட்டத்திலிருந்து, அந்தரங்க உறுப்பிலிருந்து வெளியேற்றுகிறேன்.

5. நான் நோயை உன்னுடைய சிறுநீர்க் குழாயிலிருந்து, சிறுநீர்ப்பையிலிருந்து, உரோமங்களிலிருந்து, நகங்களிலிருந்து, உடல் முழுவதிலுமிருந்து வெளியேற்றுகிறேன்.

6. நான் நோயை ஒவ்வொரு உறுப்பிலிருந்தும், ஒவ்வொரு உரோமத்திலிருந்தும், அது உருவாகின்ற ஒவ்வொரு மூட்டிலிருந்தும், உன் உடல் முழுவதிலுமிருந்தும் வெளியேற்றுகிறேன்.

வேதங்களில் ஆன்மிக ரீதியிலோ அறநெறி ரீதியிலோ மனிதனை உயர்த்தும் பண்பு உள்ளவையாக ஒன்றும் இல்லை என்று காட்டுவதற்குப் போதுமான உதாரணங்களைப் பார்த்துவிட்டோம். வேதங்களில் கூறப்படும் பொருள்களோ அவற்றின் உள்ளடக்கமோ, வேதங்கள் பொய்யாதவை என்று அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமைக்குத் தகுந்தவையாக இல்லை. அப்படியானால் பிராமணர்கள், வேதங்கள் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் தோன்றச் செய்வதற்கு ஏன் அவ்வளவு கடினமாகப் போராடினார்கள்?

நன்றி: pasccanada.wordpress.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here