சைவ மடங்களும் பட்டினப்பிரவேசமும்: நிலவுடமைச் சமூக ஒடுக்குமுறையின்சொச்சமிச்சங்கள்!

நிலவரி வசூல் அதிகாரிகளாக தோற்றம் பெற்ற ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் நிலங்கள் எடுக்கப்பட்டு விட்டன. ஆனால் ஆன்மீக ஜமீன்தார்களாக வலம் வரும் மடாதிபதிகள் தொடர்ந்து இருக்கின்றனர்.

0

பகுதி:1

தொடர்ச்சி…

1961– காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டம், அதன் பிறகு கொண்டுவரப்பட்ட திராவிட கட்சிகளின் நிலச் சீர்திருத்த சட்டம் ஆகியவை நிலக்குவியல் குறித்து விதிவிலக்கு கொடுத்து, மடங்களைக் காப்பாற்றி விட்டன.

மடங்களின் நிலங்களை குத்தகைக்கு வைத்து விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் இன்றளவும் ஆன்மீக ஜமீன்தார்களின் அவர்களுக்கு கட்டுப்பட்டு அரை அடிமை தனத்தோடு நடந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் வங்கிகளில் இருந்து பெரிய கடன்களை பெற்று விட முடியாது. நில உடைமையாளர்களாக இருக்கும் கோயில்களும், மடங்களும், குத்தகை விவசாயிகளை கேட்காமலே, பெரிய தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு விவசாய பகுதிகளை நிறுவனங்களுக்கு கொடுத்து விடுகின்றன. எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் மடங்களோடு ஒப்பந்தம் போட்டு நாசகார திட்டங்களுக்கு எளிதாக நிலப்பகுதியை பெற்றுவிடுகின்றன.

கோயில் நிலம் பற்றிய துல்லியமான விபரத்தை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடவில்லை. கோயில்கள், மடங்கள், டிரஸ்ட்டுகள் ஆகியவை காவிரிப்படுகையில் பெருமளவு நிலத்தைக் கையில் வைத்துள்ளன. பண்ணையார் தனமும் அடிமைத்தனமும் இன்றளவும் தொடர்கின்றன.

சமத்துவ சமூகம் உருவாவதற்கு நிலக்குவியல் என்பது பெரும் தடையாக இருந்து வருகிறது. கோயில் மற்றும் மடங்களில் நிலங்களை வைத்து சாகுபடி செய்யக் கூடியவர்கள் கட்டாயமாக சமூக, சாதிய கட்டமைப்புக்குள் பணிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நிலம் சாதிய கட்டமைப்புடன் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கிறது. நிலவுடைமைச்சாதி என்பது உயர் சாதியாகவும், நிலமற்ற சாதிகள் தாழ்ந்த சாதிகளாகவும் வரலாறு முழுவதும் இருந்து வருகின்றன. சாதியத்தை இன்றளவும் நிலம் என்பது காப்பாற்றி வருகிறது. வரலாற்று வழி தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றளவும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் ஆகவே இருந்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் என்போர் 19.18% இவர்களுடைய நிலவுடமை என்பது மொத்தத்தில் 7.1 % பார்ப்பனியத்தின் நிலைக்களனாக இந்த நிலஉடமைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சமூகத்தில் ஏற்பட்ட சீர்திருத்த மாற்றங்கள் மடங்களையும் பாதித்துள்ளன. சில சீர்திருத்தங்கள் இயல்பாகவே மடங்களில் நிகழ்ந்துள்ளன. முன்பு இருந்த பெரும் கெடுபிடிகள் குறைந்துள்ளன. கடந்த காலத்தில் தருமபுரம் உள்ளிட்ட மடங்களில் “தண்டனை மரங்கள்” இருந்தன. தண்டனை மரம் என்பது ஒரு பெரிய தூண். குத்தகை செலுத்தாதவர்கள், பண்ணையார் பார்வையில் பிற குற்றங்கள் செய்தவர்கள் அல்லது சாதிய ரீதியில் குற்றமிழைத்தவர்களை அதில் கட்டி வைத்து முப்புரி சாட்டை அல்லது 5 பிரி சாட்டைகளின் மூலமாக அடித்து, அவர்களைத் தண்டிக்கும் முறை. தசைகளை பிய்த்து எடுக்கக் கூடிய அந்த முறை கடந்த 90 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. இப்போது வயதாகி இருக்கக்கூடிய பலர் சிறுவர்களாக இருக்கும்போது அந்த தண்டனை மரத்தைக் கண்ணால் கண்டவர்கள் தான். இப்போது மடங்களில் தண்டனை மரங்கள் இல்லை. காலம் மாறி இருக்கிறது. சாணிப்பால், சாட்டையடி போன்ற கொடுமைகள் தனி நிலவுடைமையாளர்கள் மட்டும் நடைமுறைப்படுத்திய ஒன்று அல்ல. ஆதீனங்களும் நடைமுறைப்படுத்திய கொடுமைதான். இதிலிருந்துதான் இன்றைய தமிழ்ச்சமூகம் விடுபட்டிருக்கிறது. இன்னமும் விடுபட வேண்டிய நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையின் சொச்ச மிச்சங்கள் இருக்கின்றன. அந்தப் பழைய அதிகாரத்தின் குறியீடாகத்தான் பல்லக்கில் ஆதீனகர்த்தர் அமர்ந்து வர, அதை சக மனிதர்கள் தோளில் தூக்கிக் கொண்டு வருவது. இப்படித் தூக்குவது தோள் வலிக்கும் என்பதனால் இம்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் கூறவில்லை. இன்றும் தூக்குவதற்குப் பலர் தயாராகவே இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பல இலாபம் இருக்கிறது தங்களை வளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, தங்கள் சாதிப் பெருமையை, சமூக கட்டமைப்பைக் காப்பாற்றிக் கொள்ளும் தங்கள் ஆசையும் அதில் நிறைவேற்றப்படும் என்பதால் அவர்கள் இதற்கு உடன் படுவார்கள்.

