குன்றக்குடி மடாதிபதியாகப் பொறுப்பேற்ற தெய்வசிகாமணி அருணாசல தேசிகப் பரமாச்சாரியார் என்கிற குன்றக்குடி அடிகளார் 1953ஆம் ஆண்டிலேயே பட்டணப் பிரவேசம் செய்வதை நிராகரித்தார். அதாவது, பல்லக்கில் ஊரை வலம் வருவதை அவர் நிராகரித்தார்.

அவர் ஒரு சமயம், காரைக்குடி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்க சென்று கொண்டிருந்தபோது, அவர் சென்ற கார் பழுதாகி நின்றுவிட்டது. உடனே, அருகில் இருந்த சைக்கிள் கடையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு விழாவுக்கு வந்து விட்டார். இவர் சைக்கிளில் வந்ததைப் பார்த்து விழாக் குழுவினர் பதறிப்போய், சொல்லி அனுப்பி இருந்தால் காரை அனுப்பி இருப்போமல்லவா என்றனர். “மனிதன் தனது கடமையைச் செய்வதில் தான் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அந்தஸ்தை பார்க்கக்கூடாது.

ஆகவே சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு வந்தேன். இதில் என்ன மரியாதைக் குறைவு. மடாதிபதிக்கு கை, கால்களைக் கடவுள் எதற்காகக் கொடுத்தார். கடமை செய்யத்தானே! பிறகு என்ன பல்லக்குத் தூக்குகிறவன் மட்டும் மனிதன் இல்லையா” என்று கேட்டவர் அவர்.

திருக்குறளில் சிவிகை தூக்குவது பற்றி வருகிறது. இதற்கு உரை எழுதிய குன்றக்குடி அடிகளார், அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர்கள் துன்புறுத்தலை அதுவும் தமக்காகத் துன்புறுத்தலை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று உரை எழுதினார்

அறன் வலியுறுத்தல் (37வது பாட்டு) என்ற தலைப்பில் உள்ள திருக்குறளில் சிவிகை தூக்குவது பற்றி வருகிறது. இதற்கு உரை எழுதிய குன்றக்குடி அடிகளார், அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர்கள் துன்புறுத்தலை அதுவும் தமக்காகத் துன்புறுத்தலை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று உரை எழுதினார்.

1969இல் சட்ட மேலவை உறுப்பினராக குன்றக்குடி அடிகளார் இருந்த கால கட்டத்தில்தான், 1973இல் மனிதர்களை மனிதர்களே சுமக்கும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் கை ரிக்ஷாக்களை ஒழிக்கும் திட்டத்தை கருணாநிதி நிறைவேற்றினார்.

38ஆம் பட்டம் பெரிய ஆறுமுக தேசிகர் காலத்தில் ஆறுமுக நாவலர் குன்றக்குடி வந்து சைவ சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஆறுமுக நாவலரை கௌரவிக்கும் வகையில் அவருக்காக பல்லக்கு செய்து அவரை பட்டண பிரவேசம் செய்த வைத்த நிகழ்ச்சி குறித்து ஊரன் அடிகள் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

உ.வே.சாமிநாதைய்யர் என் சரித்திரம் புத்தகத்தில் அந்தக் காலத்தில் பட்டண பிரவேசம் எப்படி நடந்தது என்பதை விளக்கி இருக்கிறார். அதுபோல, பல்லக்குப் பயணம் குறித்த முக்கியப் பதிவுகள் பல உண்டு.

திருஞான சம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பரை சந்திக்கப் பல்லக்கில் புறப்பட்டார். அவர் வருகையைக் கேள்விப்பட்ட அப்பர், திருப்பூந்துருத்தி எல்லையில் எவரும் அறியாமல் சம்பந்தர் ஏறிவந்த சிவிகையைத் தூக்கி வருபவர்களோடு அவரும் சேர்ந்து கொண்டு தூக்கி வந்தார். ஊர் எல்லையை அடைந்தும் அப்பரைக் காணாத ஞானசம்பந்தர், அப்பர் எங்குற்றார்? என்று கேட்க, சிவிகையைத் தூக்கி வரும் அப்பரும், உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்ததெய்தப் பெற்று இங்குற்றேன் என்றேன் என்றார். உடனே சிவிகையிலிருந்து இறங்கி, வயதில் மூத்தவரான அப்பரை வணங்கினார் திருஞான சம்பந்தரும் அப்பரும் சந்தித்த இடம் இன்றும் சம்பந்தர் மேடு என்று அழைக்கப்படுகிறது.

