”உப்பு பெறாத விசயத்தை பேசிகிட்டு…” என யாராவது சொன்னால் அவர்களுக்கு நிச்சயம் உப்பின் வரலாறு தெரியாது என நிச்சயம் சொல்லலாம்.

உப்பு எதற்கெல்லாம் பயன்படுகிறது?

”உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்பது புகழ்பெற்ற சொலவடை. சமையலில் சகலத்துக்கும் பயன்படுத்துகிறோம். பழரசம் தயாரிக்கும் பொழுது கூட கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால், இனிப்பின் சுவையை கூட்டித் தருகிறது. நாம் அன்றாடம் துவைக்கும் சோப்பை தயாரிப்பதற்கு, மருந்து தயாரிப்பதற்கு, விவசாய உரத்திற்கு, ஆலைகளில் சில பொருட்களை தயாரிப்பதற்கு என உப்பின் பயன்பாட்டை நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

நமது பண்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகளில் மக்கள் உப்பை பயன்படுத்துகிறார்கள். வீடு கட்ட துவங்கும் பொழுது, ’கெட்ட ஆவிகள்’ புகாமல் இருக்க , புதுவீடு புகும் பொழுது, ’கடவுளுக்கு’ நேர்த்திக்கடனாக உப்பை படைக்கிறார்கள்.

சங்க காலத்தில் உப்பு

சங்க காலத்தில் உப்பு அரிதான பொருளாக இருந்திருக்கிறது. வறுமையின் கொடுமையை உணர்த்த, ”உப்பில்லாமல் உண்பது” என எழுதியிருக்கிறார்கள். அந்த காலத்தில் உப்பு தயாரித்தவர்கள் பரதவர்கள். அதை வாங்கி மக்களிடம் விநியோகித்தவர்களை உமணர்கள் என அழைத்துள்ளனர். உப்பு விற்ற பெண்களை “உமட்டியர்” என்கிறது சிறுபாணாற்று படை.

உப்பின் மீது வரி

எல்லாவற்றிக்கும் உப்பு தேவை. அப்ப அதற்கு போடு வரி என ஏழாம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவ மன்னர்கள் காலத்தில் இருந்தே உப்பின் மீது வரி போட்டு மக்களை வாட்டியிருக்கிறார்கள். ஒரு படி உப்புக்கு ஒரு படி நெல் என சரிக்கு சமமாக மக்களிடம் விற்பனை செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 1805ல் நுழைந்த பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். வகை தொகையில்லாமல் உப்பின் மூலம் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆட்சியில் இருந்த 1947வரை உப்பு வரியாக மட்டும் கொள்ளையடித்த தொகை மட்டும் ஆண்டுக்கு 9 கோடி. அந்த காலத்தில் ஒரு நீதிபதியின் மாதச் சம்பளம் ரூ.1000 என்கிறார்கள். அப்படியென்றால், இது எவ்வளவு பெரியதொகை என புரிந்துகொள்ளலாம்.

இப்படி கொள்ளையடித்ததால், பெரும்பாலான ஏழை மக்கள் அரிசி, பருப்பு வாங்கவே சிரமப்படும் வேளையில் உப்பு இல்லாமலே தான் சாப்பிட்டிருப்பார்கள் என நிலைமையில் இருந்து புரிந்துகொள்ளமுடியும். சரி தொலையுது! நாமே உப்பை காய்ச்சி பயன்படுத்தலாம் என்றால்… சட்டத்திற்கு புறம்பாக உப்பைத் தயாரித்தால்… ”ஆறு மாதம் சிறைதண்டனை. ரூ. 500 ரொக்கம் தண்டம். இரண்டையும் சேர்த்து கூட விதிக்கப்படும்” என அறிவித்திருக்கிறார்கள். உப்பளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசை பாதுகாப்புக்கு நிறுத்தியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பு உப்பு விற்றவர்கள் குறவர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, மற்றவர்களிடம் உப்பு விற்கும் வியாபாரத்தை கைமாற்றிவிட்டார்கள். அரசின் உத்தரவை எதிர்த்து உப்பு தயாரித்த குறவர்களை முத்திரை குத்தி குற்ற பரம்பரையாக்கியிருக்கிறார்கள்.

