பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ் மண் தன்னுரிமை இயக்கம்.  அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை அவசியம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடுகிறோம்.

டத்தப்படும் வாதப்பிரதிவாதங்கள் நமக்கு வியப்பைத் தருகின்றன!

மே- 2ஆம் தேதி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தர் பல்லக்கில் அமர்ந்து கொண்டு, சக மனிதர்கள் தூக்கிச் சுமக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். பட்டினப் பிரவேசத்திற்குத் தடையில்லை. ஆனால் மனிதனை மனிதர்களே தூக்கிச் சுமப்பதற்கு மட்டுமே இந்தத் தடை.

வரும் மே 22ஆம் தேதி தருமபுர ஆதீன கர்த்தரின் பட்டினப்பிரவேசம் நடைபெற இருக்கிறது என்றார்கள்.. இதை எதிர்த்து மனு அளித்த நிலையில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ,மே 2ஆம் தேதி பட்டினப்பிரவேசத்திற்குத் தடை உத்தரவை பிறப்பித்தார்.

தருமபுரம் ஆதீனம்

மதுரை ஆதீனம் தமிழக அரசு நடவடிக்கை சமய சடங்குகளில் தலையிடுவதாகும் என்றும், தன் உயிரே போனாலும் பரவாயில்லை தருமபுர ஆதீன கர்த்தரின் பட்டனப் பிரவேசத்தைத் தானே பல்லக்கு தூக்கி நடத்துவேன் என்று அறிவிக்கிறார். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தானே பல்லக்கை சுமந்து எப்படியும் பட்டினப்பிரவேசத்தை நடத்தியே தீருவோம் என்கிறார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இதிலும் அரசியல் செய்கிறார் என்று கருதலாம். ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேசம் பாரம்பரியமாக நடப்பது என்றும், அவர்களுக்குச் சொந்தமான இடத்தில்தான் பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது என்றும் கூறி, கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிற, பழைய வர்ணாசிரம கட்டமைப்பை மீண்டும் உறுதி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவருமே இந்த பட்டினபிரவேசத்தை நடத்திவிட வேண்டும் என்கிறார்கள். வர்ணாசிரம -சாதி ஒழிப்பு மற்றும் ஜனநாயக உரிமைப் பாதுகாப்பில் நாட்டம் கொண்டவர்கள் பட்டினப் பிரவேசத்தை எதிர்க்கிறார்கள். இது போதாதென்று தருமபுரத்தைச் சுற்றியுள்ள கிராமவாசிகளை ஆதீன கையாட்கள் உசுப்பி விட்டு, பட்டினப்பிரவேசத்தை தடை செய்யக்கூடாது என்றும், ஆதீனகர்த்தர் கடவுளுக்கு சமம் என்றும், அவரைத் தாங்கள் தூக்கி சுமப்போம் என்றும், பட்டினப்பிரவேசம் நடைபெறவேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கையாட்களை தூண்டிவிட்டு போராட்டம்

26 -வது ஆதீனகர்த்தர் சீர் வளர் சீர் சண்முக தேசிக ஞானசம்பந்தர் பட்டினப்பிரவேசம் செய்யவில்லை. 2019 டிசம்பர் 4ஆம் நாள் அவர் இறந்தார். டிசம்பர் 13ஆம் நாள் 27-வது ஆதீனகர்த்தராக பொறுப்பேற்ற சீர் வளர் சீர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் அன்றைக்கே பட்டினப்பிரவேசம் செய்தார். இதற்கு முன்பு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தருமபுர ஆதீன கர்த்தர் பட்டினப்பிரவேசம் செய்வதைக் கைவிட்டார். இப்போது அது புத்துயிர் அளிக்கப்படுகிறது. 2021 திருவாவடுதுறையில் எதிர்ப்பையும் மீறி பட்டினப்பிரவேசம் நடந்தது. இதற்கிடையில் மதுரை ஆதீனகர்த்தர் தானே தருமபுர ஆதீன கர்த்தரின் பல்லக்கை சுமப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ்நாடு அரசு இதுகுறித்து இனி பேசி நல்ல முடிவு முடிவெடுக்கும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குறிப்பிடுகிறார்.

இப் பட்டின பிரதேசம் ஒரு சடங்குதான் தனிப்பட்ட முறையில் நடக்கிறது ஆதீனத்திற்கு உட்பட்ட பகுதியிலேயே குறைந்த தூரத்திற்கு தான் நடத்தப்படுகிறது; ஒரு குருவை சிஷ்யர்கள் தூக்கி சுமப்பது போன்றது – என்றெல்லாம் பட்டிணப்பிரவேசத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

பட்டினப் பிரவேசத்தின் மீது தடையை எதிர்த்து பலர் எழுதியிருக்கிறார்கள்; பேசித் தீர்க்கிறார்கள்; ஆத்திரப் படுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் பாரம்பரியம் என்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றினால் இப்போதும் கைவிட முடியாதா?