படிக்க:

♦ “தலித்துகளை அரவணைக்கும்”ஆர்எஸ்எஸின் சூழ்ச்சி!

ஆனால் இது, நிலவுடமைக் கட்டமைப்பு மனிதர்களை எப்படி அடிமை கொண்டிருந்தது என்பதன் எஞ்சியிருக்கும் நிகழ்காலக் குறியீடாக விளங்குகிறது. இதை நிறுத்துவதுதான் மனித இனம் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறுகிறது என்பதற்கான அடையாளமாகும்.

“இது எங்கள் பாரம்பரியம், இதை தடுக்க கூடாது” என்று கூச்சலிடுகிறார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறுவது தடுக்கப்பட்ட போது கூட இப்படித்தான் கூச்சலிட்டார்கள். சிறுமிகள் திருமணம் தடை செய்யப்பட்ட போது கூட இப்படித்தான் கூச்சலிட்டார்கள். விதவைத் திருமணம் அனுமதிக்கப்பட்ட போதும் கூச்சலிட்டார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் சாலையில் நடக்கவும் பள்ளியில் படிக்கவும் அனுமதிக்கப்பட்ட போது கூட தங்கள் பாரம்பரியம் கெட்டு போனதாக இப்படித்தான் கூச்சலிட்டார்கள். அதற்காக சமூகக் கேடுகளைத் தொடர அனுமதித்து விட முடியுமா?

இப்போதும்கூட கணவன் இறந்தவுடன் துக்கத்தில் சிதையில் ஏறி எரிந்து போக பல பெண்கள் தயாராகவே இருக்கலாம். அந்த உடன்கட்டை ஏறுவது என்பது விருப்பத்தின்பாற்பட்டது அல்ல; அது சட்டத்தால் என்று தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் முன்னேற்றம் என்பது. சமூக விடுதலையை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் பல மாற்றங்களை வரவேற்கக் கடமைப்பட்டவர்கள்.

தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டு பல மடங்களை வைத்துக்கொண்டு அதன் வளங்களை துய்த்துக்கொண்டு, பட்டாடைகளை உடுத்திக்கொண்டு, ஆதீனங்கள் ஐ சூழ்ந்துகொண்டு வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு கோபம் கோபமாக வரத்தான் செய்யும். மடங்கள் என்பவை அவர்களுடைய அதிகாரத்தின் குறியீடு. சமூக மேலாதிக்கத்தின் குறியீடு. மேல்சாதி இருப்பின், வர்ண .தர்ம -சாதியக் கட்டமைப்பின் இறுக்கமான ஒரு அடையாளம். ஆகவே பட்டினப்பிரவேசம் நடந்தாக வேண்டும்; அதுவும் மனிதன் முதுகில் ஏறித்தான் நடந்தாக வேண்டும் என்று கூச்சல் போடுவார்கள். பட்டினப்பிரவேசம் நடத்த வேண்டும்; நாங்கள் எங்கள் தோளில் தூக்கி சுமக்கிறோம் என்று கூறுகிறவர்கள் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாக, சமூக மேலாதிக்கம் செய்பவர்களாக, உயர் சாதிக்காரர்களாக, நிலவுடைமையாளர்களாக, மடங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து வாழ்பவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.

திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், திருவையாறு மடம், வேலக்குறிச்சி மடம், துழாவூர் மடம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மயிலம் பொம்மபுர ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகியவை அனைத்தும் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே ஆதீனகர்த்தர் ஆக வர முடியும். தங்கள் சாதி நலன், சமூக மேலாதிக்கப் பாதுகாப்பு ஆகியவையும், இந்த மடங்களின் இருப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆகவே சிறிய சீர்திருத்தங்களை கோரினால் கூட குறிப்பிட்ட சாதியினருக்கும், மடத்தை நத்தி வாழ்பவர்களுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருவது இயல்பானது. இதேநிலைதான் வைணவ மடங்களுக்கும். வடகலை தென்கலை ஐயங்கார்களின் கட்டுப்பாட்டில் உள்ளவை. அவர்கள் மட்டுமே மடாதிபதியாக வரமுடியும். சங்கரமடத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே மதத் தலைவர்களாக வர முடியும்.

