கோணங்கியை விசாரிப்போம் தோழர்களே !

அங்கம் மூன்று :

கோணங்கியின் பாலியல் கொடுமைப் பிரச்சினை பற்றி,  அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி,  அவர்கள் பக்கம் நிற்கின்றவர்கள் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் மேலே ஓரளவு விளக்கினோம்.பலரும் கோணங்கியைக்கண்டித்தனர்;   கண்டித்து கண.குறிஞ்சி, அமரந்தா, ஓவியர் மருது போன்றோர் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள்

” மீண்டும் நடவாதிருக்க என்ன செய்யவேண்டும் ” என்று பரிசீலிக்க முயன்று கூட்டறிக்கையையும் வெளியிட்டனர்  என்று பார்த்தோம்.

ஆனால்,  கோணங்கிக்காக   தானே ஆஜரான ஒரே வக்கீல்  ஜெ என்ற, ஜெயமோகன்   என்பது உங்களுக்குத் தெரியுமா ? அவர் ஓதியது பற்றி விவாதிக்காமல்  நம் விசாரிப்பு முழுமை பெறாது. அவர் டுவிட்டரில் போட்டதை முதலில் படியுங்கள்.

” ஆனால் ( இதில் ) பெரிய அதிர்ச்சி ஏதுமில்லை…” என்று  ஜெயமோகன் ஆரம்பிக்கிறார்.  பூமியில், நிலத்தில், மண்ணில் நின்றால்தானே  ஒருத்தனுக்கு அதிர்ச்சிகள் உறைக்கும் ? ” கலைஞனின் மனம் இருளுக்குள்ளும் ஒளிக்குள்ளும் மாறிமாறிச் செல்வது.அவனால் கட்டுப்படுத்தப்பட இயலாதது.  நுண் உணர்வு  என்பது கலைஞர்களிடம் ஒரு நோய்க்கூறாகவே ஆகக்கூடும். அவ்வியல்பைக் கருத்தில் கொண்டே அவனை, அவன் கலையை அணுகவேண்டும்.அதற்குமேல் சொல்ல ஏதுமில்லை,” என்று முடித்தார்.  அதேநேரம், ” … இதுவே பாமரனிடம் வெளிப்பட்டால்  ( அதாவது, இந்தப் பாலியல் வன்கொடுமை ) கடுமையாகத் தண்டிக்கவேண்டும்.  ஏனென்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல ; இலக்கியவாதியிடம் அவனுடைய படைப்புச் சக்தியின் மறுபக்கமாகவே அவன் வாழ்க்கை

( படைப்பு வாழ்க்கை ) உள்ளது. அதன்பொருட்டு அவன் மன்னிக்கப்படவேண்டும். ஏற்கப்படவேண்டும்  என  நான் சொல்லவில்லை. ஆனால்  அதன்பொருட்டு  அவன் பாமரர்களால்  வேட்டையாடப்படலாகாது. அப்புரிதல் சமூகத்தில்  ஒருசில பேரிடமாவது வேண்டும்….” என்று பச்சையாக  வர்க்க வெறுப்பை உமிழ்வதையும் ஒழுக்கக் கேட்டையும்  நாம் கவனிக்கவேண்டும். இதற்குத் தனியே விளக்கவுரை தேவையில்லை. பெரிய சமூகம் ,கலைஞனுக்கு எவ்வளவு பெரிய சலுகையை இவர் கோருகிறார்  !  வேறுவிதமாக நாம் இதையே  கூர்மையாக விவாதிக்கலாம். அதாவது,  இத்தனைப் பெரிய சலுகையை அனுபவிப்பவன் எவ்வளவு பெரிய சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் ?  மாறாக,  அவன் எப்படி வேண்டுமானாலும் நடப்பான்,  கொடுத்து வைத்தவன் என்கிறார்  ஜெயமோகன்.

அவன் வேறு பெரிய எதிர்பார்ப்பை வைக்கவில்லையாம்  ;

” தாங்கள்  வாழ்க்கையை அர்ப்பணித்து எழுதும் இலக்கியத்தில் இலக்கியவாதியாக அங்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் வந்து அமர்வதைக்கண்டு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறான். ” இது நியாயம்  அல்லவா என்று  கேட்கிறார் அவர்.  அதே  காரணத்தால்  அவன் மன்னிக்கப்பட வேண்டும்.  ஆனால், பாமரனோ அற்பப் பிறவி, அதனால் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெமோ. இது  நியாயமற்ற  வாதம் என்பது முதலில்  புரிகிறதா ?