இத்தகைய எதிர்ப்புகள் புதிதானவை அல்ல .கடந்த காலத்தில் உடன்கட்டை ஏற்றுவது நிறுத்தப்பட்ட போதும், ஒரு தார மணம் என்பது வலியுறுத்தப்பட்ட போதும், தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட போதும் இப்படித்தான் எதிர்த்தார்கள்.

உடன்கட்டை ஏறுதல்

ஆதீனகர்த்தர்கள் தங்களை மிகவும் மாற்றிக்கொண்டு, நவீனகால சுகபோகங்களை, வசதி வாய்ப்புகளை அனுபவிக்கிற வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் பழைய மேலாதிக்கத்தையும், சமூக ஒடுக்குமுறையின் குறியீடாக விளங்கும் பெருமையையும் கைவிடத் தயாரில்லை. மடாதிபதிகளை பல்லக்கில் வைத்து சகமனிதர்கள் தோளில் தூக்கி வருவதைக் கைவிட மறுப்பது சரியானதுதானா?

தருமபுரம், திருவாவடுதுறை உள்ளிட்ட மடங்கள் கி பி 16- ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டன. சைவ மதத்தைப் பரப்ப இவை உருவாக்கப்பட்டன. சைவத்தை பரப்புவதற்காக தேவார, திருவாசக நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள். அவர்களுடைய சைவம் பரப்பும் வேலைகளில், துணை விளைவாக தமிழ்மொழி ஆதரவும் அமைந்தது.

இதுவரை தருமபுரம் ஆதீனத்தில் 27 ஆதீனகர்த்தர்கள் பதவி ஏற்று இருக்கிறார்கள். 2019 இல் 26- வது குருமகாசன்னிதானம் இறப்புக்குப் பிறகு, தற்போது வளர் சீர் வளர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பதவியேற்றுள்ளார். தருமபுர ஆதீனத்திற்கு சைவத்தையும் தமிழையும் வளர்த்ததாக பாராட்டுதல்கள் உண்டு.

கடந்த காலத்தில் ஆன்மீகத் தலைவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்போது அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. பல்வேறு மட்டங்களில் துறவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். மிகப்பெரிய செல்வந்த வாழ்க்கையும் வாழ்ந்திருக்கிறார்கள். முன்பு பயண வசதிகள் இல்லாத காலத்தில் நடந்தோ அல்லது மனிதர்கள் சுமக்கும் பல்லக்கிலோ பயணம் செய்த ஆன்மீகத் தலைவர்கள், இப்போது கார், ஹெலிகாப்டர், ஆகாயவிமானம் என்று பறக்கிறார்கள். இவ்வளவு வசதிகள் வந்த பிறகும் பல்லக்கில் அமர்ந்து கொண்டு சகமனிதர்களை தூக்க வைப்பது ஏன்? பட்டினப்பிரவேசம் என்பது ஒரு குறியீடு. இடைக்காலத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட வர்ணாசிரம , சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய சமூக கட்டமைப்பின் ஒரு குறியீடாகவே மனிதர்கள் தூக்கி சுமக்கும் பட்டினப்பிரவேசம் இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த பாரம்பரியம் என்று இவர்கள் பேசுவார்கள். ஆனால், பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த பல சீர்கேடுகள் இப்போது களையப்பட்டு விட்டன. கணவன் இறந்தவுடன் அவன் மனைவியை சிதையிலேயே வைத்து எரிக்கும் உடன்கட்டை ஏற்றும் சதிமுறை ஒழிக்கப்பட்டு விட்டது(1829). அப்படி உடன்கட்டை ஏறி இறந்த பெண்கள் இங்கு தீப்பாய்ந்தாள் அம்மன் என்று கோயில்களில் வைத்து வணங்கப்படுகிறார்கள். பாரம்பரியம் என்ற பெயரில் உடன்கட்டை ஏறுவதை தொடர்ந்துவிடலாமா?

கடந்த காலத்தில் ஒரு சாதியிடமிருந்து எந்தெந்த சாதி எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டு இருந்தது. இன்று அது மாற்றப்பட்டிருக்கிறது. அதுதான் மரபு என்று கூறி மீண்டும் சாதிகள் நிற்க வேண்டிய தூரத்தை அனுசரிக்க தொடங்கலாமா?