 

ஆன்மீக பிரபுக்கள் (Spiritual Lords)என்று ஐரோப்பாவிலே பவனி வந்தவர்கள், 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியோடு காணாமல் போனார்கள். நிலப்பிரபுத்துவம் மறைந்தபோது ஆன்மீக பிரபுக்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அதுதான் புரட்சி என்பது. அத்தகைய ஒரு புரட்சியிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். இன்றைய ஆதீனகர்த்தர் இருப்பதுபோல் எதிர்காலத்தில் ஆதீனகர்த்தர் இருப்பார்; ஆனால் அவருக்கு அரசு சம்பளம் வழங்கும். அவர்கள் தமிழையும் சைவத்தையும் வளர்க்கும் பணியைப் பார்க்கலாம். இந்த நிலவுடமை என்பது அப்போது இருக்காது. உழுபவனுக்கு நிலம் பங்கிட்டுத் தரப்படும். பழமையில் ஊறிப்போன சீன சமூகத்திலும் ரஷ்ய சமூகத்தில் மாற்றங்கள் வந்ததென்றால் திர சமூகங்கள் விதிவிலக்காக இருக்குமா? புரட்சிகர மாற்றங்களை ஒத்திப் போடலாம்; நிறுத்திவிட முடியாது.

சைவம் வைணவம் ஆகியவை தமிழ்ச் சமயங்கள் என்று பேசப்படுகின்றன. ஆனால் சைவமும் வைணவமும் பார்ப்பனியத்தின் வடிவங்களாகவே நிலவுகின்றன. சைவம், வைணவம் ஆகியவை ஆரிய வைதீக மேலாண்மைக்கு உட்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் 24 சமயங்கள் தமிழ் நிலப்பரப்பில் இருந்தன. இந்த மண்ணில் மதவெறி புதிதல்ல. ஆழ்வார்களும், நாயன்மார்களும் பிற சமயத்தவர்களைக் கொடுமை செய்யத் தயங்கியதில்லை. சைவமும், வைணவமும் பவுத்த – சமண சமயங்களுக்கு என்ன செய்தனவோ, அதைத்தான் இன்று இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமியர்களுக்குச் செய்கிறது.

சைவம் – வைணவம் ஆகியவை வைதீகத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு, இந்துமதம் என்ற பெயரில் நடைபோடுகிறது. சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டு செய்கிறோம் என்று மார்தட்டுகிறவர்கள் முதலில் எதிர்க்க வேண்டியது இந்து என்ற பெயரை. இந்து மதத்திலிருந்து சைவத்தையும் வைணவத்தையும் விடுவிப்பதே சைவத் தொண்டு என்பதை மடாதிபதிகளும் சைவப் பெரியார்களும் உணரவேண்டும். அடுத்த நிலையாக, வைதீகத்திலிருந்து சைவ- வைணவத்தை இவர்கள் விடுவித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இன்றி, இந்து மதம் என்ற பெயரில் வைதீகத்துக்குப் பக்க வாத்தியம் வாசிப்பது, சைவத் தொண்டு ஆகாது என்பதை மடாதிபதிகள் உணரவேண்டும்.

ஜனநாயகம் என்பது ஓர் அரசியல் சொல் மட்டுமல்ல; அது சமூகத்திற்கும் பொருத்தப்பட வேண்டிய ஒன்றுதான். சமூக ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். சமூக ஒடுக்குமுறைக்குக் காரணமான, பாரம்பரியம் என்ற பெயரில் நிலவிவந்த எத்தனையோ கூறுகள் பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன. பல கூறுகள் இன்னமும் தூக்கி எறியப்பட இருக்கின்றன. அதில் ஒன்று தான் மனிதனை மனிதன் சுமக்கும் “பட்டினப்பிரவேசம்”!

நிலவரி வசூல் அதிகாரிகளாக தோற்றம் பெற்ற ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் நிலங்கள் எடுக்கப்பட்டு விட்டன. ஆனால் ஆன்மீக ஜமீன்தார்களாக வலம் வரும் மடாதிபதிகள் தொடர்ந்து இருக்கின்றனர். ஒரு மரியாதையின் அடையாளமாகவே கை வைக்காமல் மடங்கள் விட்டு வைக்கப்பட்டன. ஆன்மீக ஜமீன்தார்களாகிய ஆதீனகர்த்தர்களின் பட்டினப்பிரவேசம் நடப்பதாக இருந்தால், அவர்கள் நடந்து செல்லட்டும், காரில் செல்லட்டும்; அடுத்தவர் தோள் மீதுதான் ஏறிச்செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடாது.

கைவிடப்பட வேண்டிய பட்டினப் பிரதேசத்தை ஆதீனகர்த்தர் தாமே முன்வந்து கைவிட்டால் அது பெருமைக்குரியது. அவ்வாறின்றி அதைத் தொடர்வது என்று முயற்சித்தால், எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்கள் அதைக் கைவிடச் செய்யும். ஆதீனகர்த்தர்கள் தங்கள் உயர் நிலைக்கு ஏற்ப பெருமைக்குரிய செயலைத்தான் செய்ய வேண்டும்!

பேராசிரியர் த.செயராமன்,
நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்,
04.05.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here