”ஒரு ட்ரையல் பார்க்கட்டுமா சார்!”

வண்டியை வழக்கமாய் விடும் மெக்கானிக்கிடம் சர்வீஸ்க்கு விட்டிருந்தேன். எடுக்க போகும் பொழுது, அங்கு ஒரு சான்றிதழ் போல மெக்கானிக் தொங்கவிட்டிருந்தார்

என்னவென்று தூசி துடைத்து படித்த பொழுது, ஒரு பைக் காணாமல் போனதாக போலீஸ் தந்த ரசீது அது. என்னவென்று கேட்டேன்.

”யாரும் படிக்க மாட்டங்க! நீங்க கேட்கிறீங்க! நான் பழைய வண்டிகளை வாங்கி விற்பது உங்களுக்கு தெரியும் அல்லவா! அப்படி ஒரு ஆள் வந்து, ஒரு பல்சர் பைக்கை ட்ரையல் பார்க்கட்டுமா! என கேட்டார். போன ஆள் அப்படியே எஸ்கேப் ஆயிட்டான்!” என்றார்.

”அவனோட டாக்குமெண்ட்ஸ் உங்ககிட்ட இருக்கும் அல்லவா!” என்றேன்.

“போன் அடிச்சா எடுக்கல! ஆதாரில் உள்ள அயப்பாக்கம் முகவரியில் போய் பார்த்தால், ஆள் அங்கு குடியிருக்கவில்லை! பக்கத்து கடைக்காரர் ”வண்டியை எடுத்துட்டு போய் என்ன செய்வான் தெரியலை! ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடு! உனக்கு தான் நல்லது”ன்னு சொன்னார்! அந்த புகாரை பதிவு பண்ணி ரசீது வாங்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே! என ரெம்பவும் அலுத்துக்கொண்டார்.

“பணம் ஏதும் கேட்டாங்களா!” என்றேன்.

”நாலு மணிக்கு எஸ்கேப் ஆனான். இரவு பத்து மணிக்கு புகார் கொடுக்க போனேன். என்ன இப்ப வர்றே! என அந்த போலீஸ்காரம்மா என்கிட்ட கேட்கிறாங்க! அவனை தேடி அலைஞ்சேங்கன்னு விளக்கம் கொடுத்தேன். ரசீது கேட்டா, இரண்டு நாள் கழிச்சு வா! இரண்டு நாள் கழிச்சு வா! என தொடர்ந்து அலையவிட்டாங்க! ஒரு நாள், “எந்த ஆதாரமும் இல்லாம புடி! புடின்னு கேட்கிறேயே! எப்படி புடிக்கிறது?”ன்னு என்கிட்டயே அந்த போலீஸ்காரம்மா கேட்டாங்க! எனக்கு சிரிப்பு வந்திருச்சு! ஒரு வழியாக மூணு மாசம் கழிச்சு தான் ரசீதே கிடைச்சது!”

வண்டியை காணாம போனது ஒரு துயரம்னா, வண்டி காணாமல் போனதற்கு கம்ப்ளைண்ட் கொடுத்து, புகார் வாங்கிறது அத விட துயரமாப் போச்சு! இதை விட இன்னொரு துயரம் என்னான்னா? வண்டியை எடுத்துட்டு போன ஆளோட முகத்தை பார்க்கனும்னு இந்த தெருவில் சிசிடிவி எந்த வீட்டுல இருக்குன்னு போய் விசாரிச்சு, அந்த வீடியோ புட்டேஜை கேட்டு வாங்கினேன். ஒரு நாள் கழிச்சு, ஒரு போலீஸ்காரர் வந்து என்னைத் தேடி வந்து கேட்கிறார். ”முந்தா நேத்து இதே தெருவில் ஒரு வீட்டுல நகை, பணம் எல்லாம் திருடு போயிருக்கு! நீங்க எதுக்கு சிசிடிவி புட்டேஜை கேட்டீங்கன்னு” என்னை திருடன் போல கேட்டார். அது தான் இன்னும் துயரம்!

இந்த ட்ரையல் கதை கேட்டதும் எனக்கு மோடி தான் பளிச்சென நினைவுக்கு வந்து போனார். இதுநாள் வரைக்கும் காங்கிரசுக்கும், மற்றவர்களுக்கும் ஓட்டு போட்டீங்களே! எங்களுக்கு இந்த முறை ஓட்டு போடுங்க! நாங்க ட்ரையல் பார்க்கிறோம் என கேட்டார்.

ஆட்சி கிடைத்ததும், சிபிஐ, உச்சநீதிமன்றம், ரிசர்வ் பேங்க், பிஎம் கேர் பணம், தேர்தல் ஜனநாயகம் என இருக்கிற எல்லா பர்னிச்சரையும் உடைச்சது தான் ஞாபகத்துக்கு வந்தது.

சாக்ரடீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here