ஆனால் ஆஸ்கார் ஒயில்டுக்கு ” அன்றைய  நீதிப்படி இரண்டு ஆண்டு கடும் உழைப்போடு சேர்ந்த சிறைவாசம் விதிக்கப்படுகிறது. ”  சமகாலத்தில் , இளம்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை  கலை/ கலைஞனின் தர்மப்படி  நியாயப் படுத்தியதால்  இயக்குநன் பெர்னார்டோ  பெர்டோலூச்சி இத்தாலியில் கண்டிக்கப்பட்டான்,  ஐந்தாண்டு  சினிமாத் துறையிலிருந்து  புறக்கணித்து ஒதுக்கிவைக்கப்பட்டான்.

இங்கேயோ  மமதை பிடித்த அகங்காரி ஆர்எஸ்எஸ் மகாமுனி  ஜெயமோகன்,  உழைப்பாளியை வசைபாடுகிறார்.  தப்பு செஞ்சானா, வெட்டு தலையை  என்று ஆவேசமாகச்  சாமியாடுகிறார் . அவரைப் பொறுத்தவரையில்,  கலைஞன் என்பவன் ( இங்கே கோணங்கி என்று படித்துக் கொள்க ) தனிப்பிறவி – தனிவார்ப்பு – தனிச்சிறப்பான உலோகம் – தனி ஜாதி !

” எழுதுகிறவன் தான் எழுதுகிறவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்கவேண்டும் ” என்றார் பாட்டாளிக் கலைஞன் மக்சீம் கார்க்கி. சிறந்தவன் என்றால் மக்களோடு கலந்து அவர்களுக்குப் பொறுப்பாகச் செயல்பட்டு வாழவேண்டும்.  அவன் முதலில் சமூகத்தில் வாழும்  உறுப்பினன். வேறு  எந்தச் சிறப்புச் சாதிப்பட்டமும்  அவனுக்குக் கிடையாது.  அவன் தவறு செய்தால் மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும். இந்த இடத்தில் ஜெயமோகன் சொல்கிற ஓர் குறிப்பை நீங்கள் மறக்கக்கூடாது.

” கோணங்கி எந்த ஊருக்குப் போனாலும் தான் சந்திக்கின்றவர்கள்  எந்த ஊர், என்ன சமூகம் என்ன சாதி என்று தெரிந்துகொண்டுவிடுவார் ”  என்பது ஜெமோ வாக்கு. அதாவது, தன் சாதி தன்  குடும்பம்  பற்றிய  கூந்தலையும் அவர் உதறிவிட்டே வருவார் என்பதையும்  அவரது  இந்த விசேஷப் பழக்கத்தையும் நீங்கள் மறக்காமல் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.  இப்போது சொல்லுங்கள், கார்க்கி சரியா, அற்பவாதம் வைக்கும் ஜெயமோகன் சரியா ?

” எங்க ஏரியா உள்ளே வராதே ! ” என எச்சரிக்கிறார் ஜெமோ. கோணங்கிக்குத்

” தண்டனை தேவையில்லை.  கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம்…” என்கிறார் ஜெமோ.  ” அதாவது, இன்று வந்துள்ள பொதுக் கண்டனமே ( அவருக்குப் )  பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். ( அவர் ) குடும்பத்தைச் சார்ந்தே செயல்படுபவர். இப்போது குடும்பச் சூழலில் இருந்து அந்நியமாகிவிடுவார்… அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும்.  மீண்டும் அவருக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கவேண்டும், ” என்பது ‘ ஜெ ‘ அருள்வாக்கு.

இக்கட்டமைப்பில் உழைப்பு, உற்பத்திப்பொருள் இரண்டிலிருந்தும்  அன்னியப்படும் பாமர உழைப்பாளி அடிமையாகிக்  கிடக்கவேண்டும்.  அவன் பாமரன், சிறப்புக் குணம் ஏதுமில்லாதவன்.  அவன் ‘ தப்பு ‘  செஞ்சா சும்மாவிடமாட்டாராக்கும் ஜெமோ !

கோணங்கிகள் போன்ற இலக்கிய பிரம்மாக்கள் தப்பு செய்தால் தண்டனை என்ன ?   எதுவும் கிடையாது ; அவாள் பிராயச்சித்தம் செய்தால் போதும் என்று முன்னொருகாலத்தில்   இருந்ததல்லவா ?. மற்றவன் தப்பு செய்தால்  தலைவெட்டு ,  பார்ப்பான் செய்தால் மொட்டை என்ற மயிர் வெட்டு, அது வருண – மனுநீதி ; இன்றைய நவீன  மனு ஜெமோ ஒருபடி மேலே போகிறார்.  பொதுக்கண்டனமே கலைஞனுக்குச் சாவு போல, அதைத் தாண்டி கோணங்கிக்கு  எதற்குத்தண்டனை,  அதனால்  கூடுதல் தண்டனை  எதுவும் தேவையில்லை.

