“இந்து மதத்தில் ஜாதி பேதம் இல்லை” என மாநில பிஜேபி தலைவர் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.


ந்து மதத்தின் அடித்தளமே “ஜாதிபேதம்” ஒன்றே.இதை மறுத்துக் கூறுவது இந்து மதத்தை அவமதிப்பது போலாகும்.இந்துமதம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் நால் வர்ணமாகவும் ஜாதிகளாகவுமே பிரிக்கிறது. இதைப் பல பதிவுகளில் இதற்கு முன்பாக நூல்களின் தரவுகளோடு,அதிலும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள் வாயிலாக பதிவு செய்திருந்தோம்.

இந்து வைதீக சனாதனமானது,பிரபஞ்சத்தில் நட்சத்திரம், கல், மண், செடி, கொடி, மரம், விலங்கு, பறவை, பூச்சி, ஊர்வன, உலோகம், நதி, கடல், மனிதன், தேவர், அசுரர் தொடங்கி மருத்துவம், ஓவியம், நாட்டியம், சிற்பம் என எல்லாவற்றையும் நால் வர்ண ஜாதியாகவே பிரித்து வைத்துள்ளது.கழுத்தில் தலையில் அணியும் ருத்திராட்சமும் இதற்கு விதிவிலக்கல்ல.ஆம், ருத்திராட்சத்திலும் ஜாதி வர்ணம் உண்டு. இதை வியாஸரின் “ஶ்ரீ தேவி பாகவதம்” அருமையாக விளக்குகிறது. ருத்திராட்சம் தோன்றிய கதையிலிருந்து அதை யார் யார் அணியவேண்டும், அணியாமற் போனால் என்னென்ன சாபங்கள் பாவங்கள் உண்டு, ருத்திராட்சங்கள் எத்தனை வகை, அதை உடலில் எந்தெந்த இடங்களில் எத்தனை எண்ணிக்கையில் அணிவது, ருத்திராட்ச மூட்டையைச் சுமந்த கழுதை கயிலாயம் அடைந்தது, பஞ்சமா பாதகங்களைப் புரிந்தவனும் ருத்திராட்சத்தால் பரமகதி அடைவது என பல அரிய செய்திகளை “ஶ்ரீ தேவி பாகவதம்”விளக்குகிறது. உதாரணத்திற்கு, நாராயணர் எனும் தபஸ்வி நாரதருக்கு விளக்கும் பகுதியில் ஒரு சிலவற்றை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

“மகனே! (சிவன் ஷண்முகப் பெருமானிடம்)பூர்வத்தில் திரிபுரர் என்ற அசுரர்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாக இருந்தார்கள், அது மட்டுமல்ல திருமால் பிரமன் முதலிய தேவர்கள் அவர்களால் துன்பப்பட்டார்கள், அதனால் தேவர்களெல்லாம் என்னிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறினர். அவற்றைக் கேட்டதும் நான் வேறொரு சிந்தனையும் இல்லாமல் சகல தேவ ஸ்வரூமாகவும் மனோகரமாகவும் அக்கினியைப் போலச் சுடர்விட்டு எரிவதாயும் பயங்கர வடிவமாயும் சர்வ இடையூறுகளையும் அகற்றுவதாயும் அகோரம் என்ற பெயரையுடையதுமான மகாஸ்திரத்தை ஆயிரம் திவ்ய வருஷம் கண்மூடிச் சிந்தித்துப் பிறகு கண் விழித்தேன் அப்பொழுது என் மூன்று கண்களிலிருந்தும் நீர்த்துளி விழுந்தன. அதிலிருந்து மகா ருத்திராட்ச விருட்சங்கள் தோன்றின. ஷண்முகனே! என் ஆக்ஞையால் அனைவருக்கும் நன்மை ஏற்படுவதற்காக அவ்விருட்சங்களிலிருந்து முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் உண்டாயின. அவற்றில் வலக் கண்ணாகிய சூரிய விழியிலிருந்து உதித்தவை கபில நிறத்தோடு பன்னிரண்டு பேதமானவை. இடக்கண்ணாகிய சந்திர விழியிலிருந்து தோன்றியவை வெண்ணிறத்தோடு பதினாறு பேதமானவை நெற்றிக் கண்ணான அக்கினி விழியிலிருந்து தோன்றியவை கறுப்பு நிறத்தோடு பத்து பேதமானவை. இவற்றில் வெண்ணிறமுள்ளது பிராமண ஜாதியென்றும் செந்நிறழுள்ளது க்ஷத்திரிய ஜாதி என்றும் மிஸ்ர(கலப்பு) நிறமுடையது வைசிய ஜாதி என்றும், கருமை நிறமுடையது சூத்திர ஜாதி என்றும் வழங்கப்படும்.

உலகிலுள்ள பிரம்ம,க்ஷத்திரிய,வைசிய,சூத்திர என்ற நான்கு ஜாதியரும் தத்தமக்குரிய ருத்திராட்சங்களை அறிந்து அணியும் பொருட்டே அவ்வுத்திராட்சங்கள் முறையே வெண்மை,செம்மை,பொன்மை,கருமை என நான்கு நிறம் அமைந்த நான்கு ஜாதிகளாக விளங்குகின்றன.