கோயில்களில் கருவறைக்குள் திரு உருவச் சிலையை தொடுவதற்கு உரிமை பெற்ற சாதி, கருவறைக்கு வெளியே நிற்க வேண்டிய சாதி, அர்த்த மண்டபம் வரை செல்லும் அனுமதி பெற்ற சாதி, கோபுரம் தாண்டி நுழைய உரிமை பெற்ற சாதி, கோபுரத்துக்கு வெளியே நின்று கோபுரத்தை அண்ணாந்து பார்த்து கும்பிட்டு மனநிறைவு அடைய வேண்டிய சாதி, கோயில்கள் இருக்கும் அந்த தெருக்களில் நடமாடக் கூடாத சாதி என்றெல்லாம் இருந்தன. இந்தப் பாகுபாடுகள் கூட பாரம்பரியம் தான். பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் வந்திருக்கின்றன. இன்று இந்தப் பாகுபாடு ஓரளவு தகர்க்கப்பட்டு விட்டது.

தலையில் மலம் அள்ளும் பழக்கம் இன்றளவும் இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. கடந்த காலத்தில் பார்ப்பனர்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்தார்கள். தங்களுடைய மலத்தை தீண்டப்படாதார் எடுக்க வரக்கூடாது, சூத்திர சாதியினர்தான் அள்ள வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார்கள். சமூக ஒழுங்கைக் காப்பாற்றும் முயற்சியாக இதை பார்ப்பனர்கள் கருதினார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், அதன் பிறகு குடியரசு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் எவ்வளவோ திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் சாதி மேலாண்மைத் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறவர்கள் “பாரம்பரியம், பாரம்பரியம்” என்று கூப்பாடு போடுகிறார்கள்.

ஐரோப்பா ஆனாலும் சரி, இந்தியா ஆனாலும் சரி, இரு வகையான ஜமீந்தார்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இடைக்கால ஐரோப்பாவில் -இவ்வுலக பிரபுக்கள்(டெம்பொரல் லார்ட்ஸ்- Temporal Lords) என்று சொல்லக்கூடிய அதிகாரமிக்க நிலப்பிரபுக்கள், Spiritual Lords என்று சொல்லப்படும் ஆன்மீக பிரபுக்கள் இருந்தார்கள். இருவருமே நிலப்பிரபுக்கள் தான். முன்னவர் நிலம் சார்ந்து அரசியல், நீதி, ஆளும் அதிகாரங்களைக் கொண்டவர். பின்னவர், ஆன்மீக பிரபுக்கள். பெரு நிலவுடமையோடு, கற்பனைக் கெட்டா சொத்துக்களை கொண்ட மதத்தலைவர்கள். இருவகை பிரபுக்களின் வாழ்நிலையில், தகுதியில் பெருத்த மாற்றம் இல்லை.

அதே போன்று தான் இங்கு கோயில்களும் மடங்களும் ஏராளமான நிலத்தை குவித்து வைத்துள்ளன. கடந்த காலத்தில் பெருநில உடமைகளை கொண்டிருந்த ஜமீன்தார்களின் உரிமைகள் எடுக்கப்பட்டன ஆனால் “ஆன்மீக ஜமீன்தார்கள்” ஆன மடத் தலைவர்களின் நிலவுடமையும், அதையொட்டிய சமூக அதிகாரமும், அந்தஸ்தும் தொடர்கின்றன.

கடந்த காலத்தில் நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு )சட்டங்கள் நிலக் குவியலைத் தடுத்து உழைப்பாளர்களுக்கு நிலம் வழங்க முயற்சி செய்திருக்கின்றன. ஆனால் அந்த இலக்கு அடையப்படவில்லை. இந்தியாவில் சாதிகளின் இருப்புக்கும், சாதிய ஒடுக்குமுறை தொடர்வதற்கும் நிலவுடமை முக்கிய காரணமாக இருந்து வந்திருக்கிறது. சமூக பிற்போக்குத் தனத்திற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நிலவுடமைப் பொருளாதாரம். “உழுபவனுக்கே நிலம்” என்பது இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

நிலப்பிரபுத்துவ ஒழிப்பு என்பது இலக்காக மட்டுமே இருக்கிறது. முறையான நிலச்சீர்திருத்தம் என்பது கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து, தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1960- 70களில் ஓரளவு நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் முழுமையாக நிலக்குவிப்பு தடுக்கப்படவில்லை. நிலம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. நிலக்குவியல் உரிமையாளர்களுக்கு குத்தகைதாரர்களும், சார்ந்து வாழ்பவர்களும் விசுவாசமாக இருந்து தீர வேண்டிய கட்டாயம் இன்று வரை நிலவி வருகிறது.