திருபூந்துருத்தியைத் தாண்டி வெள்ளாம்பரம்பூரையடுத்து வயல்களின் நடுவில் உள்ளது இந்த இடம். இங்கு சமீபத்தில் புதிதாக மண்டபத்துடன் கூடிய சிறிய ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் திருவையாறு பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் திருமாறன்.

சிதம்பரம் வீதிகளில் பல்லக்கில் சென்று கொண்டிருந்த உமாபதி சிவாச்சாரியாரைப் அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் (14ஆம் நூற்றாண்டு) பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் என்று அந்த பல்லக்கு ஊர்வலத்தைக் கேலி செய்தார்

‘வேதம் புதிது என்ற பாரதிராஜா இயக்கிய திரைப்படத்தில், பிராமணச் சிறுவன் ஒருவன், பல்லக்கில்’ அமர்ந்து வரும் சுவாமிகளிடமே ‘தங்களைச்சுமந்து வருபவர்களும் மனிதர்கள் தாமே. இது சரிதானா? என்று கேட்க, ‘சுவாமிகள் கீழே இறங்கி நடக்க ஆரம்பிப்பார். இதுபோல, நடந்த சம்பவத்தை பெரியபுராணம் சுட்டிக்காட்டியுள்ளது.

“சிதம்பரம் வீதிகளில் பல்லக்கில் சென்று கொண்டிருந்த உமாபதி சிவாச்சாரியாரைப் அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் (14ஆம் நூற்றாண்டு) பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் என்று அந்த பல்லக்கு ஊர்வலத்தைக் கேலி செய்தார். இது உமாபதி சிவாச்சாரியாரின் காதுகளில் விழுந்துவிட்டது. பட்ட கட்டை என்றால் பட்டுப்போன மரக்கட்டை. அதாவது மரத்தினால் செய்யப்பட்ட பல்லக்கைக் குறிப்பது. பல்லக்கின் முன்புறம் தீவட்டியைப் பிடித்துச் செல்வது வழக்கம். அதைத்தான் பகல் குருடு போகிறது பார் என்று கூறியுள்ளார். உமாபதி சிவாச்சாரியார் பிராமண தீட்சிதர். மறைஞான சம்பந்தரோ சூத்திரர். உமாபதி சிவாச்சாரியார் பல்லக்கிலிருந்து இறங்கி, மறைஞான சம்பந்தரின் காலில் விழுந்து வணங்கினார்” என்கிறார் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணன். “சித்தாந்தத்தை பற்றி பெரிதும் கவலைப்படாமல் சம்பிரதாயங்களில் கவலைபடுகிறார் தருமபுரம் ஆதீனம். காலத்துக்கு ஏற்ற பல மாற்றங்களுக்கு சம்மதித்துப் போகும் அவர், இந்த மாற்றத்தை ஏன் ஏற்க மறுக்கிறார்” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி முடிந்த பிறகு அரையர் சேவை செய்தவரை பல்லக்கில் கொண்டு போய் வீட்டில் விடும் பழக்கம் எதிர்ப்பு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னே நின்று விட்டதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். பல ஆதீனங்களில் பட்டண பிரவேசம் தற்போது நடப்பதில்லை. ஆனால், பழமையான சைவ மடங்களில் ஒன்றான தருபுரம் ஆதீனம், தனது மடத்தில் பட்டண பிரவேசம் பாரம்பரியமாக நடந்து வரும் நிகழ்வு என்கிறார்.

“பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் என சொல்லும் மடாதிபதிகள், தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தி இருக்கிறார்கள். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த கார்களில் பவனி வருகிறார்கள். தொலைபேசி, கைபேசி, கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? என்று கேட்கிறார். பக்தர்களுக்கு அருள் உரையாற்றும்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் மடாதிபதிகள் பயன்படுத்தும்போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.

“பல்லக்குத் தூக்குவது சனாதன மரபு. மறுப்பது ஜனநாயகம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சமய சம்பிரதாயங்களில் தலையிட வேண்டியதில்லை. இது மடம் சம்பந்தமாக நடந்து வரும் காரியம் அதில் அரசியல் எதற்கு என்று கூறுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், குருவுக்குச் செய்யும் பாரம்பரிய சம்பிரதாயத்தில் மனிதர்களைத் தூக்கச் செய்யாமல் காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்யலாமே என்று யோசனை கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

தருமபுரம் ஆதீனம், வருகிற 22ஆம் தேதி பல்லக்கில் பட்டணப் பிரவேசம் செய்வதற்கு போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும், ஆதீன சம்பிரதாயமா<, மனிதரை மனிதர்கள் சுமக்கும் மனித உரிமையா? எது முக்கியம் என்ற கேள்வி தொடர்கிறது.

நன்றி: inmathi.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here