ஒரே ஒரு ஆறுதல். நம்தரப்பு  மக்கள்  வாதத்தை  கவிதா பாரதி வைக்கிறார் கேளுங்கள் : ” பாதிக்கப்பட்டவர்…..( பாலியல் ) சுரண்டல் கொடுமைக்கு ஆளானவர் பற்றி ஜெமோ வாய் திறக்கவில்லையே, ஏன் ? ”

” யார்பக்கம் நிற்பது அறம்? குற்றவாளிக்குக் குறிவலிக்குமே  என்று அதை நீவிக் கொடுப்பது ஜெயமோகனுக்கு ஞானதத்துவ மரபு கற்றுக் கொடுத்த அறம். ”   கவிதா பாரதியின் வாதமே  அருமருந்து, வைதீகத்தின் வாய்மேல்  புத்தன் போட்ட சூடு போல!

இங்கே  ஒரு சிறுதகவல்.  சிரீ ( ஸ்ரீ )  என்றொரு சேனல். அதில்  “கோணங்கி பிரச்சினை பற்றி  “ஆர்எஸ்எஸ் தடியர்கள்/ மாமாக்கள்  சு.இராஜேஷ் ராவ், ஆர்.நவநீத்  என்று  இரண்டுபேர். உரையாடல் என்ற  பெயரில் அக்கிரகார  அரட்டைக் கிசுகிசு.  முழுக்க திராவிட  இயக்க,  கம்யூனிசச் செயல்பாட்டாளர்கள்  பாலியல்  வக்கிரம்  பிடித்தவர்கள், நடத்தை  கெட்டவர்கள் போன்ற அவதூறுகளை  அள்ளி வீசிவிட்டு,

” முற்போக்கு எழுத்தாளர் கோணங்கிமீது பாலியல் புகார், மௌனம் காக்கும் முற்போக்குகள் ” என்று சீண்டியிருக்கிறார்கள்.  ” புராணக் குப்பைகள் தொடங்கி சங்கரமட ஸௌந்தர்ய லஹரிகள் வரை ” அம்பலப்படுத்தி  நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை. அது வீண்வேலை.

அந்த அரட்டையில் ஓரிடத்தில்  ” ஜெயமோகன் சொன்னதுதான் ஆச்சரியமாக இருக்கிறது ” என்று, ஜெமோ முனிவரை   அவரது விஷ்ணுபுரம்  நாவலை ஸ்பான்ஸர் செய்து வளர்த்துவிட்டோம், அதுவும் இன்னொரு ஆபாச விவகாரமாகிறதே  என்ற பதற்றத்தோடு  திணறியிருப்பது  விபரீத வேடிக்கை. கேட்டுப்பாருங்கள் !

சிரீ சேனலில் விவாதித்த  இருவரும்  நாறிப் போன தேவ ஆத்மாக்கள்,  அதுவே   அவர்களது ஒழுக்கம், தர்மம் ;  நாம்  உழைப்பாளிகள், மனித உயிர்கள்,  நமது ஒழுக்கம் என்ன ? மேலே கட்டுரை முழுக்க விவாதிக்கப்பட்டதுதான்  நமது ஒழுக்கம். இது நம் பதிலடி.  இந்த அற்பஜீவிகளை  அடையாளம் காட்டுவதற்காக இங்கே பதிவிட்டோம். மீண்டும் தேவைப்படும்போது போட்டுத் தாக்குவோம்.

என்ன செய்யவேண்டும் ?

தோழர்களே, நமது  விசாரணைக்கு, பாட்டாளி ஒழுக்கம் என்ற அடித்தளம்  இருக்கவேண்டும் என்பதற்காகவே நீண்ட விவாதமாக முன்வைத்தோம். கோணங்கியின் பாலியல் அத்துமீறலை  ( அப்யூஸ் ) வன்கொடுமையை நாம் கண்டிக்கிறோம்; பாதிக்கப்பட்ட  மணல்மகுடி மற்றும் பிற இளைஞர்களின் பக்கம் நின்று நியாயத்துக்காகப்  போராடுவோம் ;  பாதிக்கப்பட்டவர்களின் கூட்டறிக்கையில் ” ( இந்தச் ) சிக்கல்களை உடனடியாகப் பேசுவதற்கும் வழிநடத்துவதற்கும் கலை இலக்கிய வெளியில்  ஆளுகைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்….” என்று குறிப்பிடப்படுவது போன்று  செயலுக்கான முனைப்பில் நமது பங்கைக் கொடுப்போம் !

  • பீட்டர்

முந்தைய பதிவுகள்

பாகம் 1 – கோணங்கியை விசாரிப்போம் தோழர்களே ! 

பாகம் 2 – கோணங்கியை விசாரிப்போம் தோழர்களே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here