உப்பு என கேட்டதற்காக தலித் அடித்தே கொலை

சாதிய வேறுபாடுகள் ஆதிக்கம் செலுத்திய இந்திய சமூகத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட உப்பு என்ற சொல்லிலும் பயன்படுத்தியுள்ளனர். அம்பேத்கர் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள்

“மலபாரில் உள்ள ஒத்தப்பாலம் என்ற இடத்தில் ஈழவ சாதியைச் சேர்ந்த சிவராமன் என்ற 17வது இளைஞர், சாதி இந்து ஒருவரின் கடைக்குச் சென்று உப்பு வேண்டும் என்று கேட்டார். அவர் ‘உப்பு’ என்ற மலையாள வார்த்தையைப் பயன்படுத்தினார். மலபாரில் உள்ள வழக்கப்படி ’உப்பு’ என்ற சொல்லைச் சாதி இந்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அந்த இளைஞர் ஹரிஜன் என்பதால் அவர் ’புளிச்சாட்டன்’ என்று தான் கேட்டிருக்கவேண்டும். இதனால் கோபமடைந்த உயர்சாதிக் கடைக்காரர், சிவராமனை பலமாக அடித்ததால் அவர் இறந்து போனார்”

உப்புச் சத்தியாகிரகம்

பிரிட்டிஷார் உப்பில் கொள்ளையடிக்கிறார்கள் என மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காங்கிரசு கட்சி இதை எதிர்க்கவேண்டும் என விவாதம் எழுந்த பொழுது, வருமான வரியை உயர்த்தப் போவதாக பிரிட்டிஷார் யோசித்த பொழுது, காங்கிரசில் ஒரு பிரிவினர், வேண்டுமென்றால் உப்பின் மீதான வரியை ஏற்றிக்கொள்ளுங்கள் என அயோக்கியத்தனமாய் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

1923ல் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த சிங்காரவேலர் தாங்கள் உருவாக்கிய கட்சியின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உப்பு வரி ஒழிப்பு என்பதையும் வைத்திருந்தார்கள்.

பின் வந்த ஆண்டுகளில் சிவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தை காந்தி தலைமையிலான காங்கிரசு துவக்கியது. தம் தேவைக்கான உப்பை மக்களே தயாரித்துக்கொள்ளலாம் என அறிவித்தார். கால்நடையாக உப்பு எடுக்கப் போவதாக 1930 ஏப்ரல் 6ல் காந்தி போராட்டம் அறிவித்தார்.

இந்தப் போராட்டத்தில்… தமிழ்நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாய் கலந்துகொண்டிருக்கிறார்கள். நாகையில் உள்ள உப்பளம் நோக்கி மற்ற மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள நடை பயணம் சென்றவர்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என்பது பிரிட்டிஷ் அரசின் கடுமையான உத்தரவு. உத்தரவையும் மீறி மக்கள் ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் முன்னாடியே போய் சாப்பாடை கட்டி வைத்துவிட்டு, நடை பயணம் போகிறவர்களிடம் மரத்தில் உள்ள உணவு குறித்து ரகசியமாய் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

உப்புக்கான போராட்டத்தை தடுக்கும் போலீசை கண்டிக்கும் விதமாக நாவிதர்கள் ”இனி அவர்களுக்கு சவரம் செய்யமாடோம்” என அறிவித்திருக்கிறார்கள். பதினாறு வயதுடைய வைரப்பன் என்ற நாவிதர் ஒரு போலீஸ்காரனுக்கு சவரம் செய்ய மறுக்க, அவரை அடித்து, ஆறு மாதம் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். அவரின் உறுதி காரணமாக அவருக்கு நாகை மாவட்டதின் வேதாரண்யத்தில் நினைவுத்தூண் அமைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் இருக்கிறது.

உப்பளகங்களும் தொழிலாளர்களும்

இந்தியா ஆண்டுக்கு 300 மில்லியன் டன் உப்பு உற்பத்தியில் உலகத்தில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. குஜராத்தில் 79%யும், தமிழகத்தில் 10%யும், இராஜஸ்தானில் 9%யும் உப்பு தயாரிக்கிறார்கள். குஜராத்தில் கணிசமான அளவு தயாரிப்பதால், குஜராத்தில் உப்புத்துறைக்கு தனி அமைச்சகமே உருவாக்கியிருக்கிறார்கள். நவீன உற்பத்தி முறையை பின்பற்றுகிறார்கள். தமிழகத்திலும் நவீன உற்பத்தி முறையை பயன்படுத்தவேண்டும் என கடந்த வாரம் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியிருக்கிறார். ஆனால் தமிழக உப்பு உற்பத்தியாளர்களுக்கு வங்கிகளிலிருந்து உரிய கடன் வசதி கிடைப்பதில்லை என புலம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்: சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது || நூல் அறிமுகம்

தமிழகத்தில் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் உப்பைத் தயாரிக்கிறார்கள். இலட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியிருக்கிறார்கள். அதிகப்பட்ச சம்பளமாக ஆண்களுக்கு ரூ. 500யும், பெண்களுக்கு ரூ. 400யும் தினக்கூலியாக தருகிறார்கள். ஞாயிறு வேலை கிடையாது. சம்பளமும் கிடையாது. வருடத்திற்கு மூன்று மாதம் மழைக் காலங்களில் வேறு வேலை தேடி, கிடைத்தவரை செய்கிறார்கள். அந்த காலத்தில் எந்த உதவித் தொகையும் தருவதில்லை.