பேருந்து நிலையம், மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் நிலம் கொடுத்து இருக்கிறார் என்பதற்காக, குத்தகைதாரர்கள் விசுவாசம் காட்ட வேண்டும்; பல்லக்கில் வைத்து தூக்கி சுமக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுக்கிறார்கள். சாலை அமைக்கவும், பேருந்து நிலையம் அமைக்கவும், பொது நலன் கருதி அமைக்கப்படும் திட்டங்களுக்கும், நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு உரிமை படைத்தது. ஆதீனங்கள் நிலம் கொடுப்பது என்பது அவர்களின் கருணை அடிப்படையில் அல்ல; அவ்வாறு தரவில்லை என்றால் அந்த நிலத்தைக் கைப்பற்றி கொள்ள அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

நில சீர்திருத்தத்தையும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற இலக்கையும் ஆதரிப்பதன் மூலம் தங்களைப் புரட்சியாளர்களாகக் காட்டி கொள்ளக்கூடிய பலர், ஆதீனகர்த்தர்களிடம் பம்மிப் பதுங்குவது, மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக இருப்பது, மடங்களுக்கு ஆதரவாகக் கருத்துப் பரவல் செய்வது என்பது தமிழ்நாடு முழுவதுமே இருந்துவருகிறது. அவர்கள் புரட்சி வேடம் அணிகிறார்கள்; சனநாயகப் போர்வை போர்த்தி கொள்கிறார்கள். ஆனால் நிலபிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

நில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. மாநிலவாரியாக நிலப்பங்கீடு குறித்து ஆய்வுசெய்ய மிஸ்ஸவுரி யில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமி உள்ளது. அது மாநிலம் வாரியாக நிலப் பகிர்வு பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டுள்ளது. “தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம்: முடிவடையாத கடமை” என்று தலைப்பிட்டு 2003 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

கேரளா மற்றும் மேற்கு வங்கத்திற்கு அடுத்ததாக நிலக்குவிப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட மூன்றாவது இந்திய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. உழுபவனுக்கே நிலம் என்பதை தமிழக அரசியல் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. 1936 முதல் தமிழ்நாடு நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகிறது. 1961இல் தமிழ்நாடு நில சீர்திருத்தம் (நில உச்சவரம்பு) சட்டம் வந்தது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று நிர்ணயித்தது. 1970 இல் இது மேலும் திருத்தப்பட்டு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்பது 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் இச்சட்டம் 1972 இல் மீண்டும் திருத்தப்பட்டது. நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து தப்பிக்க பினாமிகள் பெயரில் நிலங்கள் பதுக்கப்பட்டன. 1988-இல் பினாமி மாற்று தடுப்புச் சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது.

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழ் 8,952 கோயில்கள் உள்ளன. இவையன்றி வெளியில் 1568 கோயில்கள் இருக்கின்றன. மொத்தம் 10,520 பெருங்கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பெரும்பான்மையானவை பெரு நிலவுடமை கொண்டுள்ளன.
பழைய தஞ்சை மாவட்டத்தில் (நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை என்ற நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பழைய தஞ்சை மாவட்டத்தில்) மூன்றில் ஒரு பங்கு சாகுபடி நிலம் கோயில்களிடமும், மடங்களிடமும் உள்ளன. மொத்த சாகுபடி நிலத்தில் பாதி மட்டுமே கோயில் மற்றும் மடம் தவிர்த்து, சிறு நில உடைமையாளர்களிடம் உள்ளன. மதத்தின் பெயரால் மிகப்பெரிய நிலக்குவிப்பு, நிலவுடமை நடைமுறையில் இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையில் வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்திய ஜமீன்தார்களைப் போலவே, மடாதிபதிகள் “ஆன்மீக ஜமீன்தார்கள்” ஆக இருக்கிறார்கள். ஆங்கிலேய அரசால் நியமனம் பெற்ற ஜமீந்தார்களுடைய நிலத்தை பறிமுதல் செய்து விட்ட நிலையில், ஆன்மீக ஜமீன்தார்கள் திரு நிலவுடைமைக்காரர்களாகத் தொடரக் கூடியநிலை இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு சாகுபடி நிலம் கோயில்களிடமும், மடங்களிடமும் இருக்கின்றன. மொத்த சாகுபடி நிலத்தில் பாதி மட்டுமே சிறு நிலவுடைமையாளர்களிடம் உள்ளது. ஆன்மீக ஜமீன்தார்கள் ஆக இன்றளவும் ஆதீனகர்த்தர்கள் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு நில சீர்திருத்தச் சட்டம் நிலக்குவிப்புப் பிரச்சினையை இங்கு சரி செய்யத் தவறி இருக்கிறது. தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் ஆன்மீக ஜமீன்தார்களும், கோயில்களுக்கும் விதிவிலக்கு அளித்து விட்டது. மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டங்கள் கோயில், மடங்கள் ஆகியவற்றுக்குச் சட்ட உச்சவரம்பை கொண்டுவந்தன.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here