வறுமையால் நலிபவன் ருத்திராட்ச மணியை பக்தி சிரத்தையோடு அணிவானே யானால் அவன் உலகையாளும் ராஜபோகம் துய்ப்பான், அதற்குப் புராணத்திலிருந்து ஒரு கதை சொல்கிறேன்.

கோசல தேசத்தில் தருமசீலனும் வேத வேதாந்தங்களை கற்றுணர்ந்தவனுமான கிரிநாதன் என்ற ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான், அவனுக்கு குணநிதி என்ற குமாரன் ஒருவன் இருந்தான், அவன் மன்மதனைப் போல அழகான உருவமும் இளவயதும் கொண்டவன். அவன் யாகஞ் செய்தவனாய் இருந்ததால் திக்ஷிதன் என்று வழங்கப் பட்டான். அவனது குருவான சுதிஷணன் என்பவருக்கு முக்தாவளி என்ற ஒரு பத்தினி இருந்தாள். அந்த குரு பத்தினியை கிரிநாதன் கட்டழகினாலும் இளமை மயக்கினாலும் மமதைச் செருக்காலும் மோகவேட்கை கொள்ள வைத்து சில காலம் அவளுடன் கூடிக் கலந்து இன்பம் அனுபவித்தான். பின்னர் குருவினிடத்திலுள்ள பயத்தினால் அவருக்கு விஷத்தைக் கொடுத்து அவரைக் கொன்று விட்டுப் பிறகு சிறிது கூட பயமில்லாமல் குரு பத்தினியான முக்தாவளியோடு கூடிக் குலாவிச் சுகித்து வந்தான். அதை அவனுடைய பெற்றோர் அறியலானார்கள்.அவனால் அவன் மோகாந்தகாரம் அடங்காமல் தன் தாய் தந்தையர் இருவருக்கும் விஷத்தைக் கொடுத்து கொலை செய்து விட்டு தன் கைப்பொருட்கள் அனைத்தையும் அழித்து விட்டுப் பிறகு அந்தணர்களுடைய வீடுகளில் திருட ஆரம்பித்தான், அது மட்டுமல்ல, மதுபானப் பிரியனாகி பெரும் குடிகாரனுமாகி ஒருவரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்தி மனம்போலத் திரிந்து கொண்டிருத்தான்,

அவனது செயலையெல்லாம் கேள்விப் பட்டு ஞானிகள் அருவருப்பு அடைந்து அவனைப்பயமுறுத்தி அந்த ஊரில் இருக்க விடாமல் துரத்தினார்கள். அவன் அந்த ஊரை விட்டுவிட்டு தன் மோகத்திற்குரிய குரு பத்தினி முக்தாவளியோடு ஒரு பெருங்காட்டிற்குச் சென்று அந்தக் காட்டின் வழியாகச் செல்லுப் பிராமணர்களை யெல்லாம் வழிமறித்து அவர்களின் கைப்பொருட்களைக் கொள்ளையடித்து சில காலம் வாழ்ந்து வந்தான். அப்போது அநேக யமதூதர்கள் ஒருபுறமும் சிவ கணங்கள் ஒரு புறமும் வந்து அவன் உயிரைக் கொண்டு போக முயன்றார்கள். அந்த சமயம் யம தூதர்கள் சிவ தூதர்களை நோக்கி “அந்த பாவி கிரிதாதன் என்ன புண்ணியத்தைச் செய்தான். அவன் உயிரைச் சிவ லோகத்திற்கு கொண்டு போக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு சிவ தூதர்கள் “யமகிங்கரர்களே! அவன் மடிந்து விழுந்த இடத்திற்குப் பத்து முழ தூரத்தில் ஒரு ருத்திராட்ச மரம் இருக்கிறதல்லவா?
அம்மரத்தின் அருகில் அவன் இறந்து விட்டதால் அவன் எப்படி பாவியாவான்? உங்களுக்கு ருத்திராட்சத்தின் சிறப்புகள் தெரிந்திருக்குமானால் இவன் உயிரை உங்கள் யமலோகத்திற்கு எடுத்துக்கொண்டு போக இங்கு துணிந்து வந்திருப்பீர்களா?” என்று சொல்லிவிட்டு மடிந்துபோன கிரிநாகனுக்குத் திவ்ய ரூபம் கொடுத்து அவனைத் திவ்ய விமானத்தில் ஏற்றிச் சென்று சிவ சந்நிதியில் கொண்டுபோய் இறக்கினார்கள். இவ்வாறு பாவத்தை நிவர்த்தி செய்து, பெரும் புண்ணியத்தை வழங்கவல்ல ருத்திராட்சத்தின் மகிமையை நாம் உனக்குச் சுருக்கமாகக் கூறினோம்”என்றார் சிவபெருமான்.

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here