தோழர் Dhinakaran Chelliah அவர்கள் எழுதிய “நீங்கள் நான்காவது கணவரா” என்கிற இந்தப் புத்தகம் ஒரு அரிய வகை படைப்பாகும்.

காலம் காலமாக நம் திருமணங்களில் நடத்தப்படும் சடங்கு, சம்பிரதாயங்களையும், அப்போது சொல்லப்படும் மந்திரங்களையும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளையும் இவ்வளவு எளிதாக புரியும்படி யாரும் எழுதியதில்லை. வாழ்த்துக்கள்.

இவையெல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்று விளக்கி எழுதியிருக்கிறாரா என்று கேட்டால், அதான் இல்லை. மந்திரங்களையும், அவற்றிற்கான விளக்கங்களையும் போதிய தரவுகளோடு (15, 20 மிக பழமையான புத்தகங்களை, தேடி, ஆராய்ந்து) கொடுத்துவிட்டு நீங்களே சிந்தியுங்கள் என்று நம்மை விட்டுவிடுவதுதான் அவருடைய சாதுர்யம்.

நூறு வருடங்களுக்கு முன்னாள் வேத வித்தன்னர்கள் என்று பலராலும் போற்றப்பட்ட, அன்றைய காலகட்டத்தில் தொடங்கி சமீப காலம் வரை பார்ப்பனர்களால் கொண்டாடப்பட்ட பலரது புத்தகங்களிருந்து பெறப்பட்ட அந்த மந்திரங்களுக்கான உண்மையான பொருளை அப்படியே அழகாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர். அதை இன்று உள்ள இளைஞர் சமுதாயம் படித்தால், அவர்கள் பார்ப்பன இளைஞர்களாகவே இருந்தாலும் சரி, இதையா நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள் என்று முகத்தை சுழிப்பது உறுதி.


இதையும் படியுங்கள்: மரப்பாலம் – நூல் அறிமுகம்!


குழந்தை திருமணம், பெண் வயதுக்கு வருமுன் கட்டாய திருமணம், வயது வந்தபின் திருமணம் செய்யும் மூன்று வர்ணத்தை சேர்ந்த பெண்களும், ஆண்களும் சூத்திரர் ஆவர், என்பதையெல்லாம் படிக்கும் போது, காலமெல்லாம் பெண்ணை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களது குரூர எண்ணம் வெளிப்படுகிறது.

அடிப்படையில் சாஸ்திர சம்பிரதாயம் என்ற பெயரில் மக்களை பயமுறுத்தி, ஒரு ஆணாதிக்க கட்டமைப்பை எளிதாக உருவாக்க, இவையெல்லாம் இந்து சனாதனத்தால் வரையறைக்கப்பட்ட சூழ்ச்சியாகவே தெரிகிறது.

உங்களுக்கு இந்த சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் நண்பர்களே, எல்லோரும் இந்தப் புத்தகத்தை நிச்சயம் ஒரு முறை படிக்க வேண்டும்.

நம்பிக்கை இல்லாவிட்டால் ஏன் நம்பிக்கை இல்லை என்பதற்கான கொள்கை பிடிப்பாடு உறுதியாகும்.

ஒரு வேளை நம்பிக்கை இருந்தால், இந்த வைதீகப் புரோகிதர்கள் சாஸ்திரிய திருமணம் என்ற போர்வையில் என்னதான் செய்கிறார்கள் என்பதை நன்கு அறிந்துவிட்டு செய்துக்கொள்ளுங்களேன், உங்களுக்கு அதில் உடன்பாடு இருந்தால்.

ஆசிரியருக்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

புத்தக விலை ரூ 50.
நன்செய் பிரசுரம்.

தோழர் Vasu Sumathi அவர்களின் விமர்சனப் பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here