உப்பு என்பது கண்ணாடியைப் போல, உடல் முழுவதும் கீறும் தன்மையுடையது. உப்பு வயல்களில் வேலை செய்யும் பொழுது உரிய பாதுகாப்பு உடைகள் கிடையாது. காலை 5 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை வேலை. கடுமையான வெயிலில் வேலை செய்யும் பொழுது, போதுமான குடிநீர் குடிக்கவேண்டும். ஆனால் போதுமான குடிநீர் தருவதில்லை. எங்கும் பார்த்தாலும் உப்பின் வெண்மை. வெயில் பட்டு இன்னும் மினுமினுக்கும். ஆகையால் கண்கள் கடுமையாக பாதிக்கும். பாதிக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காக கருப்பு கண்ணாடி அணியவேண்டும். நிர்வாகம் தருவதுமில்லை. அப்படியே அபூர்வமாய் தந்தாலும் விழிப்புணர்வு இல்லாததால் தொழிலாளர்கள் அணிவதுமில்லை.

தமிழக உப்பளகங்கள் கடலில் இருந்து நீர் எடுப்பதில்லை. ஏனென்றால் கடலில் உப்பின் அடர்த்தி குறைவு. அதனால் போர் போட்டு அல்லது கிணற்றில் இருந்து மோட்டார் வழியாக நீர் எடுக்கிறார்கள். ஆகையால் மின்சார செலவு இருக்கிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை மிகவும் அதிகப்படுத்திவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து உப்பை அகற்றியதால், 1800 டன் உப்பு இருந்தால் மட்டுமே ரயிலில் எடுத்துசெல்லமுடியும் என்ற நிலை இருக்கிறது.

குஜராத்திலோ நேரடியாக கடல் நீரை பயன்படுத்துகிறார்கள். அதனால் மின்சார செலவு குறைவு. குஜராத்தில் தொழிலாளர்களின் சம்பளம் தமிழகத்தை விட இன்னும் மோசம். திறன் ஊழியருக்கே (Skilled) ஒரு நாளைக்கு ரூ. 371.30 தான் சட்டப்பூர்வமாக தீர்மானித்திருக்கிறார்கள். நடைமுறையில் அவ்வளவு தருவார்களா என நிச்சயம் சொல்வதற்கில்லை. உப்பு உற்பத்தி அதிகம் என்பதால், ரயிலிலும், கப்பலிலும் உப்பை கொண்டுவருகிறார்கள். குஜராத் அரசும் உப்புத் தொழிலுக்கு சலுகைகள் தந்து ஆதரவு தருகிறது. விளைவு, தமிழக உப்பை விட, குஜராத் உப்பின் விலை குறைவாக சந்தையில் கிடைக்கிறது. தமிழகத்தில் உப்பு விலை உயர்ந்துவிட்டது என குஜராத்தில் இருந்து 27500 டன் உப்பை குஜராத்தில் இருந்து 2019 நவம்பரில் வரவழைத்தார்கள்.

தமிழகத்தில் உப்புத் தொழிலை நம்பி நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், உப தொழில்களில் நான்கு லட்சம் தொழிலாளர்களும் என மொத்தம் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் நம்பி வாழ்கிறார்கள். இலாபம் குறைந்து கொண்டே வருவதால், மெல்ல மெல்ல தமிழகத்தில் உப்பு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. தொழிலை நவீனப்படுத்த சொல்லும் தமிழக அரசு அதற்கேற்ப மான்யங்களை, கடன் வசதிகளை, வங்கிகளின் வழியே ஏற்பாடு செய்வதற்கான ஆக்கப்பூர்வ வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

உப்பு குறித்த அத்தனை தகவல்களையும் தலைப்பு வாரியாக அருமையாக தொகுத்து தந்திருக்கிறார் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன். உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் எழுதிய ”கரிப்பு மணிகள்” (1978) நாவலிலும், எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் எழுதிய ”உப்பு வயல்” (1995) நாவலிலும், எழுத்தாளர் தமிழ்ச்செல்வி எழுதிய ”அளம்” (2002) நாவலிலும் விரிவாக பதிவு செய்துள்ளனர்.

அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.
பக்கங்கள் : 154
விலை : ரூ. 190
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here